தனியார் பேருந்துகள்: பயணிகளே உஷார்

மதுரையில் இருந்து இரவு 10.30க்கு புறப்பட்டது அந்த தனியார் பேருந்து. 25க்கும் மேற்பட்ட வட நாட்டுப் பயணிகள், மீதமுள்ளவர்கள் தமிழகத்தினர். இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த பேருந்து தீடீரென ஒரு பக்கமாகத் திரும்பியது. வேகமாகச் செல்கையில் இவ்வாறு நிகழ்ந்தது ஏன் என்று புரியவில்லை. அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தபோது, ஓட்டுனர் மிக மெதுவாக பேருந்தை பாலத்திற்குக் கீழ் கொண்டுவந்து சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

பேருந்தின் டையர்களில் ஒன்று வெடித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லா டயர்களையும் ஆராய்ந்தார். பயணிகளும் பின்னால் சென்று பார்த்தனர். டயர்களில் எந்த பாதிப்பும் இல்லை. பிறகு எதனால் பேருந்து அவ்வாறு திரும்பியது…ஓட்டுனர் தூங்கிவிட்டாரா? புரியவில்லை. என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ள பேருந்தின் இயந்திரத்திற்கு அடியில் சென்று கிளீனர் பார்த்தார். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்து மீண்டும் புறப்பட்டது. அவ்வப்போது அது ஒரு பக்கமாக லேசாக அசைந்தது. ஆனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

திருச்சி நகரை நெருங்கிக்கொண்டிருந்த பேருந்து, தேச நெடுஞ்சாலையில் தொடர்ந்து செல்லாமல், குறுக்கே வேறு சாலையில் திரும்பியது. விழித்துக்கொண்டிருந்த எங்களைப் போன்ற சிலருக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு நெடுஞ்சாலையை தவிர்த்தே பேருந்து செலுத்தப்படுவதைக் கண்டோம். சில மணி நேர பயணத்திற்குப் பிறகு பார்த்தால், திண்டிவனத்தை அடைந்திருக்க வேண்டிய அதிகாலை வேளையில் பேருந்து உளுந்தூர்பேட்டைக்கு குறுக்கு வழித் தேடிக்கொண்டிருந்தது. பயணிகளில் சிலர் சென்று ஓட்டுனருடன் சண்டை போட்டனர். எதற்காக ஊருக்குள் நுழைந்து ஓட்டிக்கொண்டிருக்கிறாய் என்று வினவ, அப்போதுதான் புரிந்தது, அந்த பேருந்து கேரளத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும், அதற்கு எல்லா மாநிலங்களிலும் ஓட்டும் பர்மிட் இல்லை என்பதும்.

சண்டைக்குப் பின்னரும் நெடுஞ்சாலைக்கு வராமல் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து ஓட்டிக்கொண்டிருக்க சென்னைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் விழுப்புரம் வந்திருந்தது!அதற்குப் பிறகும் நெடுஞ்சாலையில் ஓட்டாமல், செஞ்சி சாலையில் நுழைய ஓட்டுனர் முற்பட பெரும் சண்டை வெடித்தது. சில பயணிகள் நெடுஞ்சாலையில் பணியில் இருந்த காவலர்கள் இருவரை அழைத்துவர, அவர்கள் மிரட்டி, நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டிச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலைக்கு வந்து ஒரு அரை மணி நேரம்தான் இருக்கும், போக்குவரத்து ஆணையாளர் ஒருவர் பேருந்தை மடக்கி, கட்டு சாலை வரியை என்று நிர்பந்தித்து ரூ.5,000 வாங்கிவிட்டார். ஓட்டுனரும் கிளீனரும் பயணிகள் மீது கோவப்பட, பயணிகள் பெருத்த குரலில் திருப்பிக் கத்த, மீண்டும் பயணம் தொடர்ந்தது. சவ வேகத்தில் காலை 10 மணிக்கு பெருங்களத்தூருக்கு வந்தது.

