சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய சீமான்களுக்கான இந்த ஆடம்பர மார்க்கெட் எதைக் காட்டுகிறது?

  • ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம்
  • சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்..
  • ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000.

தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன.

உலக அளவில் 37  பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

சொகுசுப் பொருட்கள் சந்தையையே மூன்றாக பிரிக்கிறார் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தர்ஷன் மேத்தா. அதை விளக்குவதற்கு கார் சந்தையிலிருந்து உதாரணம் காட்டுகிறார்.

  • ரூ 25 லட்சத்திலிருந்து ரூ 50 லட்சம் வரை மெர்சிடிஸ் ஈ கிளாஸ் அல்லது பிஎம்டபிள்யூ 5 வரிசை இருக்கிறது.
  • ரூ 50 லட்சத்திலிருந்து ரூ 1 கோடி வரை போர்ஷ் 911 அல்லது ஆடி Q7 இருக்கிறது
  • ரூ 1 கோடிக்கு மேல் ஆஸ்டன் மார்டின் D89 அல்லது பெராரி பியரானோ இருக்கிறது.

Buy cheap Bactrim style=”text-align: justify;”>அதே போல ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் மூன்று பிரிவுகளில் சொகுசு பொருட்களை வழங்குகிறது.

  • ரூ 15,000க்கு மேல் சராசரி விலையுடைய எர்மன்கில்டோ அல்லது பால்&ஷார்க் முதல் பிரிவு
  • கட்டுப்படியாகும் சொகுசு பிரிவில் ரூ 8,000 முதல் ரூ 10,000 வரை விலையில் டீசல் ஜீன்ஸ் அல்லது தாமஸ் பிங்க சட்டை
  • உயர் சொகுசு பிரிவில் குயிக்சில்வர், டிம்பர்லேண்ட் போன்ற பிராண்டுகள்

“ஒரு கைப்பை வாங்குவதற்கு ரூ 1 லட்சம் பட்ஜெட் வைத்திருக்கும் ஒரு இந்திய வாடிக்கையாளர் வெளிநாட்டு பிராண்டைத்தான் விரும்புகிறார்” என்கிறார் மேத்தா.  முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தின்படி அந்த சந்தைத் தேவையை நிறைவேற்ற களத்தில் குதித்திருக்கிறது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

சொகுசுப் பொருட்கள் சந்தையின் தற்போதைய மதிப்பு ரூ 30,000 கோடி என்றும் மூன்று வருடங்களில் அது ரூ 80,000 கோடியாக உயரும் என்றும் பொருளாதார சுணக்கம் ஏற்பட்ட காலத்தில் கூட இந்தச் சந்தையில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

குறைந்த பட்சம் ரூ 25 கோடி சொத்துள்ள அதி பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 2015-16 வாக்கில் இரண்டு லட்சமாக உயரும் என்றும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு ஐந்து மடங்காகும் என்றும் கோடக் வெல்த், கிரைசில் ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. ‘தனியார் மயம், தாராள மயம், உலக மயம் அமல் படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் எல்லோரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்’ என்று அதியமான் சொல்வதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

இப்பொழுது டெல்லி , சென்னை , மும்பை முதலான முக்கிய ஊர்களில் 20 கடைகள் இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 55 புதிய கடைகள் உருவாக்கப்படும் என்றும் தருண் மேத்தா சொல்கிறார். கடைகள் திறக்குமளவுக்கு பணக்காரர்கள் இல்லாத சிறு நகர மேட்டுக் குடியினரை கவர்வதற்கு டிரங்க் ஷோ என்ற பெயரில் அந்த நகரங்களில் ஒரு கல்யாண மண்டபத்தை பிடித்து மூன்று நான்கு நாட்களுக்கு விற்பனை நடத்துகிறது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

ஒரு நாளைக்கு ரூ 20 செலவில் வாழ்க்கை நடத்தும் சராசரி இந்தியர் ஒருவர் ரூ 13,000 மதிப்புள்ள ஒரு ஜீன்ஸ் பேன்ட் வாங்க வேண்டுமென்றால் 650 நாட்கள் (கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்) உணவையும் தியாகம் செய்து சேமிக்க வேண்டியிருக்கும்.

“உழைத்து தானே அம்பானி சம்பாதித்தார். வாங்குகிறவனும் உழைத்து தானே சம்பாதிக்கிறான். அப்புறம் ஏன் இந்த வயித்தெரிச்சல்”  என்று தோன்றலாம். கோயம்பேட்டில் காலை இரண்டு மணி முதல் மார்க்கெட்டில் உழைக்க ஆரம்பித்து ஒரு நாள் கூலியாக ரூ 250 சம்பாதிக்கும் சுமைத் தொழிலாளியும் காலையில் இருந்து தொடர்ந்து நின்று கொண்டே டீ போட்டு ரூ 300 சம்பாதிக்கும் டீக் கடைக் காரரும் மாதம் முழுவதும் இயந்திரத்திலே வேலை செய்து ரூ 7,000 சம்பாதிக்கும் தொழிலாளரும் உழைக்காத உழைப்பையா இவர்கள் உழைக்கிறார்கள்?

அத்தியாவசிய பொருட்களுக்காக முழு வாழ்க்கையையே அடகு வைக்கும் மக்கள்வாழும் நாட்டில் இத்தகைய சீமான்களுக்கான இந்த ஆடம்பர மார்க்கெட் எதைக் காட்டுகிறது?

Add Comment