தோ்தல் வந்துவிட்டால் ஜெவுக்கு சிறுபான்மையினரின் நினைவு வந்துவிடும்-கருணாநிதி

மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை தான்தான் நீக்கியதாக கூறும் ஜெயலலிதாதான் தனது ஆட்சியில் அதைக் கொண்டு வந்தார். தேரத்ல் வரும்போது மட்டுமே சிறுபான்மையினரின் நினைவு ஜெயலலிதாவுக்கு வரும். இப்படிப்பட்டவரின் பேச்சுக்களை சிறுபான்மையினர் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுபான்மையினத்தவரின் உரிமைகளையும், நலன்களையும் காப்பதில் அ.இ.அ.தி.மு.க. தான் ஒரு வலிமைமிக்க பாதுகாவலனாக எப்போதும் இருந்து வருகிறது என்று ஒரு முழுப் பொய்யை தனது அறிக்கையிலே ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். மேலும் தி.மு.கழக ஆட்சியில்தான் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நீக்கம் செய்யப்பட்டது என்று ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த நாளிதழ்கள் என்று அவர் கூறவில்லை.

சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதிக்கக் கூடிய சட்டம்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்! அந்தச் சட்டத்தை தி.மு. கழக ஆட்சியில் ரத்து செய்யப்படவில்லை என்கிறார் ஜெயலலிதா – ஆனால் சிறுபான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? இதே ஜெயலலிதாவா? அல்லவா?

2002ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்ததா? இல்லையா? அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தபோது, அவைகளை ஜெயலலிதா உதாசீனப்படுத்தி, சிறுபான்மையின மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதிக்கச் செய்தாரா? இல்லையா?

2003ஆம் ஆண்டு ஜுன் திங்களில் போப்பாண்டவரே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்தபோது, போப்புக்கு அதற்கான எந்தவிதமான அதிகார மும் உரிமையும் கிடையாது என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்து சிறுபான்மையினரான கிறித்தவர்களின் மனதை நோக அடித்தது உண்டா இல்லையா?

செய்தியாளர்கள், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் குறித்து என்னைக் கேட்ட போது, பெரியாரின் கொள்கைப்படி, அண்ணாவின் கொள்கைப்படி அந்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, அவரவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மதம் மாறினால் கூட அவர்கள் மதம் மாறியதாகக் கூறி தண்டிக்கப்பட நேரிடும், எனவே அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தெரிவித்தேன்.

தமிழக அரசின் மத மாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறுபான்மையினர் நடத்திய அனைத்துக் கட்சி கண்டன மாநாட்டில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். சிறுபான்மை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் காப்பாற்றுவேன் என்றும், அ.தி.மு.க. அரசு மத மாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது என்றும் அந்த மாநாட்டில் நான் அறிவித்தேன்.

சட்டப் பேரவையில் 31-10-2002 அன்று ஜெயலலிதா ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. தி.மு.கழகமும் மற்ற எதிர்க் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பெரும் பான்மை காரணமாக அந்தச் சட்டம் ஆளுங் கட்சியினால் அவையிலே நிறைவேற்றப்பட்டது. எனவே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்! அதை அப்படியே மறைத்துவிட்டு, அந்தச் சட்டத்தை 18-5-2004 அன்று அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்தேன் என்கிறார் ஜெயலலிதா!

ஒரு அரசு சட்டப் பேரவை நடைபெறாத நாட்களில் ஒன்றை மக்களுக்கு திடீரென அவசரமாக அறிவிக்கக் கருதினால், அப்போது அரசின் சார்பில் கொண்டு வரப்படுவதுதான் அவசரச் சட்டம். அப்படியொரு அவசரச் சட்டம் ஒரு அரசின் சார்பில் பிறப்பிக்கப்படுமேயானால், அதற்கு அடுத்து நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில், அந்த அவசரச் சட்டத்திற்கு பதிலாக ஒரு சட்ட முன்வடிவு பேரவையிலே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 18-5-2004 அன்று கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அவசரச் சட்டம் பிறப்பித்த பிறகு, அடுத்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் அந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்ட முன்வடிவை பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை.

