கலையாத கூடாரங்கள்!

ரபிக் கவிதைகள் ஒட்டகத்தின் பிள்ளைகள். பாலைவனத்தின் பயண சிரமத்தை மறப்பதற்கு அரபியர்கள் பாடும் போது தங்களைச் சுமந்து செல்லும் ஒட்டகங்களின் நடை லயத்திற்கு ஏற்ற தாள லயத்தில் பாடினார்கள். அரபிக் கவிதை இப்படித்தான் பிறந்தது.


அந்த நாடோடிக் கூடாரவாசிகள் கவிதைக்கும் ‘கூடாரம்’ என்றே பெயரிட்டார்கள். காலப் புயலில் கலையாமல் நிற்கும் இந்தக் கூடாரங்களில் குடியேறிய அழகான எண்ணங்கள் இலக்கிய உலகில் நிரந்தரமாகவே தங்கிவிட்டன.

அரபியர்கள் சந்தைக்குப் போகும் போது விற்பனைச் சரக்குகளோடு தங்கள் கற்பனைச் சரக்குகளையும் கொண்டு போவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை கூடும் ‘உகாஸ்’ என்ற பெரிய சந்தையில் கவிதைத் தேர்தல் நடக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதைகள் பொன்னெழுத்துக்களால் (உண்மையாகவே) பொறிக்கப்பட்டு, கஅபா ஆலயத்தின் சுவர்களில் தொங்க விடப்படும். இந்தத் ‘தொங்கு கவிதைகள்’ தாம் அரபி இலக்கியத்தின் மூத்த கவிதைகள்.

அந்தக் காய்ந்த பூமியில் புல்லுக்குத்தான் பஞ்சம்; சொல்லுக்கு அல்ல. அரபி மொழியின் சொல்வளம் அதிசயமானது. வாளைக் குறிக்க ஆயிரம் சொற்களும் ஒட்டகத்தை அழைக்க Bactrim online ஆயிரம் சொற்களும் அந்த மொழியில் குவிந்திருக்கின்றன. மானை அதன் எட்டு வகைப் பருவத்திற்கேற்ப அழைப்பதற்குத் தனித் தனிச் சொற்கள் அம்மொழியில் உள்ளன. “மொழி அமைப்பில், மனித மூளை கண்டு பிடித்த மிகப் பெரிய அற்புதம் அரபி மொழி” என்ற பேராசிரியர் ஸகாவின் பாராட்டுரை வெறும் வார்த்தை அன்று.

இந்த வளமான வயலில் விளைந்த கவிதைகள் செழிப்பாக இருப்பதில் வியப்பில்லை. அரபிய சமூகத்தில் கவிஞர்களுக்கு உயர்ந்த மதிப்புத் தரப்பட்டது. புகழின் உதயமும் அஸ்தமனமும் அவர்கள் நாவின் அசைவுக்குக் காத்திருந்தன. அவர்களுடைய சொற் பொறிகளிடம் அரபகம் முழுவதும் கணத்தில் காட்டுத் தீயாகும் வல்லமை இருந்தது.

இயற்கை கருமியாக இருக்கும் அந்த வறண்ட பூமியில் அபூர்வமாகத் தட்டுப்படும் அழகுகளை அவர்கள் தாகத்தோடு அனுபவித்தார்கள். அவலட்சணமான ஒட்டகத்திலும் அவர்கள் அழகைக் கண்டார்கள்.

இன்று புதுக்கவிதையில் நாம் பார்த்து வியக்கும் அற்புதமான படிமச் சிற்பங்களை வடிக்கும் கலைத்திறம் அன்றே அவர்களுக்குக் கைவந்திருந்தது.

உதயமும் அஸ்தமனமும் பாலைவனத்தின் அற்புதமான காட்சிகள். அரபிக் கவிதைகள் இந்த அழகான காட்சிகளை அழியாத சித்திரங்களாகத் தீட்டி வைத்திருக்கின்றன.

அடிவானில் வெளிச்சம். இருள் விலகுகிறது. இப்னு முகானா அதைச் சொல்லும் விதம் புதுமையானது.

