திசம்பர் 6 – (வி.எஸ்.முஹம்மது அமீன்)

நவீன தமிழ் இஸ்லாமிய சிறுகதை வரலாற்றின் ஓரத்தில் ஒளிந்துகிடக்கும் எழுத்தாளர்களில் கடையநல்லூரைச் சார்ந்த வி.எஸ்.முஹம்மது அமீன் குறிப்பிடத்தக்கவர். சிறுகதை,கவிதை,கட்டுரை என படைப்பிலக்கியத்தில் இயங்கி வருபவர். 2000 ஆம் ஆண்டு சமரசம் இதழில் வெளிவந்த இச் சிறுகதை வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. முஹம்மது அமீனின் சிறுகதைத் தொகுப்பான பதிவு செய்யப்படாத மனிதர்கள் நூலில் இக்கதை முக்கியமானது.
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய கலாப்ரியா “அமீனுடைய கதாபாத்திரங்கள்தான் அவருடைய வலு என்று தோன்றுகிறது. எல்லாருமே நம்முடன் வாழ்கிற நம்மிடையே நடமாடுகிறவர்கள்தான். அவர்களுடைய எல்லா வலிகளையும் அமீன் நன்கு கவனித்திருக்கிறார். ஜெயகாந்தன், வண்ண நிலவன் ஆகியோருக்கு “விவிலிய பாஷை” (Bible Language) வாய்த்திருப்பது போல் அமீனின் கதைகளில் அருமையான “திருமறை நடை” (Quranic Language)யொன்று மிளிர்கிறது. ஆனால் அது வலிந்து செயல்படவில்லை. மிக இயல்பாக வருகிறது. அமீனின் பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருகிறேன்.அவற்றில் ஒரு கூர்மையான தொனியிருக்கும். அதே தொனியை அவர் கதைகளிலும் பார்க்க முடிகிறது.அவரது கதைகளின் களங்கள் மிகவும் பரந்துபட்டவையாக உள்ளது ஒரு சிறப்பு.இது அவரது பார்வை விசாலத்தை, அது தான் வாழும் சமுதாயம் பற்றி மட்டுமே இயங்காமல் பல்வேறு சமுதாய தளங்களிலும் பயணம் செய்கிறது. காட்டுகிறது.
இந்த முன்னுரையை வெறும் உபசரிப்பு வார்த்தைகளால் நிரப்பிவிட வேண்டிய அவசியமில்லாமல் மனதாரப் பாராட்டும்படியாக மனதைக் கவர்கிற விஷயங்களை மனதைக் கவர்கிற மொழியில் தனித்த நடையில் எழுதியிருக்கிறார் நண்பர் அமீன். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்.இன்ஷா அல்லாஹ்” என்று குறிப்பிடுகிறார்.
13 ஆண்டுகள் கடந்தாலும் மனதில் நிற்கும் கதையாக இது அமைந்துள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதம் இக்கதைக்கான பொறுத்தமான காலம் எனக் கருதுகிறேன்.
நன்றி
நட்புடன்
———————————————————————————————————————————————
திசம்பர் 6
வி.எஸ்.முஹம்மது அமீன்
 “அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானி ஃபீ பதனி வரத்த அலைய்ய ரூஹு வ அதின லி பிதிக்ரிஹ்”
அப்துல்லாவின் உதடுகள் முணுமுணுத்தன. உள்ளங்கைகளை சூடேற உரசி முகத்தில் தடவிக் கொண்டார். மெல்ல இமை நீக்கினார். மங்கலாய்த் துலங்கிய காட்சிகள் தெளிவுற்றன. கையூன்றி எழுந்தார். எவ்வளவு அழகிய பிரார்த்தனை. ‘எனது உயிரைத் திருப்பித் தந்து எனது உடலுக்கு சுகத்தை வழங்கி அவனையே நினைவு கூர அனுமதியளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்’ – இன்று நேற்றல்ல நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாயிற்று, காலைக் கண்விழிக்கையில் இந்தப் பிரார்த்தனையின்றி எழுந்ததில்லை. கீழ முஹல்லா பேஷ் இமாமிடம் எழுதி வாங்கி மனப்பாடம் செய்த துஆ இது. படுக்கும் போது துஆ, சாப்பிடும் போது, நடக்கும்போது…வாழ்வின் எல்லா அசைவுகளுக்கும் பிரார்த்தனை இருந்தது.
அப்துல்லா அசந்து தூங்கியதில்லை. கோழித்தூக்கம்தான். நாலு மணிக்கே முழிப்புத் தட்டிவிடும். புரண்டு நெளிந்து நாலேகாலுக்கு எழுந்துவிடுவார். தோடம் போய்விட்டு மிஸ்வாக்கால் சொச்சமுள்ள கறை படிந்த பற்களை தேய்த்துத் தேய்த்துக் கொப்பளிப்பார். ஒளுச் செய்துவிட்டு தொழுகைக்காக பள்ளிவாசலுக்குக் கிளம்பி விடுவார்.
