அன்பின் இலக்கணம் – தாயைப் பேணி நடப்போம் !

அன்பின் இலக்கணம் – தாயைப் பேணி நடப்போம்!

ஒரு பெண் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.

பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். எனவேதான் இறைவன் கீழ்வரும் வசனங்களில் தாயைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண முடிகின்றது.

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لاَ تَعْبُدُونَ إِلاَّ اللّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً

“இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).

இவ்வசனத்திலே தாய் – தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக, இறைவணக்கத்துடன் இணைத்துக் கூறியுள்ளான். இதிலிருந்து பெற்றோரைப் பேண வேண்டியதன் அவசியம் தெளிவாகிவிட்டது.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (லுக்மான்: 14 ).

அல்லாஹ் கூறுகின்றான்:

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا Amoxil No Prescription ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான். (அல்-அஹ்காப்: 15).

தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்ற ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள்.‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

இந்நபி மொழியில் மூன்று முறை தாய் என்று பதிலளித்துவிட்டு, நான்காம் முறையாக தந்தை என்று பதிலளித்துள்ளதைக் காண முடிகின்றது. இதிலிருந்து தந்தை நலம் பேணுவதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை. என்றோ, அதிக கவனம் செலுத்தவில்லை என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. எனினும், நபியவர்கள் முதல் மூன்று முறையிலுமே, தாய், தாய், என்று கூறியதிலிருந்து,தாய்க்குச் சேவை செய்வதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், தாயைப் பேணுவதை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ‘எஜமானனிடம் நல்ல அடிமையாக இருப்பவனுக்கு இரு விதமான நன்மைகள் கிடைக்கும்’ எனக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரழி) அவர்கள், ‘இஸ்லாத்தில் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் ஜிஹாதும் ஹஜ்ஜும், தாய்க்கான சேவையும் இல்லையென்றால், காலம் முழுதும் அடிமையாக வாழ்ந்து மடிவதையே விரும்புவேன்’ என்றார். (நூல்: முஸ்லிம்)

குழந்தை வளர்ப்பு முதல், அனைத்துக் கருமங்களிலும் பெற்றோர் இருவருக்கும் பங்கிருக்கிறது. என்றாலும் தாய்க்குத்தான் குழந்தையின் மூலம் ஏற்படும் இன்னல்கள் அதிகம். எனவேதான் இஸ்லாம் தந்தையை விடவும் தாய்க்கு சேவை செய்வதை முற்படுத்திக் கூறியுள்ளது.

அன்பினுக்கு இலக்கணமாய்த் திகழும் தாய்மையை ச்சீ என்று கூடச் சொல்லாது அவர்களின் தேவையறிந்து தாயோடு தந்தையின் தேவைகளையும் பூர்த்தி செய்வோம்…அவர்களின் இம்மை மறுமைக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் எப்போதும் வேண்டிக் கொள்வோம்…இந் நேரத்தில் இதன் வழியே என் தாய் தந்தைக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கை ஏந்தி துஆ செய்கிறேன்…இன்ஷா அல்லாஹ் இறைவன் நம் அனைவரின் மீதும் தன் சாந்தியைப் பொழிவானாக…ஆமீன்…

அன்புடன்,
க.கா.செ.
கடையநல்லூர்

Add Comment