சி.பி.ஐ., சோதனை : திருப்பத்தை ஏற்படுத்திய ராஜா டைரி

அரசியல் தரகர் நிரா ராடியா, ஹவாலா மூலம் பணப் பட்டுவாடா செய்பவர் என்ற குற்றம் சாட்டப்பட்ட ஜெயின் சகோதரர்கள், “டிராய்’ முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் வீடுகள் உட்பட, டில்லியில் ஏழு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த வாரம் ராஜா வீட்டில் நடந்த சோதனைகளின் போது, சிக்கிய டைரிகள் இவ்விவகாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், “2ஜி’ விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளிப்படுத்த, மத்திய அரசு ஆயத்தமாகி விட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவின் டில்லி வீட்டிலும், அவரது நெருங்கிய நண்பர்கள், சகாக்கள் வீடுகளிலும், கடந்த வாரம் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்து, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த முறைகேடுகளை வெளிப்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளாலும், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையும் தொடர்ந்து, இந்த சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“2 ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் டில்லியில் ஏழு இடங்கள், தமிழகத்தில் 27 இடங்கள் என நாடு முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் தெற்கு டில்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ராடியாவின் பண்ணை இல்லத்தில் குவிந்தனர். கனாட் பிளேஸ் அருகே உள்ள பாரக்கம்பா ரோட்டில் உள்ள அவரது வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலுவலகத்திலும், அதே சமயத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனைகளை துவங்கினர். ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய பிறகு, ராடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்தனர். டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் அலுவல்களை கவனித்து வரும் ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் வருமானவரித் துறையினால், “டேப்’ செய்யப்பட்டு, அந்த உரையாடல்கள் மூலம் டில்லி அரசாங்கம் மற்றும் மீடியா வட்டாரங்களில் ராடியா எவ்வளவு வலிமையாக இருந்தார் என்பது தெரிய வந்தது. கடந்த 2009 பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு, மத்திய அமைச்சரவையில் ராஜாவுக்கு தொலைத்தொடர்பு இலாகா வாங்கி கொடுத்ததில், ராடியாவிற்கு பங்கு இருந்தது என்பது இந்த உரையாடல்களின் மூலம் தெரிய வந்தது.