திண்ணையிலிருந்த சாக்குப் படுதாவை விலக்கியபோது சுப்ரமணியன் நின்று கொண்டிருந்தார். அந்நேரத்திற்கே குளித்து தெளிவாய் நின்றிருந்தார். கையில் சின்ன சாக்கு மூட்டை.
“வாங்க… என்ன அண்ணாச்சி காலங்காத்தால…”
“ஒண்ணுமில்ல பாய் புள்ளையாண்டன் விஷயமாய் வெளியூர்வரை போகணும். இதுல கொஞ்சம் ஜாமான் இருக்கு. திரும்பி வர்ற வரையிலும் உங்க கிட்ட இருக்கட்டும்னு பாக்றேன். உங்களுக்குச் சிரமமில்லேனா…”
“என்ன அண்ணாச்சி சிரமம்..கிரமம்ன்னுகிட்டு. நம்ம வீட்ல எதுவேண்னாலும் வெச்சுக்கலாம். உங்களுக்கில்லாததா..? ஆமா…வீடு எதுவும் அமைஞ்சுதா?”
“அதையேன் கேக்குறீங்க… கையில இருந்த வெண்ணய குடுத்துட்டு நெய்க்கு அலைஞ்சாப்புல, இருக்கிறத விட்டுட்டு அலைய வேண்டியதாய்ப் போச்சு. எல்லாம் அந்தப் பயலால வந்த வென, உங்க துப்புல வீடு வந்தாச் சொல்லுங்க…”
“ சரி… அவளையாவது ஒழுங்கா வெச்சு கஞ்சி ஊத்துவானா?”
“ நமக்கு வேண்டாத சட்டி இருந்தா என்ன, ஒடஞ்சா என்ன..? வாக்கு மாறுன பய எப்படியும் தொலையட்டும்ணு விட்டுட்டேன்.”
-சுப்ரமணியின் வார்த்தையில் இயலாமையின் கோபக்கணல் தெறித்தது. கடந்த ஐம்பது ஆண்டுகால நிகழ்வுகளையும் அப்துல்லாவிடம் பரிமாறியிருக்கிறார். அந்தப் பரிமாற்றப் பதிவுகள் அப்துல்லாவின் நினைவுக்குதிரில் கசிந்தோடியது. ஜோதியைத் திட்டினார். அப்துல்லாவின் திட்டுதல்களில் சுப்ரமணியன் ஆறுதலானார்.
“பாய்…. கொஞ்சம் பத்திரமா பாத்துக்குங்க… ரெண்டு நாள்ல திரும்பிடுவேன்.. வரட்டுமா..?”
-சாக்குமூட்டை கைமாறியது.
“டீ சாப்பிட்டுப் போலாமே..!”
“உங்களுக்கு தொழுகை நேரமாச்சுன்னு நினைக்கிறேன். போறப்ப பஸ்ஸ்டாண்டுல சாப்பிடுக்கிறேன்..”
-சுப்ரமணியன் கிளம்பினார். சுப்ரமணிக்கான ஒரு கரிசனம் அப்துல்லாவிற்குள் புகுந்து கொண்டது. மனுசன் இத்தினி உழைச்சும் இல்லன்னு போயிடுது. சே… என்ன மனுசங்க… வார்த்தைகளை மென்று கொண்டே அந்த சிறிய மூட்டையைத் தூக்கினார். ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. உள்ளே தூக்கி மூலையில் வைத்தார். பள்ளிவாசலை நோக்கி நடைபோட்டார். முன்புபோல் நடக்கமுடியவில்லை. நடை தளர்ந்துவிட்டது. பனி வாடை காதுக்குள் இறங்காமல் இருக்க காதோடு சேர்த்து தலைப்பாகை கட்டிக்கொண்டார்.
அதிகாலை தெரு பார்ப்பதற்கே தனி அழகுதான். இருளும் வெளிச்சமும் கை குலுக்கிக் கொள்ளும் நேரம். தெரு முக்கு திரும்பியதும் அப்துல்லாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
பேப்பர் போடுகின்ற சைக்கிள்பையன், பால்காரன், அப்பம் சாயா வாங்கப் போகும் தூக்குவாளிப் பெண்கள், ஊருணிக்குப் போகும் வறுமை வீட்டு வயசுப் பெண்கள் மற்றும் தொழப்போகிறவர்கள். .. வழக்கமாக இவர்களைத் தவிர இன்று புதிதாய் போலீஸ் நடமாட்டம்.
அப்துல்லாவின் ஆச்சரியக்குறி கேள்விக்குறியாய் வளைந்தது.
ஏன்? எதற்காக? அதுவும் இந்த நேரத்தில்? நிறையக் கேள்விகள் எழுந்தன. விடை தெரியா வினாக்கள் கழுதையாய் கனத்தது. எதிர்ப்பட யாரும் இல்லா நேரத்தில் யாரிடம் கேட்பது? நடை விரைந்தது. செருமினார். திக்ரு ஓத மறந்து கேள்விகளூடே பள்ளிவாசலை நெருங்கினார்.
