குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த ‘பள்ளிகளுக்கிடையேயான முதலாவது பொது அறிவுப் போட்டி

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம் மற்றும் கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் குவைத் இந்திய தூதரகத்திலும், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் குவைத் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு நற்பணிகளாற்றும் சிறந்த ஓர் அமைப்புதான் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்.

முதன் முறையாக குவைத் வாழ் தமிழ் பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக இந்திய, பாகிஸ்தான் பள்ளிகளில் கல்வி பயிலும் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவ, மாணவியருக்கு மத வேறுபாடின்றி முதலாவது பொது அறிவுப் போட்டியை 13.01.2011 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் குவைத் மஸ்ஜிதுல் கபீர் வளாகத்தில் அமைந்துள்ள ‘இப்னு ஸீனா’ அரங்கத்தில் ‘இஸ்லாமும், இஸ்லாம் வழிகாட்டும் அறிவியல் ஆராய்ச்சிகளும் மற்றும் இஸ்லாமியர்களின் நவீன கண்டுபிடிப்புகளும்…’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது.

இப்போட்டியில் கலந்து கொள்ள சுமார் 20 பள்ளிக்கூடங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த பள்ளிகளிலிருந்து போட்டியின் நிபந்தனைகளுக்குட்பட்ட பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டன. 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை இளநிலை (ஜூனியர்) பிரிவு என்றும், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை முதுநிலை (சீனியர்) பிரிவு என்றும் இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இளநிலை பிரிவில் மூன்று பள்ளிகளும், முதுநிலை பிரிவில் நான்கு பள்ளிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஓவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று நபர்கள் என மொத்தம் 21 மாணவ, மாணவியர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

துவக்க நிகழ்ச்சி:

சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளவல் எம்.என். அப்துல் லத்தீஃப், இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓத, சங்கத்தின் உறுப்பினர் பொறியாளர் பி. மஸ்வூது அஹ்மத் பி.ஈ., ஆங்கிலத்திலும், தமிழிலும் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்ய, சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச்.எம். முஹம்மது நாஸர், வரவேற்புரையாற்ற, சங்கத்தின் மூத்த ஆலோசகரும், திருச்சி பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) உணவகத்தின் அதிபருமான அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) ஏ. அப்துல் காதர் அவர்களும், சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அல் ஈமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், சீமாட்டி சில்க்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் எம். பஷீர் அஹ்மத் அவர்களும், சங்கத்தின் ஆலோசகரும், குவைத் வடக்குமாங்குடி ஜமாஅத்தின் தலைவரும், மஹாராஜா டெக்ஸ்டைல் சில்க் சென்டர் நிறுவனத்தின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ்.என். அப்துர் ரஜ்ஜாக் அவர்களும் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் பி.ஏ., சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஆங்கிலத்தில் அறிமுகவுரையாற்ற, குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம், சமூகப் பிரிவின் முதன்மை அதிகாரி அஷ்-ஷைக் அஹ்மத் அல்-தராவீ அவர்கள் ஆங்கிலத்தில் வாழ்த்துரை வழங்கினார்.

பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி:

சங்கத்தின் கல்விக் குழு உறுப்பினர் பேராசிரியை திருமதி ஏ. ஃபைரோஸ் பேகம் பி.எஸ்.சி., பி.எட்., பொது அறிவுப் போட்டி நடத்துநரை அறிமுகம் செய்து விட்டு, மதிப்பெண் மதிப்பீட்டாளராக (ஸ்கோரர்) செயல்பட, பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன், நேரப்பதிவாளராக (டைம் கீப்பர்) செயலாற்றினார். சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் எம்.எஸ்சி., எம்.ஃபில்., பி.எட்., பி.எச்டி., போட்டி நடத்துநராக இருந்து சிறப்பான முறையில் நடாத்தினார்.

