தட்டைமுகத் தரிசனம்

மக்காவில் எழுப்பப்பட்டுள்ள மணிக்கூண்டு பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் ஒரு கட்டிடம் ரொம்ப அவசியம்தானா? என்று தோன்றியது. இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த Doxycycline online சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்த மணிக்கூண்டு எந்த வகையில் புனித மக்காவிற்குச் சிறப்பு சேர்க்கின்றது என்று தெரியவில்லை.

சவூதி அரசு என்பது வம்சாவழி மன்னராட்சியில் உள்ளது. மன்னர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்கா மற்றும் மதீனா நகரங்களின் நவீன வடிவமைப்பில் அவர்கள் காட்டி வந்துள்ள கட்டிட மோகத்திற்கு ஒரு சான்றாகவே இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடும். ஏனெனில் சராசரி மனநிலை எப்போதும் பெருவடிவங்களின் முன் எளிமையின் பேரழகை கவனத்தில் இழந்துவிடுவதாகவே உள்ளது. இங்கோ, அந்த மணிக்கூண்டின் அடியில் காபாவைப் பார்க்கும்போது ராட்சத கோலியாத்தின் முன் சின்னஞ்சிறு தாவூது (அலை) நிற்பதைப்போல் உள்ளது.

உலகப் பொருட்களின் அங்காடிகள், நவீன விடுதிகள் என்று ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எல்லா வசதிகளும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ளன. இப்போது உலகின் மிக உயரமான மணிக்கூண்டு வேறு. போகும் போக்கைப் பார்த்தால் ஹஜ் செல்வதை ஏதோ டிஸ்னி லேண்டுக்குப் போவதைப் போல் ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்ராஹீம் நபி (அலை) காபாவைக் கட்டியது ஐயாயிரம் வருடங்களுக்கு முன். சுற்றிலும் வெறும் வனாந்தரம். நடுவிலே காபா. அது ஒரு கச்சிதமான வடிவத்தில்கூட இல்லை. நன்கு சுவர்களும் அளவெடுத்துக் கட்டியதாக இல்லை. கொஞ்சம் கோணலாக இருந்தது என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடத்தைத்தான் இறைவன் தன் வீடு என்று கூறிச் சிறப்பளித்தான். கச்சிதமாக இருக்கிறதா அல்லது கோணலாக இருக்கிறதா என்பதல்ல அளவுகோல். அதைக் கட்டியது ஒரு இறைத்தூதர். அதுதான் விஷயம். ஒரு இறைத்தூதரின் கைகள் கோணலாகக் கட்டினாலும் அது இறைவனின் இல்லம்தான். சுலைமான் நபி (அலை) ஜெருசலேமில் கட்டிய இறையாலயம் கச்சிதமான கட்டிடாமாகும். அவர்கள் மாமன்னராக இருந்தார்கள். ஒரு அரண்மனைக்குரிய ஏற்பாடுகளுடன் இறையில்லத்தைக் கட்டினார்கள். அதுவும் இறையில்லம்தான். அது கச்சிதமாக இருந்ததால் அல்ல. அது ஒரு இறைத்தூதர் கட்டியது என்பதால். கோடிக்கணக்கான இறையில்லங்களைக் கட்டுவது விஷயமல்ல. எந்த மனநிலையில் ஒரு இறையில்லக் கட்டிடம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதுதான் இறைவனின் அங்கீகாரத்தைப் பெறும். இதைக் காபாவின் உருவாக்கமே நமக்குக் காட்டுகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டியபோது காபாவின் கட்டிட அமைப்பு மிகவும் எளிமையானதாக இருந்தது. பின்னால் வந்த அரபிகளுக்கு காபாவில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் மலர்ந்தது போலும். எனவே காலப்போக்கில் அதில் கூடுதலாகப் பல சிலைகள், அதாவது முன்னூற்றி அறுபது சிலைகள் நிறுவப்பட்டு மக்கள் தூல வணக்கத்திற்கு வந்துவிட்டார்கள். மக்களின் சிந்தனையை மீண்டும் அருவ வழிபாட்டிற்குத் திருப்பவேண்டிய நிலை வந்தபோது நபிகள் நாயகம் அந்தச் சிலைகளை எல்லாம் நிர்மூலப் படுத்தினார்கள். இப்ராஹீம் நபி அவர்கள் கட்டியபோது இருந்த நிலைக்கே காபா திருப்பப்பட்டது. காபாவைச் சுற்றிலும் சில சிறு மண் வீடுகள் தோன்றியிருந்தாலும் அவை காபாவை விடப் பெரிதாக இல்லை. எனவே காபா அந்த அரபு வனாந்திரத்தில் தன்னை முழுவதுமாகப் பரந்து விரிந்த வானத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு நின்றது. அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நின்றுவந்துள்ளது. ஆனால் அது இன்று மிகப்பெரிய நவீன கட்டிடத்திற்குள் உள்ளடங்கி ஒரு ஆஜானுபாகுவான மணிக்கூண்டை அண்ணாந்து பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது. இது வஹ்ஹாபிய உளவியலின் தோற்றம்தான்!