பாங்கு சொல்ல நேரம் இருந்தது. செருப்பைக் கழட்டிவிட்டு காலைக் கழுவினார். ஒன்றிரண்டு வழக்கமானவர்கள் முந்திக்கூட்டியே பள்ளிவாசலுக்கு வந்திருந்தார்கள். நுழைந்ததும் கஸ்ஸாலிப்பாவிடம் கேட்டார்.
“ என்னவே போலீஸ்காரன் நிக்கிறான். ஏதாவது அசம்பாவிதமா?”
“ நான் பாக்கலியே…. என்னமோ யார் கண்டா..?”
-வெள்ளத் தொப்பி மீறாஷா மூக்கை நுழைத்தார்.
“எங்னவே போலீஸ் நிக்குது?”
“கல்தைக்கா buy Lasix online கிட்டத்துல ரெண்டு மூணு போலீஸ்காரங்க நின்னானுங்க.. சுத்துக்கும் ஒரு அரகத்தையும் காணோம்…”
“ நா வரும்போதுகூட ஒரு ஜீப்பு போச்சு… யாரேயும் திருவந்தரம் போவாங்கன்னு நினைச்சேன். இப்ப நீங்க சொல்றதப் பார்த்தா… போலீஸ் வேனாத்தான் இருக்கணும்..”
– தொழுகை நேரமானது. யாரிடமும் பேச முடியவில்லை. தொழுதுவிட்டுத் திரும்பினார். இருள் விலகியும்கூட கேள்வியின் திரை விலகவில்லை. சோனையன் சாயாக் கடைக்குப் போனால் விடை கிடைத்து விடும்.
சாயாக் கடையில் உப்புமா தின்றும் அப்பத்தைச் சீனியில் புரட்டிக் கொண்டும், சாயாவை சூடாய் உறிஞ்சிக்கொண்டும் வம்பளந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்பீக்கரில் நாகூர்ஹனீஃபா இரைந்து கொண்டிருந்தார். அப்துல்லா வாயுர்த்தும் முன்னே.. ஊர்க்குருவி யூசுபு விஷயத்தைச் சொல்லிவிட்டார்.
“அத்துலா மச்சான் உங்களைத்தான் நெனச்சிட்டிருந்தேன். நம்ம ஹமீதை ரெண்டு மூணு நாளைக்கு பேணிக்கையா இருக்கச் சொல்லுங்க. போலீஸ் நடமாட்டம் இருக்குது…”
தீயள்ளிக் கொட்டிய மாதிரி இருந்தது அப்துல்லாவுக்கு.
“என்னடேய் சொல்ற.. எம் மவன் என்ன தப்பு பண்ணுனான்?”
“என்ன மச்சான் பதருறியோ.. டிசம்பர் ஆறாம் தேதி வருது. நம்ம பாபர் மசூதி இடிச்ச நாள். இந்த வருஷம் ஊர்வலம், கலவரம்னு ஏதும் வந்திடக்கூடாதுன்னு சந்தேகப்படுற மாதிரியான பையன்களை முன்னெச்சரிக்கையா கைது பண்றாங்க. ஒம் மவன் வேற சுன்னத்தைக் காப்பாத்துறேன்னு தாடி வேற வெச்சிருக்கானா… அதான் சொன்னேன்…”
“யா ரப்பே…! என்ன சோதனை இது…! பள்ளிவாசலை இடிச்சது தாங்க முடியாத வேதனைன்னு அல்லாடுறோம். ஒவ்வொரு வருஷமும் இது வேற அதாபாப் போச்சு.”
சாயாக்கடை கருத்தரங்க மேடையானது. முக்கடி ஊட்டு சாய்புக்கு பேச்சுன்னா போதும்… உப்புமாவை மொக்கிக் கொண்டே பேசினார்.
“வெவகாரத்த முடிக்கத் துப்பில்ல…இதுல மட்டும் உஷாரா இருப்பாங்க… தப்புப் பண்றவன்லாம் ராசா மாதிரி திரியறான். ஒரு எளவுந் தெரியாத நம்ம பையன்மார்களைப் புடிச்சு உள்ள தள்ப்ளிடுறாங்கோ…”
“எல்லாம் நல்லதுக்குத்தாங்க.. வெவரந் தெரியாத நம்ம பையன் மார்களை ஜெயில்ல போடப்போய்தான்…இப்ப ஜெயில் போலீஸ்ங்ற ..பயமெல்லாம் இல்லாமப் போச்சு..”
“கூறுகெட்டுப்போய் பேசுறியே….வயத்தப் பத்தி எரியயில.. பயித்துப் பத்து நூறுன்னானாம்…”
“பாம்பு கடிச்சு செத்தவனைவிட பாம்பப் பாத்து பயந்து செத்தவந்தான் அதிகம். அதுமாதிரி கலவரத்துனால, பாதிக்கப்படுறத விட… கலவரம் வருமா வராதான்னே பயந்து சாக வேண்டியதாப் போச்சு…”
“இதுல கொடும என்னான்னா…. ஊடு ஊடா சோதனை போடப்போறாங்களாம்…”
“ஊர் ஜமாத் தலைவர பேசச் சொல்லணும். மனுச மக்க நிம்மதியா குடித்தனம் பண்ண முடியாது போலிருக்கு. பெண்டு புள்ளைய இருக்குற எடத்துல என்ன சோதனை வேண்டிக் கெடக்கு. நாம அப்படி என்ன தப்பு பண்ணிட்டோமாம்?”