18-5-2004 அன்று ஜெயலலிதா அவசரச் சட்டம் பிறப்பித்ததற்குக் காரணமே அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி தோற்ற பிறகு, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள், உரிமைகள், நிறை வேற்றப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி வைத்து விட்டவைகளையெல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார். அப்போது செய்தியாளர்கள்

18-5-2004 அன்று என்னைச் சந்தித்து ஜெயலலிதாவின் திடீர் அறிவிப்புகளைப் பற்றி கேட்டபோது, “திடீரென்று ஒன்றும் அறிவிக்கவில்லை. தி.மு.கழக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளையெல்லாம் மூன்றாண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா ஒழித்துக் கட்டினார். தற்போதைய தோல்விக்குப் பிறகு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கேற்ப இப்போது சூரிய நமஸ்காரத்திற்கு வந்திருக்கிறார். சூரியன் தி.மு.க.வின் தேர்தல் சின்னம் என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்கள் ஏமாறுவார்கள் என்று நான் நம்பவில்லை.

தி.மு.கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்கச்) சட்ட முன் வடிவு 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 31-5-2006 அன்று அந்தச் சட்ட முன் வடிவு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்தில் கூட அ.தி.மு.க. சார்பாக அவர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் பற்றி ஜெயலலிதா குறிப்பிட்டபோது, நான் அதற்கு அப்போதே விளக்கம் அளித்து, அது அவை நடவடிக்கை குறிப்பில் இன்றும் உள்ளது.

மேதகு ஆளுநரால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, மீண்டும் சட்டமன்றம் கூடும் நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் அந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் Doxycycline No Prescription தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய் யப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை என்றால், சட்டமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குப் பிறகு அந்த அவசரச் சட்டம் காலாவதியாகி விடும் என்று எழுதப்பட்டு, அதிலே முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா 21-6-2004இல் கையெழுத்திட்டிருக்கிறார்.

இவ்வாறு கையெழுத்திட்டவாறு அந்த அவசரச் சட்டத்தை பேரவையிலே வைத்து ஒப்புதல் பெற்றார்களா என்றால் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அவசரச் சட்டம் நிறைவேற்றினாலே போதுமானது என்று ஜெயலலிதா சொல்லுகிறார் என்றால், பிறகு ஏன் இந்தக் கோப்பிலே பேரவையிலே வைத்து ஆறு வாரக் காலத்திற்குள் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவரே ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார்? ஜெயலலிதா கோப்பிலே ஒப்புக்கொண்டது உண்மையா? அறிக்கையிலே கூறியிருப்பது உண்மையா?

ஜெயலலிதாவிற்கு உண்மையிலே சிறுபான்மையினர் மீது அக்கறை இருக்குமானால், அவசரச் சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை அடுத்துக் கூடிய சட்டப் பேரவையில் ஏன் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை? பொதுத் துறை கோப்பிலே அடுத்து சட்டசபை கூடிய ஆறு வாரத்திற்குள் அவசரச் சட்டத்திற்கு மாற்றுச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியில் இருந்து இறங்குகின்ற வரை அதைப்பற்றி நினைக்கவே இல்லை. ஏனென்றால் அவருக்கு சிறுபான்மையினரைப் பற்றிய நினைவே இல்லை. எப்போதும் அவருக்கு சிறுபான்மையினரின் நினைவு தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

ஜெயலலிதா தற்போது வைத்துள்ள வாதத்தைத்தான் 27-5-2006 அன்றும் பேரவையிலே எடுத்து வைத்தார். அப்போது கூட காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஞானசேகரன் குறுக்கிட்டு, “ஜெயலலிதா அவர்கள் இங்கே சொல்கிற போது ஏற்கனவே அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, பொதுவாக அந்தச் சட்டத்தை நீக்கி விட்டாலே, அதுவே போதும், நீக்கி விட்டதாகப் பொருள் என்று சொன்னார்கள். எப்பொழுதுமே ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சொன்னால், அதை ஆறு மாத காலத்திற்குள் அவையில் வைத்து நீங்கள் சட்டம் ஆக்கினால்தான், நிச்சயமாக அந்தச் சட்டம் ஒரு உறுதி பெறும். ஜெயலலிதா அவசரச் சட்டத்தைப் போட்டு விட்டு, அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார் என்று சொன்னால், பிறகு எப்போதுதான் அதற்கு ஒரு விடிவு காலம்?

ஏற்கனவே ஆடு, கோழி வெட்டக் கூடாது என்ற தடுப்புச் சட்டம் கூட இந்த அவையிலே கொண்டு வந்தார்கள். இதை மாத்திரம் ஏன் கொண்டுவரவில்லை அன்றைக்கு! ஏனென்றால் சிறுபான்மை மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு அந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்த காரணத்தினால், அதை விட்டு விட்டார்கள். இந்த அவையில் ஜெயலலிதா அவசரச் சட்டத்தை சட்டம் ஆக்காமல் விட்டு விட்டதே, அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு நேர் எதிரியாக இருந்தார், அவர்களுக்கு துரோகம் செய்தார் என்றுதான் பொருள்” என்று கூறியது நடவடிக்கை குறிப்பிலேயே உள்ளது.

