ஆந்திர பிரிவினை: ஆறு யோசனைகள்

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து, தெலங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தெலங்கானா மாநிலத்தை உருவாக்குதல், ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் தெலங்கானா பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகாரம் வழங்கும் நடைமுறை உள்ளிட்ட 6 பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை அளித்துள்ள போதிலும், முதல் மூன்று பரிந்துரைகள் நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை என்று நிராகரித்திருக்கிறது. அதன்படி, தற்போதைய நிலையை தொடர்ந்து பராமரிப்பது சாத்தியமற்றது என்று முதல் பரிந்துரையில் தெரிவித்திருக்கிறது. மாநிலத்தை, சீமாந்த்ரா மற்றும் தெலங்கானா என்ற இரு மாநிலங்களாகப் பிரித்து, தற்போதைய தலைநகர் ஹைதராபாத்தை, யூனியன் பிரதேசமாக மாற்றுவது இரண்டாவது யோசனை. ஆனால், அது சரியானது அல்ல என்று கமிட்டி கூறியிருக்கிறது.

மூன்றாவதாக, ராயல – தெலங்கானா மற்றும் கடலோர ஆந்திரம் என இரண்டாகப் பிரித்து, ஹைதராபாத்தை ராயல தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக்குவது. அதை சம்பந்தப்பட்ட பிராந்தியங்களே ஏற்க வாய்ப்பில்லை என்று கமிட்டி கூறியுள்ளது.

நான்காவது பரிந்துரை, சீமாந்த்ரா மற்றும் தெலங்கானா என்ற இரு மாநிலங்களை உருவாக்குவது. மற்ற மாவட்டங்களின் பகுதிகளையும் சேர்த்து, ஹைதராபாத்தின் எல்லையை விரிவுபடுத்தி, அதை யூனியன் பிரதேசமாக மாற்றுவது. ஆனால், இந்த யோசனைக்கு, தெலங்கானா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதால், அது அனைவரும் ஏற்கக்கூடியதல்ல என்று கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐந்தாவது பரிந்துரை, தனி மாநிலம் கோரி போராடிவரும் கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளது. அதாவது, ஆந்திரத்தை, தெலங்கானா மற்றும் சீமாந்த்ரா என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது. தற்போதைய தலைநகர் ஹைதராபாத், தெலங்கானா தலைநகராக வேண்டும் என்றும், சீமந்ரா மாநிலத்துக்கு புதிய தலைநகர் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது சிறந்த யோசனை என்று தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, இதைப் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. தனி தெலங்கானா கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்று கூறிவிட முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு வேளை இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டால், ஹைதராபாத் மற்றும் தெலங்கானா பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் குடியேறியுள்ளவர்கள், தொழில் நிறுவனங்களை அமைத்துள்ளவர்கள், முதலீடு செய்துள்ளவர்கள் உள்ளிட்டோரின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கமிட்டி யோசனை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிந்துரையை அமல்படுத்தினால், தெலங்கானா பிராந்தியத்தில் Ampicillin online உள்ளவர்களிடம் பெரும் ஆதரவு கிடைக்கும் என்றும் அதே நேரத்தில், மற்ற பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என கமிட்டி எச்சரித்துள்ளது.

தனி மாநிலம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது என்ற நிலையில் மட்டுமே இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், தெலங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரம் ஆகிய மூன்று பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள் அனைவரும் இதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

தெலங்கானா பிராந்திய கவுன்சில்

ஆறாவது பரிந்துரை ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் இருப்பது. அதைப் பரிசீலிக்கும்போது, தெலங்கானா மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும், அரசியல் ரீதீயாக அதிகாரமளிப்பதற்கும், சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட, தெலங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்குவது அவசியம் என்று கமிட்டி கூறியுள்ளது.

மூன்று பிராந்தியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தேசியக் கண்ணோட்டத்திலும்தான், ஆந்திரத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று யோசனை கூறுவதாக கமிட்டி கூறியுள்ளது. இந்த யோசனை பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்துவதோடு நில்லாமல், கல்வி, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாக மேம்பட்டு வரும் ஹைதராபாத் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

நீர் மற்றும் நீர்வளங்களை சமமாகப் பகிர்ந்துகொள்ள தனி அமைப்புக்களை உருவாக்கவும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால், தெலங்கானா மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் திருப்திகரமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்று கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அந்தப் பரிந்துரைகள் குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிரஜா ராஜ்யம் ஆகியவை பங்கேற்ற போதிலும், பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

கமிட்டியின் பரிந்துரைகள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் கட்சிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த மாதத்தில் இன்னொரு நாளில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படும் என்றும் சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நன்றி : BBC

Add Comment