“எவனோ ஒருத்தன் திருடிட்டான்னா… அவனப் புடிச்சு கொல்லணும். அத உட்டுட்டு… அவனோட ஊடு, குடும்பம், வட்டாரம், அவனோட சமுதாயத்தையே திருட்டுப்பட்டம் சொல்லி துளாவுறதுல என்ன ஞாயமிருக்கு…?”
“சோதனை போடட்டுமே…! என்ன எடுக்காங்கண்ணு பாப்போம்…”
“தாடி வெக்க வழியில்ல… ஒரு பையத்தூக்க வழியில்ல… எல்லாம் அல்லாஹ்வோட சோதனை..”
-அப்துல்லாவிற்கு சாயாக் குடித்தது போல இல்லை. அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து சோர்வாய் நடைபோட்டார். எந்த நேரமும் விசாரிக்கப் படலாம். எதற்கும் பேணிக்கையாக இருக்கச் சொல்லணும். டிசம்பர் ஆறுக்கு இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன.
“எப்படி இந்தப் பேராற்றைக் கடக்கப் போகிறோமோ தெரியவில்லை. அல்லாதான் லேசாக்கி வைக்கணும்..”
அப்துல்லாவின் மூச்சுக்காற்றில் உஷ்ணம் கசிந்தது. அந்த உஷ்ணக் கசிவில் இதயம் தீப்பிடித்து போன்றிருந்தது. இருமினார்.
வீட்டிற்கு வந்தபோது ஹமீதைக் காணவில்லை. அவன் இன்னும் வரவில்லை. ஹமீது வீட்டில் படுப்பதில்லை. குத்பா பள்ளி ஆபீசில் படுத்து விட்டு காலையில்தான் வருவான். நாஷ்டா முடித்து விட்டு வேலைக்குப் போய்விடுவான். எம்.ஆர். மெடிக்கலில் மாதம் ஐநூறு சம்பளத்திற்கு நிற்கின்றான். காலையில் விட்டால் மதிய சாப்பாட்டுக்குத்தான் வருவான்.
வழக்கம்போல அப்துல்லா கண்மாய்க்குப் போனார். காலைக் கடன்களை முடித்துவிட்டு சாவாசமாய் வந்து சோனையன் கடையில் இடியாப்பம் சாப்பிட்டு விட்டுத்தான் திரும்புவார். இன்றைக்குப் பாதிக் குளியலோடு திரும்ப வேண்டியதாயிற்று. படித்துறையில் அழுக்குத் தேய்க்கும்போது செய்யதலி சொன்னார்.
“என்னவே…. அசால்டா குளிச்சிட்டிருக்கியே…. உங்க தெருவுல ஊடு ஊடாய் போலீஸ் சோதனை போடுறாங்களே…”
“உனக்கு யார் சொன்னா…? நான் இப்பந்தான அங்கயிருந்து வாரேன் அதுக்குள்ள எப்படி?”
“ நல்ல ஆளு சேந்த நானும் அங்கயிருந்து இப்பத்தான் வாரேன். கூ…கூ..ன்னு ஒரே கூட்டம். ஜமாத்து தலைவர்லாம் பேசியாச்சு. ‘ நாங்க என்ன செய்ய முடியும்? எங்களுக்கு குடுத்த வேலையை செய்வோம். நீங்க மேல வேணும்னா பேசிப் பாருங்க… அதுவரைக்கும் சோதனை பண்ணப் போறோம்’ன்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்க. நம்ம ஆம்சா ஊட்ட சோதனை போட்டாங்க. எனக்கு அவசரமா போவணும்னு நா வந்துட்டேன்”
-செய்யதலி சொன்ன சேதியின் பாரம் அப்துல்லாவை அழுத்தியது. நூற்றுக்கணக்கான கோடாரிகள் எண்ணச் சிலந்திகளை கொத்திச் சிதைத்தது. பிரம்மையில் நீரெல்லாம் நெருப்புப் பரவியது. தலை துவட்டியும் துவட்டாமலும் நீர்ச்சொட்டல்களுடன் கைலியை மார்வரை தூக்கிப் பிடித்துக் கொண்டு விரைந்தார். எப்போதும் வேஷ்டியை காற்றில் உலர்த்திக் கொண்டே வருவார். வீடு வருவதற்குள் காய்ந்து போகும். எப்பவும் இத்தனை அவசரமாய் திரும்பியதில்லை. தெருவில் நுழைந்ததும் கூடுதலாய் பதறியது மனசு. தெரு முழுவதும் அல்லோலகல்லோலம்.
