கணவன்-மனைவிக்கிடைய உள்ள உறவின் வெளிப்பாடு பற்றிய இஸ்லாமிய வரலாறு

கணவன்-மனைவிக்கிடைய உள்ள உறவின் வெளிப்பாடு பற்றிய இஸ்லாமிய வரலாறு

ஜாஹிலிய்யாக் காலத்தில் கணவனும் மனைவியும் நஹம் என்ற ஒரு சிலையை வணங்கிக் கொண்டிருந்தனர். கணவர் அந்த சிலையிடத்தில் சென்றார். அதற்குப் பாலை ஊற்றிவிட்டு வந்தார். பின்னர் திரும்பி அதனிடத்தில் சென்றபோது ஆச்சரியமான ஒரு காட்சியைக் கண்டார். ஒரு நாய் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. பின்னர் சிலையின் மேல் சிறுநீர் கழித்தது. அவர் அந்த சிலையின் தெய்வீகத்தன்மை குறித்து சிந்திக்கலானார். பின்னர் சிலையைப் பார்த்து, “நஹமே அறிந்துகொள், என்னிடத்தில் கண்ணியமுடையதாய் நீ இருந்தாய். நான் உன்னை நாய் நக்குவதைக் கண்டேன். உன்னால் அதனைத் தடுக்க முடியாமல் போனது” என்று கூறினார்.

இதனைக் கேட்ட அவரது மனைவி அவர்களுடைய கடவுளின் கோபத்திற்குப் பயந்தார். அவருடைய கடவுளை தூற்றியதற்காக கணவனை எச்சரித்தாள்.

“நீங்கள் ஒருபாவத்தை செய்து விட்டீர்கள். நீங்கள் நஹமை பரிகசித்ததால் பெரும் பாவமொன்றை செய்துவிட்டீர்கள்.”

கணவன் நடந்தவற்றை கூறினான். பின்னர் மனைவி, தனக்கு ஏற்படுகின்ற தீங்கைக் கூட தடுக்க முடியாத இந்த கடவுளுக்குப் பகரமாக நாம் வணங்கக் கூடிய உண்மையான ஓர் இரட்சகனை தேடுங்கள் என்று கூறினாள். இங்கு கணவன் மனைவிக்கிடையில் நடைபெற்ற உரையாடலில் பின்வரும் நான்கு விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1. புரிந்துணர்வு
2. உரையாடல்
3. கவனயீனம்
4. சத்தியத்திற்குத் திரும்புதல், மற்றையவரின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

மனைவி கணவனிடம் நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள் என்று கூறியபோது கணவன் அடிப்படைப் பிரச்சினையை மறந்துவிடவில்லை. அவளைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக உடனடியாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகின்றார். நடந்தவற்றைக் கூறுகின்றார். மனைவியும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றார்.

அந்தக் கணவர்தான் அபூதர் அல் கிபாரி (றழி) அவர்கள். அவர் உடனடியாக கண்மணி நாயகம் ரஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தர்ரின் தாயார் உண்மையை கூறினாள். வழிகேடர்களே கற்களை வணங்குவார்கள் என்று கூறினார்கள்.

அபூதர் அல் கிபாரி (றழி) அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் தன்னுடைய சகோதரரிடம் சென்று தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விஷயத்தைக் கூறினார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் தனது தாயாரிடம் சென்று அதனை எடுத்துரைத்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் தனது மனைவியிடம் சென்றார். அவர் அழகிய முறையில் கணவனை வரவேற்றார். வாருங்கள் நீங்கள் அவரை சந்தித்தீர்கள், அவரோடு பேசினீர்கள், பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்கள் எனக் கூறினார்.