வினாக்கள் ஐந்து சுற்றுக்களாக கேட்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்டோர் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக தங்களின் அறிவுத் திறமைகளை நிரூபித்துக் காட்டினர். போட்டியாளர்கள் பதில் சொல்ல முடியாத வினாக்கள் அரங்கத்தில் அமர்;ந்திருந்த பார்வையாளர்களின் பதிலுக்காக வைக்கப்பட்டு, சரியாக பதில் அளித்தோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இளநிலை பிரிவில் இண்டிகிரேடட் இந்தியன் ஸ்கூல் (ஜலீப், அப்பாஸிய்யா) முதலாவது இடத்தையும், இந்தியன் எஜுகேஷனல் ஸ்கூல் (பாரதிய வித்யா பவன், ஜலீப், அப்பாஸிய்யா) இரண்டாவது இடத்தையும் பிடித்தது. முதுநிலை பிரிவில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (ஸால்மியா) முதலாவது இடத்தையும், இண்டிகிரேடட் இந்தியன் ஸ்கூல் (ஜலீப், அப்பாஸிய்யா) இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இண்டிகிரேடட் இந்தியன் ஸ்கூல் (ஜலீப், அப்பாஸிய்யா) பள்ளிகளுக்கிடையேயான வெற்றிக் கோப்பையைத் Buy Amoxil தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (ஸால்மியா) பெற்றுக் கொண்டது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சி:

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுடன் பள்ளி சார்பாக வருகை தந்திருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டியை சிறப்பாக நடத்திக் கொடுத்த பேராசிரியர்களுக்கும் சங்கத்தின் தலைவர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம், சமூகப் பிரிவின் அதிகாரிகள் அஷ்-ஷைக் முஹம்மது அலீ மற்றும் அஷ்-ஷைஃக் அப்துல் முஃமின், குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, கண்ணூர் மாவட்ட கமிட்டியின் தலைவரும், குவைத் இந்திய இஸ்லாமியச் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் காலிப் ஷிஹாப் தங்கள், குவைத் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் அரபி மற்றும் மார்க்கப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ அஷ்-ஷைஃக் முஹம்மது அப்ரார், சங்கத்தின் மூத்த ஆலோசகரும், திருச்சி பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) உணவகத்தின் அதிபருமான அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) ஏ. அப்துல் காதர், குவைத் இந்தியன் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி அல்ஹாஜ் அதீகுர் ரஹ்மான், மெப்கோ (ஜித்தா, ஸவூதி அரபிய்யா) அமைப்பின் நிர்வாகி அல்ஹாஜ் பொறியாளர் நஜ்முத்தீன் ஹபீப் ஆகியோர் இந்நிகழ்ச்சி குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு வெற்றிக் கோப்பைகளும், அடுத்தடுத்த இடங்களை பிடித்தோருக்கு பரிசுகளும், அனைவருக்கும் சான்றிதழ்களும், திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஏறக்குறைய 15 தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் அடங்கிய புத்தகத் தொகுப்பும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த பள்ளிக்கு பெரிய அளவிலான வெற்றிக் கோப்பையும், அடுத்து வந்த பள்ளிக்கு மற்றொரு வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டன.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்ற, பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, சங்கத்தின் ஜமாஅ(த்)துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் சங்கம் வெளியிட்ட 2011ம் வருட நாட்காட்டி, ‘கே-டிக் பிறை செய்தி மடல்’ மாத இதழ்கள், குவைத் இஸ்லாமிய நிலையம் (ஐ.பி.ஸி), அரபு மேற்கத்திய நல்லுறவு தொடர்பு மையம் (அவேர் சென்டர்) வெளியிட்ட மடக்கோலைகள், சிற்றேடுகள், நூல்கள், அல் மராயீ மற்றும் கிட்கோ நிறுவனங்கள் வழங்கிய குளிர்பானம், சிப்ஸ்கள், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் வழங்கிய தண்ணீர், தேநீர் ஆகியவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலதிக விபரங்களுக்கு…

துரித சேவை அலைபேசி எண்   : (+965) 97872482

இணையதளம்                 : www.k-tic.com

மின்னஞ்சல் முகவரிகள்         : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com

யாஹு குழமம்                : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

Add Comment