வீட்டிற்குள் போய் குத்த வைத்தார். கஞ்சிக்கு வக்கத்துப்போன இந்தப் பஞ்சப்பராரி வீட்டில் என்ன சோதனை வேண்டிக்கிடக்கு? சோதனையில் வேதனை தவிர வேற என்ன மிஞ்சப்போகிறது? தறிசெட்டு, அறுத்து வைத்த சாம்பு, பழைய டிரங்குப் பெட்டியில் கிழிசல்கள், தட்டியில் நாலஞ்சு கிழிஞ்ச பாய்கள், இரண்டு போர்வைகள், அழுக்கேறிய தலவானிகள், அரிசி வாசம் மறந்துபோன குலுக்கை, ராட்டு, புடுத்தலை, குர்ரனைகள், அலகம்புகள், ஜமீலாவின் கூடப் பாக்கெட்டு, அரிக்கேன் விளக்கு, ஒரு நோயாளி ரேடியோ இதுபோக சட்டி பானைகள், தட்டு முட்டுகள், அருவமனை, உரி, சொளவு, வேறென்ன…? ஒரு மூலை நிறைய கவலைக்குவியல் மற்றும் நூலாம் படைகள், போகறைகள்.
சோதனைபோடும் போது பொம்பள புள்ளைகள் இருப்பதற்கு இடம் ஏது? வெளியேற வேண்டும்.
“என்ன வாப்பா ஈரத்துணியக் கூட மாத்தாம யோசிக்கிறியோ…ஊருக்கு ஒத்ததுதான் நமக்கும் தூர எஞ்சிங்கோ…!”
மைமூன் பேசியதற்கு பதிலில்லை. ஹமீது எங்கே என்று தெரியவில்லை. அப்துல்லா கேட்கவுமில்லை.
அப்துல்லாவின் கசந்த மாளிகைக்குள் போலீஸ் சோதனை நடத்தியது. மும்முரமாய் எதையும் கிண்டிக் கிளரவில்லை. அவர்களை உறுத்தியதெல்லாம் ரிப்பனால் கட்டப்பட்ட சின்ன மூட்டைதான்.
“ பாய்… இதுல என்ன இருக்கு..?”
-இப்போதுதான் அப்துல்லாவின் மனவானில் ஞாபகச்சூரியன் உதித்து சுடர் விட்டான்.
“ஐயா…இதுல என்ன இருக்குன்னு தெரியாது. நமக்கு வேண்டிய ஒருத்தரோடது…அமானிதமா தந்திருக்காரு..”
“யார் தந்ததுன்னா என்ன…. திறங்க பாய்…”
“என்னோட ஜாமான்ன… நீங்க என்னன்னாலும் பண்ணலாம். என்னை நம்பி தரப்பட்ட அமானிதம் இது. அதுக்குள்ள என்ன இருக்குன்னு நெசமாவே எனக்கு தெரியாதுங்க… இதை திறக்கறதுக்கு எனக்கு உரிமையுமில்ல, நாள… நாளன்னிக்கு சுப்ரமணியன் வந்துடுவார். வந்ததும் அவர்கிட்ட கேட்டுக்குங்க…”
“என்ன பாய்…. அவர் வரட்டும் இவர் வரட்டும்ணுட்டு… யாரோடாதா இருந்தாலும் சரி..ஓப்பன் பண்ணுங்க…”
“ஸார் அவர் வந்ததும் ஒரு வார்த்த கேட்டுக்கிட்டு……”
“என்னையா இது…அமானிதம் கிமானிதம்னுட்டு….சோதனை போடுறதுக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா…?”
காக்கி கனன்றது. லாட்டி ஓங்கியது. மூட்டையைத் தட்டிப் புரட்டியது. உதைத்து நிமிர்த்தியது. மறுபடியும் ஒரு அறை. சாக்கிலிருந்து தூசி கிளம்பியது. ரிப்பன் விடுதலையானது. சாக்கு மூட்டையிலிருந்த பொருளைப் பார்த்ததும் போலீஸ் நொறுங்கிப்போனது.
உள்ளே…
ஒரு சிலை!
லாட்டியின் விளாசலில் சிலை சிதைந்திருந்தது.
-அதிர்ச்சி மின்சாரம் எல்லாரையும் தாக்கிற்று. போலீஸ்காரர் மண்டியிட்டு உடைந்த சிலைத் துண்டுகளைப் பொறுக்கினார். கைகளை குறுக்கே கட்டி உக்கி போட்டார். கன்னத்திலும் போட்டுக்கொண்டார். பாவப் பரிகாரத்திற்காக எதெல்லாமோ செய்வதாக உடைந்த சிலையிடம் வாக்குக் கொடுத்தார். சிவந்த கண்களில் குற்றப்பார்வை ஊசலாடியது. அப்துல்லாவைப் பார்த்தார்.
“என்னையா இது…. முதல்லேயே சொல்லித் தொலைக்கக்கூடாது…?”