சிறுபான்மையினரை எந்த அளவிற்கு ஜெயலலிதா சிறுமைப்படுத்தினார் என்பதற்கு மற்றுமோர் உதாரணம்! ஆண்டு தோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா வழக்கமாக கலந்து கொள்வதில்லை. அதுபோல் ஆண்டுதோறும் காயிதே மில்லத் நினைவகத்திற்கு வந்து பூவாடை அஞ்சலி செலுத்துவதுமில்லை. ஆனால் தேர்தல் ஆண்டு என்றால் தவறாமல் இந்த இடங்களுக்கு வந்து பெரிதாக புகைப்பட மெடுத்து ஏடுகளிலே விளம்பரம் செய்யாமல் இருப்பதில்லை. பொதுவாக ஜெயலலிதாவுக்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., காய்தேமில்லத், தேவர் திருமகன், அம்பேத்கர் போன்றவர்களின் நினைவெல்லாம் தேர்தல் வருகிறது என்றால் வந்து விடும்!

அந்த வகையில் இந்த 2005ஆம் ஆண்டு தேர்தல் வரப்போகிறது என்றதும், தானே இப்தார் நிகழ்ச்சியை கட்சியின் சார்பிலேயே ஏற்பாடு செய்து கலந்து கொண்டுள்ளார். ஆனால் 2003ஆம் ஆண்டும் இது போலவே தான் கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி அழைத்து விட்டு, கடைசி நிமிடத்தில் அந்த விழாவிற்கு தான் செல்லாமல் தவிர்த்தார் என்பது எத்தகைய அநாகரிகம் என்பதை நடுநிலையாளர்கள்தான் சொல்லவேண்டும். வீட்டிற்கு விருந்தினர்களையெல்லாம் சாப்பிட வாருங்கள் என்று அழைத்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் வேறுபாடு உண்டா?

27-2-2002 அன்று அயோத்தியிலிருந்து ஆமதாபாத் நகருக்கு சபர்மதி விரைவு ரெயிலில் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் மீது வன்முறைக் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதின் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைத் தாங்கி அனைத்து ஏடுகளும் 28ஆம் தேதி காலையில் வந்ததும் உடனடியாக அன்றைய தினமே அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வன்முறை தொடராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் அறிக்கை விடுத்தேன். நான் மாத்திரமல்ல; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் கண்டன அறிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சி ஏட்டில் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து தலையங்கமே எழுதப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதே நாளன்று விடுத்த அறிக்கையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததோடு மட்டும் நிறுத்தாமல், தேவையின்றி, உண்மையை உணர்ந்து கொள்ளாமல்,

“பெரும்பான்மை சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்று ஏதாவது ஒரு சம்பவம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடிச்சென்று கண்டன அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் அதை விட வெறித்தனமான முறையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக காட்டு மிராண்டித்தனமாக நடந்த இந்தத் தாக்குதலைக் கண்டித்து எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை கண்டன அறிக்கை வெளியிடவில்லை. இது விநோதமாகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது” – என்று குறிப்பிட்டிருந்தார்.

இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினை எழுந்தபோது ஜெயலலிதா “முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை” என்று கூறினார்.

30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் ஜெயலலிதாவிடம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “ஆமாம், ஆதரிக்கிறேன், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்” என்று பதில் அளித்தவர்தான்!

23-8-2001 ஆம் நாளன்று சட்டசபையில் திருமாவளவன் “இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த நான் ஆணையிடுவேன் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது எனக்கு நினைவு இருக்கிறது. ஆகவே, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” என்று ஜெயலலிதாவைக் கேட்டபோது, “அப்படிப்பட்ட உத்தரவாதத்தைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்; நான் அல்ல” என்று கூறியவர்தான் ஜெயலலிதா. கழக ஆட்சி 2006-ல் பொறுப்பேற்ற பின்புதான், 22-10-2007 ஆம் நாளன்று, தமிழ்நாடு கிறித்தவ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டது.

இந்த விவரங்கள் எல்லாம் சிறுபான்மையோர் மீது நாம் எந்த அளவிற்கு பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதையும், ஜெயலலிதா எந்த அளவிற்கு அவர்களை ஏமாற்ற முனைகிறார் என்பதையும் விளக்கிடும் என்று நம்புகிறேன். ஜெயலலிதாவின் கூற்றினை யார் நம்புகிறார்களோ, இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் நிச்சயமாக நம்ப மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

Add Comment