காலையில் பணிக்குச் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் திட்டிக்கொண்டே இறங்கிச் சென்றனர்.

தனியார் பேருந்து என்றால், நல்ல நிலையில் இருக்கும், குறித்த நேரத்தில் அல்லது அதற்கு முன்னதாகவே கொண்டு போய் (பாதுகாப்பாக) சேர்த்து விடுவார்கள் என்பது அனுபவத்தால் நாம் கண்டதுதான். ஆனால் அந்த நம்பிக்கையுடன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயணம் புறம்பட்டால் நீங்கள் ஏமாற்றத்திற்குள்ளாவீர்கள். தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டுப் பெறும்போது நாம் எந்த பேருந்தில் ஏற்றப்படப்போகிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்காமலேயே, கடைசி நேரத்தில் இதுமாதிரியான நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத (நாங்கள் பயணம் செய்த அந்த பேருந்து ஒவ்வொரு ஆண்டும் முழுமை செய்யப்பட்டு பெற வேண்டிய சான்றிதழை (எஃப்.சி) பெற்றிருக்கவில்லை) பேருந்தை கொண்டுவந்து அதில் அவசர, அவசரமாக ஏற்றி அனுப்பி வைத்து விடுகின்றனர். ஒரு இரவு பயணத்தில் ரூ.12,000 முதல் 15,000 வரை கிடைக்கிறதே!

இதனை தனியார் பேருந்துகளில் முன் பதிவு செய்யும் எல்லா முகவர்களும் சேர்ந்தே செய்கின்றனர், தெரிந்தே செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சங்கீதா என்கிற தனியார் போக்குவரத்து நிறுவனம், ஒரு குளிர் வசதி செய்யப்பட்ட பேருந்தை இரவு 12 மணிக்கு கொண்டு வந்து கோவை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளை அனுப்பி வைத்தது. அது 4 மணி நேரத்திற்குப் பிறகே வேலூரைத் தாண்டியிருந்தது. பேருந்தில் பிரச்சனை. அப்போதுதான் பார்த்தோம்…டயர்கள் எல்லாம் பழையவை (அவைகள் எங்கள் கண் முன்னே உருட்டிக்கொண்டு போனபோது, அது நம்ம வண்டிக்குத்தான் என்று தெரியாமல் இருந்தேன்!). அப்போதுதான் அவைகளை முன்பே பார்த்த ஞாபகம் வந்தது.

என்னய்யா இப்படி என்று கேட்கப்போனால்… பேசவில்லை. பிறகு பேசினார்கள்… தூய தெலுங்கில். அப்போதுதான் சங்கீதா அலுவலகத்திற்கு எனது நண்பர் வழி கேட்டபோது, ஒரு முகவர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு நினைவிற்கு வந்தது, “ஓ.. அந்த ஏழரை பஸ்ல டிக்கட்டா… அப்படி போங்க” என்று கூறியுள்ளார், நமக்குத்தான் அப்போது புரியவில்லை.

எங்கள் பேருந்தில் அன்றைக்கு பயணம் செய்தவர்கள் அனைவரும் படித்தவர்கள், இணையத்தின் வாயிலாக பயணச் சீட்டை முன் பதிவு செய்தவர்கள்! மோசமான வண்டியில் பயணம் செய்ய இணையத்தில் முன் பதிவு!
கிழிந்து தொங்கிய டயர் பகுதிகளை அந்த இருட்டில் அறுத்து எறிந்து விட்டு, தொடர்ந்து ஓட்டினார்கள். பீதியுள்ள நாங்கள் (அதற்குள் விடிந்தே விட்டது, வண்டி ஜோலார்பேட்டையை தாண்டவில்லை) பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கி, இரயிலைப் பிடித்து ஈரோடு சென்றோம்.