“எனக்குத் தெரியாதுன்னு சொன்னேனே…சுப்ரமணிதான் இத பத்திரமா வெச்சிருங்க ரெண்டு நாள்ல வந்து வாங்கிக்கறேன்னாரு. என்ன ஏதுன்னு நானும் கேட்டுக்கல…அவரும் சொல்லல… இப்படி அநியாயம் பண்ணிட்டீங்களேய்யா…. நான் அந்த மனுசன்கிட்ட என்னத்தச் சொல்ல முடியும்…? யா…அல்லாஹ்…!”
போலீஸ் வெளியேறியது. அப்துல்லா சோர்ந்தார்.
“உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் பொருளை ஒப்படைத்தால் நம்பப்பட்டவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இன்னும் தன் அதிபதியான இறைவனுக்கு அவர் அஞ்சிக்கொள்ளட்டும்.”
-குர்ஆனின் வரிகள் அப்துல்லாவின் நினைவில் வலம் வந்தது. சுப்ரமணியனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? என்னை முழுமையாக நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள் அல்லவா…? இதற்கு நான்தான் பொறுப்பாளியா? சுப்ரமணியனிடம் நிலைமையைச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? நம்மைப் பொறுத்தவரை இது ஒரு பொருளாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு? அவருடைய மனநிலை என்னவாகும்? ஜீரணிப்பாரா?
கேள்விச் சூறாவளி அப்துல்லாவைச் சுழட்டியது.
“வாப்பா… நம்ம ஊட்டையும் சோதனை போட்டாங்களாமே?” கேட்டுக் கொண்டே வந்தான் ஹமீது. மகனிடம் சூழ்நிலையை விளக்கவேண்டுமென்று காத்திருந்த அப்துல்லாவிற்கு ஏனோ, இப்போது எதுவும் பேச இயலவில்லை. மனசெல்லாம் குழப்ப முடிச்சுகளால் பின்னப்பட்டதாய் உணர்ந்தார். தலையை மட்டும் அசைத்தார்.
“என்ன வாப்பா ஒரு மாதிரியா இருக்கீங்க…?”
“பெரிய தப்பு நடந்துபோச்சுடா. நம்ம சுப்ரமணியம் மாமா ஒரு மூட்டையைத் தந்து வெச்சிருக்கச் சொல்லிட்டு வெளியூர் போயிட்டார். அதுல என்ன ஏதுன்னு எனக்குத் தெரியல. போலீஸ்காரன் சோதனை போடுறேன்னுட்டு அந்தப் பொருளை அடிச்சு உடைச்சுட்டான்…”
“இப்ப என்ன செய்யப் போறீயோ..? போலீஸ்ட்டச் சொல்லி வேற எடுத்துக் கேக்க வேண்டியதுதானே…?”
“அவனுக்கென்ன அவம்பாட்டுக்கு போயிட்டான். நம்மள நம்பி ஒப்படச்ச பொருள். சுப்ரமணியன்கிட்ட சமாதானமாய் சொல்லுவோமா..?”
“ஸாரியும் சமாதானமும் வேதனையை துடைச்சுடுமா…? உடைஞ்ச பொருள் ஒட்டிக்குமா? அமானத்தான பொருள்கள உரியவங்ககிட்ட ஒப்படைச்சிடுங்கன்னு அல்லா கட்டளையிடுறான். எவ்வளவுனாலும் பரவால்ல… கடன உடன வாங்கியாவது புதுசு எடுத்துக் குடுத்திடணும்…”
“செலயெல்லாம் எங்க போய் வேங்க முடியும்…? அத கடையில விப்பாங்களா.? இல்ல செய்ற இடத்துல போய் வேங்கணுமா…?”
“என்ன வாப்பா செலை அது, இதுன்னு என்னல்லாமோ உளர்றியோ…?”
“சுப்ரமணியன் நம்மகிட்ட தந்து வெச்ச பொருள் ஒரு செல! அதத்தான் போலீஸ்காரங்க அடிச்சு உடைச்சுட்டாங்க…”
ஹமீது அஜீரணமானான்.
“செலை வாங்கறதும் விக்கிறதும் தப்புப்பா… நீங்க எதுக்கு இதெல்லாம் வேங்குறீங்க..?”
“புரியாம பேசாதல, நான் என்னமோ நம்ம வீட்டுக்கு வேங்குற மாதிரி பேசுறியே… நம்ம கிட்ட தரப்பட்ட அமானிதப் பொருள் அது. அல்லாட்ட நாள நாம பதில் சொல்லணும். அதான் எடுத்துக் குடுக்கணும்”
“உருவ வழிபாட்டையும், பல கடவுள்களையும் மறுத்து ஓரிறைவனை வணங்குற நாம் எப்படிப்பா… செல வாங்கிக் குடுக்க முடியும்?”
“அல்லாஹ்வின் மீதும், நபிமார்கள் மீதும் அன்பு வெச்சிருக்கவங்கெல்லாம் அவங்ககிட்ட எந்தப் பொருள் ஒப்படைக்கப் பட்டதோ அந்தப் பொருளை உரியவங்ககிட்ட திருப்பித் தந்திடணும்’ன்னு ஹதீஸ் இருக்கு தெரியுமா..?”
