கடவுளே பதில்சொல்வாய் – பி எம் கமால், கடையநல்லூர்!

எங்கள் சரித்திரத்தின்
இருண்ட !காலமது
ஏகத்துவச் சுடர்
எண்ணெய் இன்றி
இருட்டுப் போரில்
இளைத்துக் கொண் !டிருந்தது
கிரகண நோயில்
கிரணங்கள் அழுக
செங்கதிர் மெல்லச்
செத்துக்கொண் டிருந்தது !
கலங்கரை விளக்குகள்
கருப்பாய் எரிந்தன !
கண்களை இமைகள்
கடித்துத் தின்றன !
புதியதோர் விடியல்
புலருமா என்றே
இந்த பூமி
ஏங்கிய போது
ஜீலானில் உதித்ததோர்
ஜீவஜோதி !
விண்ணின் பரிதியும்
வெட்கிக் குனியும்
மண்ணின் புதிய
மகத்துவக் கதிர் அது !

அந்தகாரத்தில் அழுக்காகிப் போன
விளக்கையே கழுவிய
விந்தை விளக்கது !
அந்த ஞான தீபம்
ஞாலத்தில் வரவில்லையேல்
எங்கள் பகல்களே
இருண்டுபோ யிருக்கும் !
அன்று-
அந்தத் திருச்சுடர்
அரும்பும் Buy cheap Bactrim முன்னம்
இறைவனின் நெறியில்
எங்கும் முட்கள்
உதட்டில்தான் கலிமா
உட்கார்ந்திருந்தது
இதயங்களிலோ
எத்தனையோ சிலைகள் !
பள்ளிகள் இருந்தன
பக்தர்கள் இல்லை !
பாங்கொலி கேட்டது !
வரவேற்பில்லை !
ஒழு இருந்தது
உடல் மட்டும் கழுவ !
தொழுகை நடந்தது –
தோற்றச் சடங்காய் !
சஜ்தாத் தழும்புகள்
இருந்தன; அவையோ
மனிதரின் கால்நகம்
பட்ட வடுக்கள் !

ரமழான் நோன்புகள்
ராத்திரி விருந்தாய்
உண்ணும் வேளையில்
மட்டும் மாற்றம் !
அளவோ மற்ற
மாதத்திலும் அதிகம் !

பகலில் வயிறு மட்டுமே
பட்டினி கிடந்தது !
ஆண்டுதோறும்
ஹஜ்ஜும் நடந்தது !
வழிபட அல்ல !
வணிகத்திற்காக !
உல்லாச யாத்திரை
ஊர்வலமாக !

ஏழை வரியும்
ஈந்தனர் அதற்கு
கடவுளிடமே
கள்ளக் கணக்கு !

வல்லவன் திருமறை
வாக்கிய வீதியில்
வாய்மட்டும் நடந்தது –
வாழ்க்கை அல்ல !

உயர்நபி ஹதீதுகள்
உபயோகப் பட்டன –
மேடைப் பேச்சின்
மேற்கோள்க ளாக !

இறைச் சட்ட அறிஞரின்
எழுது கோல்கள்
ஆளுகின்ற
அதிகார வர்க்கம்
நட்டுவம் செய்ய
நாட்டியம் ஆடின !

ஈமான் என்ற
இரும்பின் மீது
சுயநலம் என்ற
துருப்பிடித் திருந்தது !

இஸ்லாமிய வேஷத்தில்
இபுலீசு இருந்தான் !
இறையவன்உணர்த்திய
இலட்சியத் திருநெறி
காலத்தால் அல்ல;
கவலையால் கிழண்டது !

ஆதரிப்பாரின்றி
அநாதை ஆனதால்
நரை திரை தோன்ற
நரம்புகள் உலர
உரைதடு மாற
உடல் நடுநடுங்க
கண்ணொளி மழுங்க
காதொலி மறுக்க
வியாதிப் படுக்கையில்
வீழ்ந்து கிடந்தது
செத்துக்கொண்டிருந்த
தீன்னெறி காத்துப்
புத்துயிர் அளிக்கஓர்
புனிதர் தோன்றினார் !
ஜீலானில் உதித்த
ஜீவ ஜோதியின்
திருக்கரம் பட்டதும்
தீனுயிர்த் தெழுந்தது !
வயோதிகம் மறைந்து
வாலிபம் நிறைந்தது !
துவண்டமேனி
தூண்போல் நிமிர்ந்தது !
அதன்
விழிகளில் சூரிய
வீரியம் ஜொலித்தது !
உதிரத்தில் நெருப்பின்
உணர்ச்சி கிளர்ந்தது !
குரலில் இடியின்
குமுறல் கேட்டது !
ஆன்மீக அரசின்
அரியா சனத்தில்
உலகம் அதனை
உட்கார வைத்தது !
கொடுங்கால மானாலும்
கொடுத்துவைத்த காலமது !
அதற்கோர் முஹ்யித்தீன்
அகப்பட்டார் !
அக்கால பகுதாதின்
அவல நிலைதானே
இக்கால உலகத்தின்
இழி நிலை ?
இன்னுமோர் முஹ்யித்தீன்
எப்போது வருவார் ?
காலம் கேட்கிறது !
கடவுளே ! பதில் சொல்வாய் !

பி எம் கமால் , கடையநல்லூர்

Add Comment