தென் ஆப்ரிக்க மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், ஒரு “டுவென்டி-20′ மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், இன்று செஞ்சுரியன், சூப்பர் ஸ்போர்ட் ஸ்பார்க் மைதானத்தில் துவங்குகிறது.
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள இந்தியா (129), தென் ஆப்ரிக்க (116) அணிகள் மோதும் தொடர் என்பதால், இத்தொடர் உலகளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, தொடர் துவங்கும் முன்பே இந்திய, தென் ஆப்ரிக்க அணிகளின் பயிற்சியாளர்கள் கிறிஸ்டன்-வான் ஜில் இடையிலான வார்த்தை போர் அதிக “டென்ஷனை’ கிளப்பியுள்ளது.
எகிறும் ஆடுகளம்:
இந்திய அணியை பொறுத்தவரை, தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 12 டெஸ்டில், 5ல் தோற்று, ஒன்றில் மட்டுமே (2006, ஜோகனஸ்பர்க்) வென்றுள்ளது. 6 போட்டி டிரா ஆனது. அதிகமாக “பவுன்ஸ்’ ஆகும் ஆடுகளங்கள் உள்ள தென் ஆப்ரிக்காவில், ஒரு பயிற்சி போட்டியில் கூட பங்கேற்காமல் இன்று நேரடியாக இந்திய அணி களமிறங்குகிறது.
பேட்டிங் பலம்:
பேட்டிங்கில் வழக்கம் போல அதிரடி வீரர் சேவக்குடன் சமீபத்தில் பார்மிற்கு திரும்பிய காம்பிர் இணைந்து நல்ல துவக்கம் தரக்காத்திருக்கிறார். மிடில் ஆர்டரில் டிராவிட், பேட்டிங் ஜாம்பவான் சச்சின், லட்சுமண், ரெய்னா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றும் தோனி, உலக கோப்பை தொடருக்கு முன்பாக, ரன்குவிக்கும் வழியை கண்டுகொண்டால் நல்லது.
சந்தேகத்தில் ஜாகிர்:
பவுலிங்கில் ஜாகிர் கான் காயம் இன்னும் சரியாகாத நிலையில், ஸ்ரீசாந்தும் கணுக்காலில் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஒருவேளை ஜாகிர் கான் இடம்பெறாத பட்சத்தில் இஷாந்த் சர்மாவுடன் உனாட்கட், <உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறலாம். சுழற் பந்து வீச்சை வழக்கம் போல ஹர்பஜன் சிங் கவனித்துக் கொள்ளலாம். இவருடன் தேவைப்பட்டால் பிரக்யான் ஓஜா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி தயார்:
போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,”” ஏற்கனவே இங்குள்ள ஆடுகளங்களில் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வீரர்கள் விளையாடியுள்ளனர். இதனால், எங்கள் வீரர்களுக்கு இந்த மைதானங்கள் புதிதல்ல. இதற்கு முன் இங்கு என்ன நடந்தது என்பது பற்றி கவலையில்லை. இந்த தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம்,” என்றார்.
ஆம்லா நம்பிக்கை:
தென் ஆப்ரிக்க அணியில் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருப்பவர் ஹாசிம் ஆம்லா. கடந்த முறை இந்தியா வந்து போதும் சரி, buy Amoxil online சமீபத்திய பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சரி பல சதங்களை அடித்து மிரட்டினார். இவர் மீண்டும் சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது. இவருடன் கேப்டன் ஸ்மித், “ஆல் ரவுண்டர்’ காலிஸ், டிவிலியர்ஸ் போன்றவர்களை, அவர்களது களத்தில் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல.
மிரட்டும் கூட்டணி:
வேகப்பந்து வீச்சு தான் தென் ஆப்ரிக்க அணிக்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. வேகத்துக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது நிலையில், ஸ்டைன் மற்றும் ஆல்பி மார்கல் கூட்டணி இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது உறுதி. இவர்களுடன் பார்னலும் மிரட்ட காத்திருக்கிறார்.

மழை வாய்ப்பு

முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. செஞ்சுரியனில் இன்று மழை வருவதற்கு 50 சதவீதம் வாய்ப்புள்ளது. தவிர, அடுத்த இரு நாட்கள் மட்டும் வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். கடைசி இரண்டு நாட்களில் மீண்டும் மழை வரும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முதல் முறை

செஞ்சுரியன் மைதானத்தில் இந்திய, தென் ஆப்ரிக்க அணிகள் முதல் முறையாக மோத உள்ளன.

