சி.பி.ஐ.,யை இயங்கவிடாமல் செய்ததாக சர்ச்சை

“போபால் விஷவாயு கசிவு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வாரன் ஆண்டர்சனை, வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. அவரை நாடு கடத்தி கொண்டு வரும் முயற்சியை கைவிடும்படி வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சிலர், சி.பி.ஐ.,யிடம் வலியுறுத்தினர்’ என, ஓய்வு பெற்ற சி.பி.ஐ., அதிகாரி பி.ஆர்.லால் புகார் தெரிவித்துள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனாலும் இந்த வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சட்ட அமைச்சர் மொய்லி தெரிவித்தார்.

கடந்த 1984ல் ம.பி., தலைநகர் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானோரின் கண் பார்வை பறிபோனது.இது தொடர்பாக கடந்த 26 ஆண்டுகளாக போபால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும், மிகக் குறைந்த அளவில், இரண்டு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. இது, பாதிக்கப்பட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அநீதி’ என்ற கருத்து நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சன் தொடர்பாக தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர் தற்போது அமெரிக்காவில் தலைமறைவாக உள்ளார்.பரபரப்பு புகார்: இந்நிலையில், சி.பி.ஐ., அமைப்பின் முன்னாள் இணை இயக்குனரும், விஷவாயு கசிவு வழக்கிற்கு பொறுப்பேற்று இருந்தவருமான Buy cheap Ampicillin பி.ஆர்.லால், பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:விஷவாயு கசிவு வழக்கு தொடர்பான விசாரணையை 1994 முதல் 1995 வரை, நான் கவனித்து வந்தேன். அப்போது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சில மூத்த அதிகாரிகள் விசாரணையில் தலையிட்டனர். குறிப்பாக, அப்போதைய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சிலர், வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரும் முயற்சியை கைவிடும்படி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால், எங்களால் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. வெளிநாடுகளைப் பொறுத்தவரை, புலனாய்வு அமைப்புகள் தனியாக இயங்கி வருகின்றன. ஆனால், நம் நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ., செயல்படுவதால், அவர்களின் நெருக்கடிக்கு ஆளாக நேரிடுகிறது.இவ்வாறு லால் கூறியுள்ளார்.

லாலின் இந்த அதிரடி குற்றச்சாட்டு, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மொய்லி கருத்து: இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது கவலை அளிக்கிறது. பொறுப்பற்ற முறையில் அவர் அறிக்கை விடுத்துள்ளார். போபால் விஷவாயு கசிவு விவகாரத்தை பொறுத்தவரை, வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கு இன்னும் முடிந்து விடவில்லை. சி.பி.ஐ., அதிகாரிகள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எனவே, விசாரணை தொடரும். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டர்சன் மீதான விசாரணையை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

மேல் முறையீடு: ம.பி.,யைச் சேர்ந்த, “போபால் காஸ் பீதித் மகிளா உத்யோக் சங்தான்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜாபர் கூறியதாவது:போபால் விஷவாயு கசிவு வழக்கில், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் ஏழு பேருக்கும் கடுமையான பிரிவுகளின் கீழ், கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கானோர் இறப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். போபால் பெருநகர மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்த பின், ம.பி., ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்.இவ்வாறு அப்துல் ஜாபர் கூறினார்.இதற்கிடையே, விஷவாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் போபாலின் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Add Comment