அதன் பின்னர் தனது சமூகத்தவர்களிடம் அபூதர் (றழி) சென்றார்கள். அவர்கள் தமது தலைவருடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி சொன்னார்கள். அவர்களது தலைவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்களில் அதிகமானோரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்றபோது அபூதர் (றழி) அவர்கள், கிபார் பிரதேச வீதியில் நின்று கொண்டு அதில் செல்வோரிடத்தில் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். அனைத்து கிபார் வாசிகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஒருநாள் அபூதர் (றழி) அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று நான் மந்தைகளை மேய்க்கச் செல்ல விரும்புகின்றேன் என்றார்கள். அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உங்களுக்கு பாதுகாப்பில்லை. ஐனாபின் ஹிஸ்ன் கோத்திரத்தினர் உங்களைத் தாக்குவார்கள் என்று கூறினார்கள். அக்காலப் பகுதியில் முஷ்ரிக்குகள் முஸ்லிம்களை தாக்கிக் கொண்டிருந்தனர். அபூதர் (றழி) அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பிடிவாதமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான் உங்கள் மகன் கொல்லப்படுவதையும் உங்கள் மனைவியை அவர்கள் கைது செய்வதையும் நீங்கள் ஒரு தடியை ஊன்றியவாறு வருவதையும் காண்கிறேன் என்றார்கள். அபூதர் (றழி) அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடும் என்பதனாலே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த போதும் அபூதர் (றழி) அவர்கள் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்தார்கள். பின்னர் தனது மனைவியையும் மகனையும் கூட்டிக் கொண்டு மதீனாவிற்கு வெளியே சென்று மந்தைகளை மேய்த்து விட்டு மஃரிப் நேரத்திற்கு பாலுடன் திரும்பி வருவார்.

ஒருநாள் இரவில் பனூ நஷாரா கோத்திரத்தினர் மந்தைகளைத் தாக்கி அபூதர் (றழி) அவர்களின் மகனையும் கொன்றனர். அத்துடன் அவரது மனைவியையும் கைது செய்து சென்றனர். அவர்களுக்குப் பின்னால் ஸல்மான் என்ற ஸஹாபி சென்றார். அவர் ரஸூலு ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். பின்னர் இன்னும் சில ஸஹாபாக்களுடன் சென்று அபூதர் (றழி) அவர்களின் மனைவியையும் மந்தைகளையும் மீட்டுக்கொண்டு வந்தனர். அபூதர் (றழி) அவர்கள் போராடிய களைப்புடன் ஒரு தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். யா ரஸூலல்லாஹ்! ஆச்சரியமாக இருக்கின்றது. நீங்கள் கூறியது நடந்துவிட்டது என்று கூறினார்.

அபூதர் (றழி) அவர்களின் மனைவி மிகவும் கஷ்டப்பட்டிருந்தார். இன்றைய எமது பெண்களாக இருந்திருந்தால் கணவனை கடுமையாகத் தூற்றியிருப்பார்கள். நிந்தித்திருப்பார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இவ்வாறு உங்களுக்கு சொல்லவில்லையா என்று கேட்டிருப்பார். நீங்கள் அவரின் பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் எங்களுடைய மகன் கொல்லப்பட்டிருக்கமாட்டான். நான் கைது செய்யப்பட்டிருக்க மாட்டேன். நீங்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறியிருப்பார்கள். இதனால் சிலவேளை திருமண உறவு தலாக் வரை சென்றிருக்கும்.

என்றாலும் அபூதர் (றழி) அவர்களின் மனைவி பொறுமையாக இருந்தார். அவருக்கு வைக்கப்பட்டிருந்த புனைப்பெயருக்கு அவர் பொருத்தமாக இருந்தார். அவரது புனைப் பெயர் உம்முல் ஹைர் என்பதாகும். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகின்றேன். ஒருவர் திருமண வாழ்வின் சந்தோஷம் எதிலிருக்கின்றது என்று கேட்டால் நான் மிக உறுதியுடன் இவ்வாறு கூறுவேன்:

1. திருமண வாழ்வின் மகிழ்ச்சியின் அரைவாசி திருப்தியில் இருக்கின்றது. ஒருவர் மற்றையவரின் சிறப்பம்சங்களையும் குறைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது அரைப்பகுதி ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதிலும் நியாயம் கண்டு கொள்வதிலும் இருக்கிறது.