50வது சதம் நோக்கி சச்சின்

இந்திய வீரர் சச்சின் இதுவரை 174 டெஸ்ட் போட்டியில் விளையாடி, 49 சதம், 59 அரைசதம் உட்பட மொத்தம் 14,366 ரன்கள் எடுத்துள்ளார். சிறப்பான பார்மில் இருந்த இவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 50 வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 போட்டிகளில் மொத்தமே 126 ரன்கள் மட்டுமே எடுத்தார். இம்முறை, தென் ஆப்ரிக்காவில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை சச்சின் படைக்கலாம்.

டிராவிட் சாதனை

முதல் தர போட்டிகளில் 200 கேட்ச் பிடித்து சாதித்துள்ள டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 199 கேட்ச் பிடித்துள்ளார். இன்று தனது 148வது டெஸ்டில் பங்கேற்கும் டிராவிட், 200 வது “கேட்ச்’ என்ற மைல்கல்லை டிராவிட் எட்டுவார் எனத் தெரிகிறது.
* காம்பிர் மேலும் 8 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 3 ஆயிரம் ரன்களை எட்டலாம்.

யாருக்கு அதிகம்

இரு அணிகளும் இதுவரை 24 டெஸ்டில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 6, தென் ஆப்ரிக்கா 11 போட்டிகளில் வென்றுள்ளன. 7 போட்டி “டிரா’ ஆனது.
* கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில், இரு அணிகளும் தலா 2 ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
* கடைசியாக நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும், 1-1, 1-1 என்ற கணக்கில் டிரா ஆகியுள்ளது.
* தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி அதிகபட்சமாக 414 ரன்கள் (கேப்டவுன், 2007) எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 563 ரன்கள் (புளோம்போன்டீன், 2001) எடுத்துள்ளது.
* குறைந்த அளவாக இந்திய அணி, டர்பனில் (1996) 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா, 84 ரன்களுக்கு (ஜோகனஸ்பர்க்) சுருண்டுள்ளது.
* பவுலிங்கில், தற்போதைய வீரர்களில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 8 போட்டிகளில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், 32 (7 போட்டி) விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

சச்சின் “டாப்’

இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் சச்சின், 22 போட்டிகளில் 1415 ரன்கள் (5 சதம், 5 அரைசதம்) எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் இந்தியாவின் சேவக் 1162 ரன்கள் (12 போட்டி, 5 சதம், 1 அரைசதம்), டிராவிட் 1132 ரன்கள் (18 போட்டி, 2 சதம், 5 அரைசதம்) எடுத்துள்ளனர். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (1087) நான்காவது இடத்தில் உள்ளார்.

விதிப்படி தான் நடக்கும்

டெஸ்ட் அரங்கில் தனது 50 வது சதம் குறித்து இந்திய வீரர் சச்சின் கூறுகையில்,”” நான் எப்போதும் விதியை நம்புபவன். எனது 50 வது சதம் எப்போது நிறைவேறும் என்று உள்ளதோ, அப்போது அது நடக்கும். இதைக்குறித்து அதிகமாக நினைத்துக்கொண்டு இருப்பதில்லை. தற்போதைக்கு போட்டிக்கு தயாராவது தான் எனது இலக்கு. பொதுவாக ஜோகனஸ்பர்க் மைதானம் உயரமான இடத்தில் இருப்பதால் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் இங்கு கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும். இந்த சூழ்நிலைக்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வது தான் மிகவும் முக்கியம். இதற்காகவே, முன்னதாக வந்து நீண்ட பயிற்சியில் ஈடுபட்டோம்,” என்றார்.

ஜாகிர் கான் சந்தேகம்

முதல் டெஸ்டில் ஜாகிர் கான் பங்கேற்பது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,”” பவுலிங் பிரிவுக்கு எப்போதும் தலைமை ஏற்கும் ஜாகிர் தான் எங்களது முக்கிய பவுலர். எந்தவகையான ஆடுகளத்திலும் அசத்துவார். விரைவில் துவங்கும் உலக கோப்பை தொடரை கணக்கில் கொண்டு, அவர் விஷயத்தில் “ரிஸ்க்’ எடுக்க தயங்குகிறோம். ஒருவேளை இன்று ஜாகிர், விளையாடவில்லை எனில் உனாட்கட், <உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறலாம். இருப்பினும், போட்டி துவங்கும் போது தான் இறுதி முடிவெடுக்க முடியும்,” என்றார்.

Add Comment