வரும் 6ம் தேதி கிருஷ்ணா அறிக்கை வெளியீடு: அமைதி காக்க சிதம்பரம் அழைப்பு

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தனது ஆய்வறிக்கையை, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன், நேற்று உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்தது. “இதுகுறித்து ஆந்திர அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின், வரும் 6ம் தேதி அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

“ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்’ என, தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு, ஆந்திராவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து, “தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். இது, ஆந்திராவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவின் முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இந்த பிரச்னையில் விரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டு, அறிக்கை தாக்கல் செய்வதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி, கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், 28 முறை ஆந்திராவுக்கு பயணம் மேற்கொண்டனர். அரசியல் கட்சிகள், அறிஞர்கள், பொதுமக்கள் என, பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டனர். அதனடிப்படையில் ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்தனர். இந்த அறிக்கையில் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஏதாவது கூறப்பட்டிருந்தால், கலவரம் வெடிக்கும் என, பீதி ஏற்பட்டது. இதையடுத்து, ஆந்திரா முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் ஆந்திரா முழுவதும் குவிக்கப்பட்டனர்.

Viagra online style=”text-align: justify;”>அறிக்கை தாக்கல்: இந்நிலையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி, தனது ஆய்வறிக்கையை, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் நேற்று அளித்தது. அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, வெளியில் வந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். “அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டு விட்டது. இனி, இதுகுறித்து அரசிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என, செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இருந்தாலும், தெலுங்கனா பிரச்னையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மை, தீமை குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: தெலுங்கானா பிரச்னை குறித்த தனது அறிக்கையை, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தாக்கல் செய்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை தற்போது வெளியிட முடியாது. இந்த அறிக்கை இரண்டு பகுதிகளாக உள்ளன. இதில் உள்ள பரிந்துரைகள் மற்றும் விவரங்கள் குறித்து, ஆந்திராவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வரும் 6ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆந்திராவை சேர்ந்த எட்டு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அறிக்கையின் விவரங்களை அரசு மிகவும் கவனமாக ஆய்வு செய்யும். ஆலோசனை நடத்தியபின், அன்றே, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்படும். இந்த விவகாரத்தில் ஆந்திர மக்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும். ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.

ஆந்திர மக்களின் சகிப்பு தன்மை மீது, அரசு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அதேபோல், ஆந்திராவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அமைதியை கடைப்பிடிப்போம் என, உறுதி அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மீடியாக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே, ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ஆந்திராவில் தொடர்ந்து பதட்டம்: இதற்கிடையே, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ததன் காரணமாக, ஆந்திரா முழுவதும் தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர டி.ஜி.பி., அரவிந்தா ராவ் கூறுகையில், “எந்த வகையான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Add Comment