சில வருடங்கள் கடந்தன. அபூதர் (றழி) அவர்கள் தனது மனைவியுடன் டமஸ்கஸிற்குச் சென்றார். அங்கு மக்கள் உலக விஷயங்களில் மூழ்கியிருப்பதைக் கண்டார். ரஸூஸ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அவர் கவர்னராக இருந்த முஆவியா (றழி) அவர்களிடம் சென்று கடுமையாக வாதிட்டார். இவ்விஷயம் கலீபா உஸ்மான் (றழி) அவர்களிடம் முறையிடப்பட்டது. அபூதர் (றழி) அவர்கள் மக்கள் வாழாத ரப்தா என்ற பிரதேசத்திற்கு செல்வதற்குத் தன்னை அனுமதிக்குமாறு கலீபாவிடம் வேண்டினார். அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் வேறு பெண்களாக இருந்தால் கடுமையாக வாதிட்டிருப்பார்கள். ஒருவரும் வாழாத ஒரு பாலைவனத்திற்குச் செல்வதற்கு எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். ஆனால் அபூதர் (றழி) அவர்களின் மனைவி எவ்வித மறுப்பும் சொல்லாமல் அவருடன் சென்றார்.

அபூதர் (றழி) அவர்களுக்கு சுகவீனம் அதிகரித்தது. அவரது மனைவி இரவில் விழித்திருந்து அவரைக் கவனித்தார், அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தார். அவருக்கு மரண வேதனை வந்த போது அழுதார். அப்போது அபூதர் (றழி) அவர்கள் ஏன் அழுகின்றீர்கள் என்று கேட்டார். அதற்கவர் நீங்கள் ஒரு பாலைவன மண்ணில் மரணிக்கும்போது நான் அழாதிருக்கலாமா? உங்களுக்கு கபன் செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லாத நிலையில் உங்களை அடக்கம் செய்வதற்கு எனக்கு முடியாதிருக்கும் நிலையில் நான் அழாதிருக்கலாமா? என்று கூறி விட்டு பெருமானார் கண்மணி நாயகம் ரஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய இந்த வாசகத்தை நினைவு கூர்ந்தார்கள். அபூதர் மீது அல்லாஹ் அருள் பாலிக்கட்டும். அவர் தனியாக நடந்துசெல்வார். தனியாகவே மரணிப்பார், தனியாகவே எழுப்பப்படுவார்.

அபூதர் (றழி) அவர்களது மனைவிக்கு சுபசோபனம் உண்டாகட்டும். எனது தோழர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான் மரணிக்கும்போது அதனை முஃமின்களில் ஒரு கூட்டத்தினர் பார்ப்பார்கள் என்று வாக்களித்திருக்கிறார். பாதையைப் பாருங்கள். தனது நபி வாக்களித்தவற்றிற்கு அல்லாஹ் மாறு செய்யமாட்டான். அவரது மனைவி எழுந்துசென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் மீண்டும் சென்று பார்க்குமாறு கேட்டார். மனைவி மீண்டும் சென்று பார்த்து விட்டு வந்தார். பின்னர் எழுந்து சென்று பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பி வந்து தான் கண்ட ஒரு பயணக் கூட்டத்தை சுட்டிக் காட்டினார். அவர்களுக்கு மத்தியில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (றழி) அவர்கள் இருந்தார்கள்.

கணவன் மனைவிக்கிடையில் எத்தகைய முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவர்கள் அதனை சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகக் காணப்படுகிறது. இந்த சம்பவம் கண்களில் Buy cheap Ampicillin வரவழைக்கும் துளிகளை விடவும் எமது வாழ்க்கையில் ஏற்படுத்த வேண்டிய தாக்கங்கள் தான் முக்கியமானவை. அல்லாஹ் எமது திருமண வாழ்வில் அருள்பாளிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு,
க.கா.செ.

Add Comment