2010 – தழைத்தோங்கிய குடும்ப ஜனநாயகம்

இந்தியாவில் ஜனநாயகம் என்பது இந்நாட்டுத் தலைவர்களின் குடும்பநாயகமாகிவிட்ட அவலம் முழுமை பெற்றது இந்த ஆண்டில்தான். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்று என்ற முழக்கத்திற்கு இந்த குடும்ப ஆட்சிகளும் அரசியலுமே மறுக்கவியலாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

இந்த நாட்டின் முதன்மைக் குடும்பமாக இருப்பது முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் குடும்பம் அல்லவா? இந்தியா விடுதலைப் பெற்ற இந்த 63 ஆண்டுகளில் 38 ஆண்டுக் காலம் அந்த குடும்பத்தின் தலைமையே பிரதமராக இருந்து இந்த நாட்டை ஆண்டுள்ளது. அக்குடும்பத்தின் ஆசி பெற்றோ அல்லது ஆதரவைப் பெற்றோ மற்ற ஆட்சிகள் – இப்போது நடப்பதைப் போன்று பல ஆண்டுகள் நீடித்துள்ளன. அதேபோல் அந்த குடும்பத்தின் ‘நம்பிக்கை’யை இழக்கும்போது அந்த ஆட்சிகளும் கவிழ்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு, அவசர நிலை பிரகடனம் செய்தது, போபர்ஸ் பீரங்கி வாங்கியது, இப்போது காமன்வெல்த் கண்டது என்பது உள்ளிட்ட பல்வேறு அரும்பணிகளை ஆற்றியுள்ளது அக்குடும்பம். அந்த அரும்பணி சில ஆண்டுகளாக இல்லாமல் இந்தியா திணறி வருவதால், ராகுல் காந்தியை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அக்கட்சிக்கென்று கொள்கை ஏதுமில்லையென்றாலும், ‘நேரு குடும்பத்திற்கு எல்லோரும் விசுவாசமாக இருப்பது’ என்கிற ஒற்றை கொள்கை நெறியுடன் இன்று வரை நாட்டின் ஒற்றுமையை சிதறாமல் காப்பாற்றி வருகிறது.

FILE
எனவே, ஆட்சியில் இருந்து நாட்டிற்கு அந்தக் குடும்பம் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்ற Buy Ampicillin காங்கிரஸ் கட்சியின் அடங்கா வேட்கையே இன்று ராகுல் காந்தியை முன்னிறுத்தியுள்ளதாகும். ராகுல் காந்தியும் தனது தோளில் சுமத்தப்பட்ட அந்த மாபெரும் பொறுப்பை சிரமேற்கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்து தொண்டாற்றி வருகிறார். ‘காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும், நீங்களும் மந்திரியாகலாம்’ என்று ஒவ்வொரு மாநிலத்திலும் முழங்கிவருகிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதானே காங்கிரசின் உயிர்நாடி. ஆட்சியோ அல்லது அதில் பங்கோ இல்லையென்றால் அதனால் உயிர் வாழ முடியுமா?

கழகமே குடும்பம் குடும்பமே கழகம்

காங்கிரஸ் கட்சியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு 1967இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., இன்றளவும் கொள்கையளவில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், ஆட்சி அதிகாரத்தைக் குடும்பத்திடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ‘ஜனநாயக அடிப்படை’யில் ஒருமித்த கொள்கை கொண்டே நிற்கிறது. அதன் தலைவர் மு.கருணாநிதி, ‘கழகம் ஒரு குடும்பம்’ என்று சொல்லிச் சொல்லியே உட்குடும்ப ஜனநாயகத்தை வளர்த்தார். அந்த வளர்ச்சி அவருடைய குடும்பத்தோடு நிற்காமல், கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் பிரபலமடையத் தொடங்கி, இன்று மாவட்டச் செயலராக இருந்து அமைச்சரானவரின் மகன் மாவட்டச் செயலர் என்றும், அமைச்சராகாத மாவட்டச் செயலரின் பிள்ளை இளைஞர் அணியின் செயலர் என்றும், உள்ளாட்சி அமைப்புக்களில் அந்தந்த பகுதியின் கட்சிப் பொறுப்பாளரின் மனைவி அல்லது மகள் அல்லது மகன் தலைவராக இருந்த நாட்டை அற்புதமாக வழிநடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட ஜனநாயக அமைப்பு ஒரு நாளிலோ அல்லது ஒரு இரவிலோ உருவாக்கப்படவில்லை

என்பதை கவனிக்க வேண்டும். அது நீண்ட காலமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால், குடும்பத்தில் இருந்து புதிதாக ஜனநாயகத்தின் பல தூண்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, ஒவ்வொருவரும் அதிகாரத்துடன் திகழ, துணை முதல்வர் இளைய பிள்ளைக்கு, அமைச்சர் பதவியுடன் தென் தமிழ்நாடு மூத்த பிள்ளைக்கு, அந்த வீட்டு பிள்ளைக்கு மத்திய மந்திரி பதவி, இந்த வீட்டுப் பிள்ளைக்கு வேண்டப்பட்டவருக்கு மத்திய மந்திரி பதவி என்று ஜனநாயக உரிமைகள் பரவலாக்கப்பட்டுள்ளது தி.மு.க.வின் உள் கட்சி ஜனநாயகத்திற்கு மட்டுமே உள்ள மிகப் பெரிய பெருமையாகும்.

