20 மாநிலங்களில் மின்விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் பெரும் அவதி!

புதுடெல்லி:வட இந்தியாவில் Levitra online மின்விநியோகம் மீண்டும் சீர்குலைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மின் தொகுப்புகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் நேற்று மதியம் முதல் இந்தியாவில் 20 மாநிலங்களில் மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் 60 கோடி மக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மின்சாரம் தடைப்பட்டது. இதனால், தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில், வடக்கு ரயில்வே மண்டல சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் பிரச்னை ஏற்பட்ட அதே ஆக்ரா உயர் அழுத்த மின் விநியோகக் கட்டுப்பாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது கண்டறியப்பட்டது. டெல்லிக்கு சராசரியாக நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் 4800 மெகாவாட் மின்சாரத்துக்குப் பதில் 38 மெகாவாட் அளவிலான மின்சாரம் மட்டுமே மின் பாதையில் வந்து கொண்டிருந்தது.

போதுமான மின்சாரம் கிடைக்காததால் தலைநகரில் உடனடியாக மெட்ரோ ரயில் சேவை, டெல்லி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வடக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. டெல்லியில் உள்ள எய்ம்ஸ், சஃப்தர்ஜங் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தடைப்பட்டதும் அவசர சிகிச்சைப் பிரிவு அறைகளில் ஜெனரேட்டர்கள் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

கிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், சிக்கிம், ஒடிசா, சத்தீஸ்கரிலும், வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்டவற்றிலும் மின் தடை ஏற்பட்டது.

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை காலவரையின்றி நிறுத்தப்பட்டது. இதே போல், கிழக்கு, தென் கிழக்கு ரயில்வேயும் தனது பயணிகள், சரக்கு ரயில் சேவைகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நிறுத்தின.

மேற்குவங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பன்டெல், கொலாகாட் ஆகிய இரு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டெல்லியில் மின் தடை ஏற்பட்டதும் மெட்ரோ ரயில்களை அருகில் உள்ள முக்கிய சந்திப்புகளில் நிறுத்திவைக்க ஓட்டுநர்களுக்கு வயர்லெஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. தில்லி கனாட் பிளேஸ், ராஜீவ் சௌக், சென்ட்ரல் செக்ரட்டேரியேட், ஆனந்த் விஹார், புது டெல்லி ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் பயணிகள் வெளியேற்றப்பட்டதும் அனைத்து மெட்ரோ ரயில் நிலைய புறவாயில் கதவுகள் மூடப்பட்டன.

மின்சாரத் தடையால் டெல்லியை நோக்கி வந்த சுமார் 100 ரயில்கள் உத்தரப் பிரதேச மாநில எல்லையான காஜியாபாத், மொகல் சராய் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. இதனால், ரயில் பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிக்னல்கள் தடைபட்டதால் போக்குவரத்து சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன. அதனால், விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனிடையே, மின் தடை நெருக்கடிக்கு மாநில அரசுகளே காரணம் என்று மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தின் அளவை விட சட்டவிரோதமாக கூடுதலாக மாநிலங்கள் எடுப்பதால் மின் விநியோகம் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதுத் தொடர்பாக் மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கையை அளித்த பிறகு மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக முடிவுச் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Add Comment