வஹ்ஹாபிய உளவியல் என்பது “டைட்டானிக்” கப்பல் கட்டிய அமெரிக்க உளவியலைப் போன்றதுதான். “உலகிலேயே பெரிசு என்னிடம்தான் உள்ளது” என்று மார்தட்டிக் கூவவேண்டும். அதில் அதற்கு ஒரு தனிப் பெருமையும் அலாதியான சுகமும் உள்ளது. எளிமைக்கெல்லாம் அதன் அகராதியில் அர்த்தமே கிடையாது!

உண்மையில் காபா உருவாக்கும் சமய உணர்வெழுச்சி, ஆன்மிக மனநிலை என்பது அது நிற்கும் மண்ணோடு மட்டும் தொடர்புடையது அல்ல. காபாவின் மேல் பரந்து உயர்ந்து கவிந்து நிற்கும் வான வெளிக்கும் அதில் முக்கியமான பங்கு உண்டு. காபாவின் மாற்றப்படக்கூடாத ஒரு பரிமாணமாகவே அதன் மீது வானவெளி வியாபித்து நிற்கும் அமைப்பை நான் காண்கிறேன். அந்த நீல விதானம் எந்தக் கட்டிடத்தின் குறுக்கீடும் இன்றி ஹஜ்ஜிற்கு வருபவர்களின் பார்வைகளை இழுக்கவேண்டும்.
அப்போது அது உருவாக்கும் மனநிலை, மணிக்கூண்டு போன்ற கட்டிடங்கள் காபாவிற்கு அருகில் நிற்கும் நிலையில் உருவாக முடியாது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கூறு காலம் பற்றியது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே ஓர் ஒற்றைக்காலத்தில் இருப்பதாகப் பார்க்கும் பார்வைதான் மக்காவையும் மதீனாவையும் நவீன கட்டிடக்கலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பழைய அரபி இனத்திற்கென்று தனியாகச் செவ்வியல் கட்டிடக்கலை எதுவும் கிடையாது. இன்று அராபிஸ்க் (Arabesque) என்று அழைக்கப்படும் கட்டிடக்கலைக் கூறுகள் – பூ வேலைப்பாடுகள், ஜியோமிதிக் கோலங்கள் போன்றவை – எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் அரேபியாவில், குறிப்பாக காபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் இருக்கவில்லை. அவை பாரசீகக் கலையுலகிலிருந்து பின்னால் அரபுலகம் வரித்துக் கொண்டவை. அவற்றை இஸ்லாமியக் கூறுகளாக மாற்றியது சூபிகள்தான். நபிகள் நாயகத்தின் காலத்தில் காபாவின் சுற்றுப்புறமும் சரி, மஸ்ஜிதுன் நபவியின் அமைப்பும் சரி, எந்தக் கலையலங்காரமும் இல்லாமல் மிக எளிமையான நிலையிலேயே இருந்தன. அந்த எளிமை இன்று இல்லை. தங்கப் பூச்சுக்கள் அலங்கரிக்க மக்காவும் மதீனாவும் வாட்டிகன் போல் மாற்றப்பட்டுள்ளன. கட்டிட வேலைப்பாடுகளில் அவை தாஜ்மகால் போன்ற கட்டிடங்களின் கலையமைப்பைப் பின்பற்றுகின்றன. இந்தப் புறச்சூழலில் ஹாஜி எவரும் நபிகள் நாயகத்தின் காலச் சூழலை அங்கு உணரமுடியாது. ஹஜ்ஜில் அடைந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அனுபவத்திற்கு இந்த நவீனப் புறச்சூழல் மிகப்பெரிய தடையாக இருக்கும்!

ஆனால் வஹ்ஹாபிகளுக்கு காலம்-வெளி உருவாக்கும் அகநிலை, உள்ளுணர்வு போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியில் உள்ளம் எல்லாம் தடித்துக்கொண்டு அரிப்பெடுத்துவிடும். எனவே மக்காவிலும் சரி மதீனாவிலும் சரி, தொன்மைச் சூழலைப் பேணுவதற்குப் பதிலாகத் திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். உதாரணமாக, நபிகளாரின் குடும்பத்தாரும் தோழர்களும் வாழ்ந்த வீடுகளையெல்லாம் நூலகம், மருத்துவமனை போன்ற அலுவலகங்களாக மாற்றியுள்ளார்கள். அதாவது சும்மாக் கிடக்கும் இடத்திற்குப் பயன்பாட்டினை உருவாக்குகிறார்களாம்! இவ்வாறாக, மக்கா மற்றும் மதீனாவில் காணப்படுவது வஹ்ஹாபிசத்தின் தட்டையான அராஜக முகம்தான்!

Add Comment