“சுப்ரமணியம் மாமா கிட்ட நா வேணும்னா பேசுறேம்பா. தன்னைத்தானே காத்துக்க முடியாத நொறுங்கிப் போன இதெல்லாம் உலகத்தையும் மனுஷ மக்களையும் எப்படிப் பாதுகாக்கும்..”
“லக்கும் தீனுக்கும் வலியதீன்”
“அதுக்காக… ஹக்கச் சொல்ல வாண்டாமா? அதத்தான் வணங்குறோம்ங்றதாவது அந்தச் செலைக்குத் தெரியுமா? அப்படி வழிபடலன்னா… ஏன் வழிபடலன்னு கேக்கத்தான் முடியுமா? நாந்தான் கடவுள்னு எந்தச் சிலையாவது இதுவரை சொல்லியிருக்கா…?”
-அப்துல்லா இடைமறித்து வார்த்தைகளைத் தடுத்தார்.
“பிறர் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள்னு குர்ஆன்ல சொல்லியிருக்கு தெரியுமா…?”
“ நான் என்ன வையவா செய்றேன்… அந்த மக்களுக்கும் சத்தியத்தச் சொல்லணும்ங்குறேன். அல்லாஹ் உலக மக்களுக்கெல்லாம் இறைவன். குர்ஆனும் அதுமாதிரி உலக மக்களுக்கெல்லாம் நல்லுரை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு மட்டும் வழிகாட்டியில்ல.. அகில உலகத்திற்கெல்லாம் ஒரு அருள்கொடைன்னு எல்லாரும் புரியணும்..”
“ ஹமீது நீ சொல்றதெல்லாம் சரிதான். நீ இப்படியெல்லாம் பேசிட்டிருந்தேன்னா தீவிரவாதின்னு உள்ள புடிச்சுப் போட்டுடுவாங்க.அதுல தாடி வேற வெச்சிருக்கியா வேற வெனயே வேண்டாம்…”
“என்ன வாப்பா நீங்களே இப்படிச் சொல்றியோ…”
“உனக்கு பக்குவம் போதாதுல, சரி அதஉடு, இப்ப சுப்ரமணியனுக்கு செல எடுத்துக் குடுக்கணும். துட்டு வேற இல்ல, உங்க மொதலாளிட்ட கேட்டுப்பாரேன். இந்த மாச சம்பளத்துல கழிக்கச் சொல்லு.”
“உங்களுக்கு மாத்திர வேங்குன துட்டு குடுக்கலன்னு சத்தம் போட்டாரு! இப்ப ரூவா கேட்டம்னா அவ்ளோதான். வேல பாத்தது போதும் ஊட்டுக்க்குப் போன்னுடுவாரு…”
“ நா வந்து கேக்குறேம்ல….”
-பணம் வாங்கும் இடம் குறித்தாயிற்று. ஆனால் சிலை எங்கே வாங்குவது?
அப்துல்லாவின் மன உளைச்சல் அதிகமானது. ஒப்படைக்கப் பட்ட அமானத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்றது நயவஞ்சகர்களின் குணம்னு நபி சொல்லியிருக்காங்க. நாம் துரோகம் செஞ்சுட்டோமா? அதைப் பத்திரப் படுத்தாமல் அசட்டையாக இருந்துவிட்டோமா? அவிழ்த்து காட்டியிருக்க வேண்டுமோ..? என்ற உணர்வுகள் அவரைக் குற்றக்கூண்டில் நிறுத்தின.
சிலை பற்றி நிறைய சந்தேகங்கள் தோன்றின. உடைக்கப்பட்ட சிலையின் பெயரில் குழப்பம் வந்தது. ஹமீது “ஏதோ” பெயரைச் சொன்னான். அப்துல்லா நம்பிக்கை படவில்லை. எல்லாவற்றையும்தான் வணங்குகின்றார்களே…! ஏதாவது ஒன்று வாங்கிக் கொடுக்கலாமா? அது சரியாகுமா? எவ்வளவு விலை இருக்கும்? எந்த அளவில் வாங்குவது? யாரிடம் கேட்பது?
அப்துல்லாவை இந்த ‘விஷயம்’ அலைக்கழித்து விட்டது. சோமசுந்தரதைப் பார்த்து ஒரு வழியாய் விஷயத்தைச் சொல்லிவிட்டார். சிலை பொறுப்பு சோமசுந்தரத்துக்கு கொடுக்கப்பட்டது. காதும் காதும் வெச்ச மாதிரி யாருக்கும் தெரியாமல் ராவோடு ராவாக மூட்டையில் கட்டித் தூக்கிக் கொண்டுவந்துவிட்டார்கள்.
ஹமீது உடன்படவில்லை. அப்துல்லாவின் குழப்ப முடிச்சுதான் அவிழ்ந்தபாடில்லை. சுப்ரமணியன் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை. இது விபரம் யாரிடமும் ‘மூச்’ காட்டவில்லை. தெரிந்தாலே போதும் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி குட்டையை குழப்பிவிடுவார்கள்.