கடந்த வாரம் ராஜா வீட்டில் நடந்த சோதனைகளின் போது, சிக்கிய டைரிகளின் மூலம் ராஜாவுக்கு, ஜெயின் சகோதரர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரிய வந்தது. ஜெயின் சகோதரர்கள் ஹவாலா மூலம், வெளிநாடுகளில் பணப்பட்டு வாடா செய்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ராஜா வீட்டில் கைப்பற்றிய டைரிகள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான், தற்போது ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமாக டில்லி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நடந்து வரும் விசாரணையில் இது முக்கிய திருப்பம் என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.ஐ., அதிகாரிகள், மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரதீப் பைஜாலின் நொய்டா வீட்டிலும், நேற்று சோதனை நடத்தினர். பைஜால், 1966ம் ஆண்டு “பேட்ச்’ ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மத்திய அரசின் செயலர் பதவியை வகித்தவர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் நடந்த போது, “டிராய்’ தலைவராக இருந்தவர். பணியிலிருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற பின், ராடியாவின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். டில்லி சாவ்ரி பஜாரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிறுவனம் மூலம் பணப் பரிமாற்றம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்று டில்லி மற்றும் சென்னையில் நடந்த சி.பி.ஐ., சோதனையில், 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஆய்வு: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள மகேஷ் ஜெயினின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் அந்த சோதனையில் இணைந்து ஈடுபட்டிருந்தனர். ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு பணப் பட்டுவாடா செய்து வருவதாக மகேஷ் ஜெயின் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நேற்று நடந்த சி.பி.ஐ., சோதனையின் போது, மேலும் சில இடங்களிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா அண்ணன், அக்கா வீட்டில் சிக்கியது என்ன? முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின், திருச்சியிலுள்ள அண்ணன் மற்றும் அக்கா வீட்டில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்து சென்றனர். ராஜா, அவரது பினாமியாக செயல்பட்ட சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலரின் வீடுகள், நிறுவனங்களில், கடந்த 8ம் தேதி சி.பி.ஐ., அதிரடியாக சோதனை நடத்தியது. ராஜாவின் பர்சனல் டைரி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சி.பி.ஐ., வசம் சிக்கியுள்ளது. அந்த டைரியில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக யார், யார் பலனடைந்தனர், ராஜாவின் பினாமிகள் யார், அவர்களுக்கு “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வாங்கிய நிறுவனங்களில் என்ன பங்கு என்பது குறித்த விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று ராஜா தொடர்புடைய சிலரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர். திருச்சி பெரியார் நகரில் உள்ள ராஜாவின் அக்கா விஜயாம்பாள் வீட்டிலும், திருவானைக்கோவில் சிவராமன் நகரில் உள்ள அவரது அண்ணன், சென்னை அண்ணா பல்கலையில் பருவநிலை மாற்றம் ஆய்வுத்துறை இயக்குனராக உள்ள ராமச்சந்திரன் வீட்டிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று காலை 8.50 மணிக்கு, ராஜாவின் அக்கா விஜயாம்பாள் வீட்டுக்கு சென்னையை சேர்ந்த இரண்டு சி.பி.ஐ., அதிகாரிகள், திருச்சி சென்ட்ரல் வங்கி அதிகாரிகள் இருவர், சென்னையை சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் இருவர் சாட்சிகளாக வந்திருந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி, 11 மணியளவில் அவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அடுத்ததாக, அதே குழுவினர் திருவானைக்கோவில், சிவராமன் நகரிலுள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீட்டில் சோதனையிட்டனர். அங்கு, ஒன்றரை மணி நேரம் நடத்திய சோதனையில், வங்கி கணக்குகள் தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவற்றை எடுத்துக் கொண்டு, மதியம் 12.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நேராக மாம்பழச் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்ற சி.பி.ஐ., குழுவினரிடம், வங்கி அதிகாரி ஒருவர் ஸ்டேட்மென்ட் பேப்பரை கொடுத்தார். காரில் இருந்தபடியே அதை பெற்றுக் கொண்டு, சி.பி.ஐ., குழுவினர் புறப்பட்டனர். கடந்த வாரம் சோதனையிட்ட போது, திருச்சியில் உள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீடு பூட்டியிருந்ததால், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

விரட்டி சென்ற நிருபர்கள்: சோதனையை முடித்துக் கொண்டு புறப்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், Buy Levitra Online No Prescription வேறு ஏதேனும் இடங்களில் சோதனை நடத்துகின்றனரா என்பதை அறிவதற்காக, நிருபர்களும், உளவுத்துறை போலீசாரும், அவர்கள் சென்ற திருச்சி சென்ட்ரல் வங்கி கிளைக்கு சொந்தமான ஜீப்பை பின் தொடர்ந்தனர். திருவானைக்கோவிலில் புறப்பட்ட ஜீப்பை, 15க்கும் மேற்பட்ட பைக்குகளில் நிருபர்களும், உளவுத்துறை போலீசாரும் பின் தொடர்ந்தனர். இதை கண்ட பொதுமக்கள், எதற்காக இப்படி ஒரு ஜீப்பை பலர் பைக்குகளில் பின் தொடர்கின்றனர் என வேடிக்கை பார்த்தனர். பைக்குகளில் வந்த சிலர் ஆர்வமாக, நிருபர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டு சென்றனர். இப்படியாக தொடர்ந்த பயணம், அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. ஜீப்பில் புறப்பட்ட சி.பி.ஐ., குழுவினர், முதலில் இரண்டு வங்கி அதிகாரிகளை அண்ணா சிலை பஸ் ஸ்டாப்பிலும், இரண்டு ரயில்வே ஊழியர்களை ரயில்வே ஸ்டேஷனிலும், ஒரு சி.பி.ஐ., அதிகாரியை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலும் இறக்கிவிட்ட ஜீப், கடைசியாக ஒரு சி.பி.ஐ., அதிகாரியை மட்டும் ஏற்றிக் கொண்டு, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் சென்றது.

