தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது: கருணாநிதியை சந்தித்த பின் மன்மோகன்சிங் பேட்டி

தமிழகத்தில் தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்று கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி எப்போதும் போல் பலமாக உள்ளது’ என, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமரை முதல்வர் கருணாநிதி நேற்று காலை சந்தித்துப் பேசியதற்கு பின், இத்தகைய அறிவிப்பு வந்துள்ளதால் தி.மு.க., வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டை துவக்கி Levitra online வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு, பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் பிரதமருக்கு வரவேற்பளித்தனர்.நேற்று முன்தினம் மாலை நடந்த வைரமுத்துவின் பாடல் தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முதல்வர் கருணாநிதி முன்பே ஒப்புதல் கொடுத்திருந்ததால், பிரதமரை வரவேற்க அவர் விமான நிலையம் செல்லவில்லை. அதோடு, நேற்று முன்தினம் இரவு ராஜ்பவனில் பிரதமர் மன்மோகன் சிங் – முதல்வர் இடையே சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வருக்கு கண் வலி ஏற்பட்டதால், பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

“ஸ்பெக்ட்ரம்’ விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம், அரசியல் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. பிரதமர் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்கவிருந்த அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு விழாவும் திடீரென ரத்தானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜ்பவனில் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல்வர் கருணாநிதி நேற்று காலை சந்தித்துப் பேசினார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின், காங்கிரசுடனான உறவு குறித்து முதல்வர் கருணாநிதி கூறும் போது, “உங்களுக்கும்(பத்திரிகையாளர்கள்) எனக்கும் உள்ள உறவு போல் உள்ளது’ என்று பூடகமாக பதில் அளித்தார்.இதன் பின், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்திற்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.மாநாட்டை துவக்கி வைத்துவிட்டு புறப்படும் போது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், “தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி குறித்து’ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் பதில் அளித்தபோது, “காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி எப்போதும் போல் பலமாக உள்ளது’ என்று தெரிவித்தார். டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத்தும் பிரதமர் தெரிவித்துள்ள கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பின், கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளது, தி.மு.க., வட்டாரத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Add Comment