இரண்டாம் நாள் சாயங்காலம் சுப்ரமணியன் வந்தபோது அப்துல்லா தொழப்போயிருந்தார். அப்துல்லா வரும் வரை திண்ணையில் சுப்ரமணியன் காத்திருந்தார். அப்துல்லா தொழுதுவிட்டுத் திரும்பும் போது திண்ணையில் யாரோ இருப்பதை உணர முடிந்ததே தவிர யார் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நெஞ்சுக்குள் ஒரு மோட்டார் சைக்கிளை உதைத்து விட்டதைப் போல் இருந்தது. சுப்ரமணியனைப் பார்த்ததும் உள்ளிருக்கும் மோட்டார் சைக்கிள் இன்னும் பலமாய் புகை கக்கி அதிர்ந்தது.
விஷயம் கேள்விப்பட்டு வந்திருப்பாரோ..? ‘சாமிக்குத்தம்’ அது இது எனக் குதிப்பாரா? எப்படிச் சொல்வது நெருங்கினார்.
“வாங்க பாய்…உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன். போன காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுது…”
“அண்ணாச்சி கொஞ்சம் உள்ள வாங்களேன்….”
– நடுத்தெருவில் வைத்து சத்தம் போட்டு மானத்தைக் கெடுத்து விடுவாரோ என்று பயந்தாரோ என்னவோ தெரியவில்லை. சுப்ரமணியன் ஏற இறங்க பார்த்தார்.
“என்ன பாய் திடீர்னு ஏதாவது விசேசமா….?
-ஆமாம் என்பதைப் போல தலையசைத்து சுப்ரமணியனின் கையைப் பிடித்து கொல்லைப் புரத்திற்குக் கூட்டிப் போனார்.
“அண்ணாச்சி மன்னிக்கனும். ஒரு தப்பு நடந்து போச்சு…?”
“என்ன சொல்றீங்க….?”
“ஒண்ணுமில்ல…. டிசம்பர் ஆறாம் தேதி பிரச்னைக்காக ஊடு ஊடா சோதனை போட்டாங்க….”
-அடுத்த வாக்கியத்தைப் பேசுவதற்கு அப்துல்லாவிற்கு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அந்த இடைவெளிக்குள் புகுந்து சுப்ரமணியன் பேசினார்.
“தப்புப் பண்ணவன்தான் போலீசப் பாத்து பயப்படுவான். ஆனா இப்ப நல்லது செய்றவனும் பயப்பட வேண்டியதாப் போச்சு, காலத்தப் பாத்தீங்களா….?”
“ நம்ம ஊட்ட சோதனை போடுறப்ப உங்க மூட்டையைக் காட்டி என்னதுன்னு கேட்டாங்க, எனக்குத் தெரியலன்னேன்..”
வாய் உலர்ந்தது. வியர்த்தது. பதட்டம் பறந்து வந்து அப்துல்லாவின் மேல் தொங்கிக் கொண்டது.
“அவுத்துப் பாக்கிறதுக்கு முந்தி போலீஸ் அடிச்சதுல மூட்டையிலிருந்த உங்க பொருள் உடஞ்சு போச்சு…”
-சுப்ரமணியன் அதிர்ந்தார். விஷயத்தை ஜீரணிக்க சில நிமிடங்களை எடுத்துக் கொண்டார். அதுவரையிலும் அப்துல்லா பேசியதை சுப்ரமணியன் உள்வாங்கிக் கொள்ளவில்லை. தன் நிலை திரும்பியபோது அப்துல்லாவின் கையில் சாக்குப் பை இருந்தது.
“அதுக்குப் பகரமா நானே புதுசா ஒரு செலை வாங்கிட்டேன்….”
“பாய் நீங்களா…….!!!?? என்ன பாய் இது…? தப்பு என்னோடது. உங்ககிட்ட விபரத்தைச் சொல்லித் தந்திருக்கணும். என்னால உங்களுக்கு எவ்வளவு சிரமம். யாரோ பண்ணுன தப்புக்கு நீங்க எதுக்கு பாய்… அதுவும் சிலை வணக்கத்தை எதிர்க்கிற மார்க்கம் உங்களுடையது…”
“ஆமா அண்ணாச்சி… இறைவன் எல்லா பாவத்தையும் மன்னிச்சிடுவான். வேற எதையும் அவனுக்கு இணையாக்குனா மன்னிக்க மாட்டான். இந்த செலயோடவோ, உங்க வழிபாட்டுடனோ நான் உடன்படல… நீங்க இத வழிபடணும்ங்றதுக்காகவும் தரல, என்னப் பொறுத்தவரை இது ஒரு அமானிதம்! இந்த அமானிதம் குறிச்சு நாள இறைவன்கிட்ட பதில் சொல்லணும்…அதுக்காகத்தான்…”
-அப்துல்லாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. சுப்ரமணியின் கண்கள் பனித்தன. நடந்தவை எதுவும் அறியாமல் சாக்கு மூட்டையில் ஒளிந்திருந்தது அந்தச் சிலை.
( நன்றி: ‘பதிவு செய்யப்படாத மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதி: வி.எஸ்.முஹம்மது அமீன்)

Add Comment