இரண்டாவது முறையாக சோதனை: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை புகார் தொடர்பாக, கடந்த 8ம் தேதி பெரம்பலூரில், முன்னாள் அமைச்சர் ராஜாவின் சொந்த ஊரான வேலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு, ராஜாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் புரோமோட்டார்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்ஷாவின் வீடு மற்றும் அலுவலகம், கனரா வங்கி ஆகிய இடத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். நேற்று காலை 7.45 மணிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் சொந்த ஊரான வேலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தினர். அப்போது, ராஜாவின் அண்ணன் கலியபெருமாள், அக்கா கமலாவின் கணவர் பச்சமுத்து ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதில், விடுபட்ட சில ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. அரை மணி நேரம் ரெய்டு நடந்தது. இதன்பின், சி.பி.ஐ., அதிகாரிகள் குழு பெரம்பலூர் கனரா வங்கிக்கு சென்று, முதுநிலை மேலாளர் விஜயராகவனிடம், முன்னாள் அமைச்சர் ராஜாவின் வங்கி கணக்குகள், அவரது குடும்பத்தினரின் கணக்குகள் குறித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர், பெரம்பலூர் விவேகானந்தன் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜாவின் நண்பர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மருத்துவமனையில் ரெய்டு நடத்த சென்றனர். மருத்துவமனை பூட்டிருந்ததால் ரெய்டு நடத்தவில்லை.

இதேபோல், பெரம்பலூர் முத்து நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிர்வாகி சாதிக் பாட்ஷாவின் நண்பரும், சாதிக் ரியல் எஸ்டேட்டின் பங்குதாரருமான சுப்புடு என்கிற சுப்ரமணியன் (45) வீட்டுக்கு, ஐந்து பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர், காலை 7 மணிக்கு வந்தனர். வீட்டிலிருந்த சுப்புடு (எ) சுப்ரமணியனிடம் சி.பி.ஐ., போலீசார் மதியம் 3.30 மணி வரை துருவித்துருவி விசாரித்தனர். சாதிக் பாட்ஷாவின் தம்பிகள் ஜாபர் அலி, ஜமால் முகமது, சாதிக் ரியல் எஸ்டேட் மேலாளர்கள் தினேஷ், டேவிட் உள்ளிட்டோரிடம் விசாரித்தனர்.

தமிழகத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்த இடங்கள் விவரம்:

1. நிரா ராடியாவின், “வைஷ்ணவி கம்யூனிகேஷன்’ சென்னை அலுவலகம்.
2. “டிராய்’ முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் சென்னை வீடு.
3. “தமிழ் மையம்’ அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகம்.
4. வார இதழ் இணை ஆசிரியர் காமராஜின் சென்னை வீடு.
5. பல்கலை பேராசிரியர் அகிலன் ராமநாதனின் வீடு.
6. திருச்சியை சேர்ந்த, “டிவி’ நிருபர் நரசிம்மன் வீடு.
7. திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீடு.
8. திருச்சியில் உள்ள ராஜாவின் சகோதரி சரோஜா வீடு.
9. பெரம்பலூரில் உள்ள ராஜா வீடு.
10. பெரம்பலூரில் உள்ள ராஜாவின் நண்பர் சுப்பிரமணி வீடு.
11. ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் சென்னை வீடு.
12. முதல்வர் கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் ஆடிட்டர் ரத்தினம் வீடு. இவை உட்பட தமிழகத்தில் 27 இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது.

சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு நாடகம்: ” 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் சி.பி.ஐ., நடத்திவரும் ரெய்டு, வெறும் கண்துடைப்பு நாடகம்’ என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நிரா ராடியா உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில், நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ., நேற்று ரெய்டு நடத்தியது. இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: ஊழல் புகார்கள் எழுந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனநிலையில், அவர்கள் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை தங்களது வீடுகளில் வைத்திருக்க மாட்டார்கள். எனவே, இது சற்று விசித்திரமான ரெய்டு; இதன் மூலம், எந்த ஒரு ஆவணங்களையும் கைப்பற்ற முடியாது. “2ஜி’ ஊழல் விவகாரத்தில், நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மக்களிடையே காட்டுவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. எனவே, இது வெறும் கண்துடைப்பு நாடகம் தான். ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய ரெய்டின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

பா.ஜ.,வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மிகச் சிறிய நடவடிக்கை மிகவும் தாமதமானது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, இந்த நாடகம் நடத்தப்படுகிறது’ என, தெரிவித்துள்ளார்.

Add Comment