இப்படிப்பட்ட அனுபவங்களை பலரும் பெற்றுள்ளனர். இவை யாவும் திட்டமிட்டுச் செய்யப்படுகிற மோசடிகளே. பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் ஏகத்திற்கு நடக்கின்றன. இதில் நடுவழிச் சண்டை மட்டுமின்றி, விபத்தில் சிக்கும் சாத்தியமும் உள்ளதால், அச்சமுற்றவர்கள் பாதி வழியில் வண்டியில் இருந்து இறங்கி, வேறு வண்டி பிடித்துச் செல்கின்றனர்.

இது மட்டுமல்ல, மதுரைக்கு என்று கூறி, ஏற்றிக்கொண்டு திருச்சி வந்ததும், வேறு வண்டியில் ஏறிப் போங்கள் என்று கூறுவதும் நடக்கிறது. இதனை தட்டிக்கேட்க அரசோ, போக்குவரத்துக் காவல் துறையோ (அந்த நேரத்தில்) முன்வருவதில்லை. “கம்ளைண்ட் கொடு, போ” என்று் ஓட்டுனர்களும், கிளீனர்களும் துணிச்சலாக பேசுகின்றனர். பேருந்தில் ஏற்றும்வரைதான் Viagra online மரியாதை, அதன் பிறகு அதனை கவலைப்படாமல் கப்பல் ஏற்றுகின்றனர்.

நடு இரவில்… சாலையைக் கம்மியுள்ள இருட்டில், எந்தக் காவல் துறை அங்கே வரப்போகிறது? விடியும் வரை காத்திருக்க முடியுமா? சாத்தியமில்லை. எனவே சகித்துக் கொண்டு, தங்களையே (நம்ம நேரம்!) சபித்துக்கொண்டு, ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர்.

இதனை காவல் துறையோ அல்லது அரசோ எந்த விதத்திலும் தவிர்க்கப் போவதில்லை. தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து பேருந்துகளை பார்த்தாலே போதுமே! அரசின் நிர்வாக யோக்கிதை பளிச்சிடுகிறதே! எனவே நாம் தான் எச்சரிக்கையாக பேருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.

நன்கு பிரபலமான தனியார் பேருந்துகளில் மட்டும் இணையத்தின் வாயிலாக பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் உள்ளது என்பதற்காகவே அந்த நிறுவனத்தின் பேருந்துகள் நல்லவையாக இருக்கும் என்று படத்தைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்.

சென்னை கோயம்பேடு அல்லது மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட எந்த நகரத்திற்குச் சென்றாலும், பயணம் செய்கின்ற பேருந்தை பார்த்துவிட்டு பயணச் சீட்டைப் பெறுங்கள். குறிப்பாக, நாம் அமரும் இடத்திற்கு மேல் உள்ள மின் விசிறி, விளக்குகள் ஆகியவற்றின் நிலைகளைக் கண்டாலே பேருந்தின் தரம் தெரிந்துவிடும்.

பயணம் செய்யும் பேருந்தின் டயர்களை ஒரு சுற்று சுற்றுப் பாருங்கள். இது மிக மிக முக்கியம்.

அரசு பேருந்துகளில் இயன்றவரை முன் பதிவு செய்து பயணிக்காதீர்கள். ஏ.சி. பேருந்தில் பதிவு செய்வீர்கள். பேருந்து வந்து நின்றவுடன் “ஏ.சி. வேலை செய்யவில்லை, இப்போதே சொல்லிவிட்டேன்… அப்புறம் பாதி வழியில் கத்தக் கூடாது” என்று ஓட்டுனர் பொறுப்புடன் உங்களை எச்சரிப்பார்! காசை கொடுத்துவிட்டுத் தேவைதானா?

திருடானா பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல், தனியார், அரசு போக்குவரத்து நிறுவனங்களே பார்த்து திருந்தாவிட்டால், அவர்களை யாராலும் திருத்த முடியாது. எனவே முன் எச்சரிக்கையுடன் பயணத்தை திட்டமிடுங்கள். மகிழ்ச்சியான பயணம் என்பது நமது நாட்டில் பயணச் சீட்டில் மட்டும்தான். எனவே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொண்டு பயணியுங்கள்.

Add Comment