சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்க கட்டுப்பாடு : பீகார் பாணியில் புது திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க “பீகார் பார்முலா’வை கடைபிடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது,” என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை, சென்னையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கேட்டறிந்தார். காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்ட, தலைமை தேர்தல் கமிஷனர், மதியம் 2.30 முதல் 5 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களிடம் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலர் மாலதி, உள்துறை செயலர் ஞானதேசிகன், டி.ஜி.பி., லத்திகா சரண், ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி விவாதித்தார்.

இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: இப்புதிய திட்டத்தின்படி, வேட்பாளரின் செலவை கண்காணிக்க புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். வேட்பாளர்கள் புது வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலம் தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும். இதை தவிர தேர்தல் பார்வையாளர், தேர்தல் செலவு பார்வையாளர், நுண்பார்வையாளர், வீடியோ மூலமான கண்காணிப்பு ஆகியவை மூலம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு செய்யப்படும் செலவுகள், பரிசு பொருட்களை வினியோகம் ஆகியவையும் கணக்கிடப்படும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா இரண்டு டெலிபோன், மொபைல்போன் ஆகியவை மூலம் தகவல் தொடர்பு வலுப்படுத்தப்படும். வேட்பாளரை போல தேர்தல் அதிகாரியும் ஒரு “நிழல்’ வங்கி கணக்கை துவங்கி, வேட்பாளரின் செலவை கணக்கிடுவார். இதன் மூலம் பொய் கணக்கு காட்டும் வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.ஜி.பி., லத்திகா சரண் சென்னை மாநகர கமிஷனராக இருந்த போது, மாநகராட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாகவும், வரும் தேர்தலுக்கு டி.ஜி.பி.,யை மாற்றம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க., கோரிக்கை மனு கொடுத்துள்ளது. இந்த கோரிக்கை கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு, பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒரு “டிவி’ சேனல் உள்ளது. இதன் மூலம் விடிய விடிய பிரசாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரியுள்ளன. இது குறித்து ஆய்வு செய்யப்படும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன. இதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

தமிழகத்துடன், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் no prescription online pharmacy நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களுக்கும் சென்று, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளோம். வானிலை, சட்டம் ஒழுங்கு, தேர்வுகள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது இறுதி செய்யப்படும். மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும். எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடும் போது, ரசீது வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது குறித்து வல்லுனர் குழுவின் ஆய்வறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு முடிவு செய்யப்படும். இவ்வாறு குரேஷி கூறினார். பேட்டியின் போது, துணை தேர்தல் கமிஷனர் அலோக் சுக்லா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா உடனிருந்தனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் “அப்செட்’: தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி விவாதித்தார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் அதிகாரி பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பது குறித்து தலைமை செயலரிடம் குரேஷி கேட்டறிந்தார். இதற்கு, “விரைவில் காலி பணியிடங்களை நிரப்புவதாக’ தமிழக அரசு தரப்பில் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் பாதுகாப்புக்கு அவசியமான போலீஸ் துறையில், 5,000 போலீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், குரேஷி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின், காலியாக உள்ள இந்த இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Add Comment