கட்சி, ஆட்சி, அரசியல் என்று மட்டுமே மற்ற மாநிலங்களிலும், மத்தியிலும் குடும்ப ஜனநாயகங்கள் கோலேச்சினாலும், தமிழ்நாட்டில் கலைத் துறையையும் தனது குடும்ப ஜனநாயகத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது தி.மு.க. தலைமை. இன்றைக்கு இந்த குடும்பத்தின் ஆதரவு கம்பெனியின்றி, வேறு எவராலும் தமிழ்நாட்டில் திரைப்படமெடுத்தாலும் திரையிட முடியாது என்கிற உன்னத நிலை!

கர்நாடக்கத்தின் தனது இரண்டு மகன்களோடு காலையில் வாக்கிங் போவதில் இருந்து பொழுதன்னைக்கும் அரசியல் செய்து சுருட்டுவது வரை முதல்வர் எட்டியூரு அப்பாவிற்கு ஒரே ஜனநாயகம்தான். அவருடைய கட்சியினருக்கே இந்த ஜனநாயகத்தை தாங்க முடியாமல், பதவி மாற்றம் கோரி மேலிடம் வரை சென்றனர். அதுவரை கொதித்துக்கொண்டிருந்த மேலிடம், எட்டியூரு அப்பாவின் ஜனநாயகப் பாதையின் பலனை அறிந்தவுடன் மெளனமாகி, அவரே நீடிப்பார் என்று ‘மகிழ்ச்சி’யுடனஅறிவிப்பை வெளியிட்டது.

ஆந்திரத்தில் சொல்லவே வேண்டாம். என் அப்பனுக்குப் பிறகு எனக்கல்லவா அவர் சொத்தாக இருந்த முதல்வர் பதவி? என்று கேட்ட ஜகன் மோகன் ரெட்டி, தனது ஜனநாயக உரிமைக்கு இடமளிக்காத காங்கிரஸ் தலைமையின் அராஜகத்தை எதிர்த்து தனிக் கட்சி காணப் போவதாகக் அறிவித்துவிட்டார். முதல்வர் பதவியில்லாமல் அனந்தபூர் சுரங்கங்களை காப்பாற்ற முடியுமா? அது இல்லாமல் ஏது ஜனநாயகம்? கர்நாடகத்தில் ஜனநாயகத்தை நிலைப்படுத்தத் தேவையான பணத்தை அளிப்பது பெல்லாரி சுரங்கங்கள் போல், ஆந்திர ஜனநாயகத்திற்கு உயிர் நாடியாய் இருப்பது அனந்தபூர் சுரங்கங்களல்லவா?

ஒரிசாவில் பிஜூ பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் முதல்வர் பொறுப்பேற்று, அம்மாநில மொழியை சரியாக பேசத் தெரியவில்லையென்றாலும், சுரங்கத்தை எந்த நிறுவனத்திற்கு அளிப்பது என்பதில் ‘திறம’ வாய்ந்தவராக இருப்பதால், அங்கும் ஜனநாயகம் கொழிக்கிறது. அதற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டிலும் அப்பா பிள்ளை ஜனநாயகம்தான்.

மராட்டியத்தில் பரவலாக ஜனநாயகம் மலர்ந்து மணந்துக் கொண்டிருக்கிறது. பால் தாக்ரே உருவாக்கிய அந்த ஜனநாயகத் தோட்டத்தில் மலர்ந்த இரண்டு மலர்கள் இரண்டு கட்சிகளின் தலைமைகளை ஏற்றுள்ளன. தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது மகனையும், மகளையும் அரசியல் இறக்கிவிட்டு ஒருவரை சட்டப் பேரவைக்கும், மற்றொருவரை மக்களவைக்கும் அனுப்பி ஜனநாயகத்தை பேணி வளர்த்து வருகிறார்.

பஞ்சாபில் அகாலி கட்சியின் முதல்வர் மகன் அடுத்த வாரிசு. காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதல்வர். அவர் மத்திய அமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களாக இருந்து மறைந்த மாதவ்ராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இப்போது மத்திய துணை அமைச்சர், ராஜெஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் மத்திய துணை அமைச்சர். ஜனநாயகத்தின் அரும்பெரும் தூணாக கருதப்படும் மக்களவையை யார் காப்பது? முன்னாள் மத்திய அமைச்சர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா குமார் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படி எங்கு நோக்கினும் இந்தியாவின் எதிர்காலத்தை காக்க குடும்ப வேர்கள் கிளைகள், இலைகள் என்று ஜனநாயகம் தழைக்கிறது.

இதையெல்லாம் எவ்வித சலனமும் இன்றி பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமின்றி, அவர்களின் பிரச்சார பீரங்கிகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை ஊடகங்கள் செயல்படுவதும், அதற்கான வெகுமதிகளாக பட்டங்களைப் பெறுவதும், நான்காவது தூணை நாறடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் செழித்தோங்கும் இந்த குடும்ப ஜனநாயக முடை நாற்றத்தை இனிவரும் ஆண்டுகளிலாவது இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்களா? 2011தான் பதில் சொல்ல வேண்டும்.

Add Comment