“இரவின் இருள் விலகுகிறது
உதய வெளிச்சம் தெரிகிறது
காகம் மேலே பறக்க
ஒளிந்திருந்த முட்டை தெரிகிறது!”

மரணக் கருவியாகிய வாளைக்கூட இப்னு ஷுஹைதின் கற்பனை அழகாக்கிவிடுகிறது.

“உடைவாள்
ஓர் உறையிலிட்ட ஓடை
தன் தாகம் தணிக்க
இந்த ஓடைக் கரைக்கு வரும்
மரணம்!”

தொடர்ந்து கண்ணீர் வடிக்கும் கண்களைப் பார்த்த இப்னு ஹையுன் அதற்குக் கூறும் காரணம் சுவையானது.

“விழிப் படகில் உள்ள ‘பாவை’
மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சிப்
படகில் திரண்ட நீரை
வெளியே இறைத்துக் கொண்டிருக்கிறாள்.”

நரைமுடி ஏன் வெள்ளையாக இருக்கிறது? அல் பதா அல் கபிப் காரணம் கூறுகிறார்.

“என் தலைமுடி
ஏன் வெள்ளாடை
தரித்திருக்கிறது என்கிறீர்களா?
இறந்து போன
என் இளமைக்குத்
துக்கம் கொண்டாட!”

(துக்கம் கொண்டாடுவோர் வெள்ளாடை அணிவது அந்நாட்டு வழக்கம்)

இப்னு கையாத்துக்கு நரை வருத்தப்படுவதற்குரிய விஷயமல்ல; பெருமைப்படுவதற்குரிய விஷயமாகி விடுகிறது.

“என் இருட்டில்
உதயம் பிரகாசிக்கிறது!
இதற்கு வருத்தப்படுவானேன்?”

என்ற அவர் கேள்வியில் அழகான நியாயம் இருக்கிறது அல்லவா?

அல் நஷ்ஷாரின் காதலியின் கன்னத்தில் இதழுக்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு மச்சம். அதை அவர் எப்படிப் பார்க்கிறார் தெரியுமா?

“ரோஜாவைக் கொய்வதா?
கோவையைப் பறிப்பதா?
திகைத்து நிற்கிறான்
கறுப்புத் தோட்டக்காரன்!”

அல் புகைராவின் காதலி அவரைப் பிரிந்த போது கண்ணீர் வடித்தாள். மீண்டும் சந்தித்த போது புன்னகை புரிந்தாள். அவருக்கு அழகான சந்தேகம் எழுகிறது.

“அன்று பெய்த மழையில்
பூத்த மலரா இது?”

உமர் இப்னுல் பரீதுக்கு அவருடைய காதலியின் கூந்தல் இரவின் இருட்டாகத் தெரிகிறது. அந்த இருட்டில் எங்கே தவறிவிடுவோமோ என்று அவருக்குப் பயம். ஆனால், நம்பிக்கைக்கும் இடமிருக்கிறது என்கிறார்.

“அவள் கூந்தல் இரவில்
நான் தவறினால்
அவள் ஒளி வதனம்
வழிகாட்டும் விளக்காகும்.”

இப்னு அல் ஹம்மாராவுக்குத் தூக்கமே வரவில்லை. கஷ்டப்பட்டுக் காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறார்.

“துயில் பறவை
என் கண்ணைக்
கூடென்றுதான் நினைத்தது.
ஆனால்
என் இமை ரோமங்களைப் பார்த்து
பயந்துவிட்டது
‘கண்ணி’யென்று!”

தன்னைச் சுற்றிப் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டு அவற்றைத் தீர்க்க முடியாமல் பரிதவிக்கும் மனிதனைப் பட்டுப் புழுவோடு ஒப்பிடுகிறார் அபுல் பத்அல் புஸ்தி.

“பட்டுப் புழுவைப்
போன்றவன் மனிதன்
அது
தன் கூட்டைக் கட்டுகிறது
அதற்குள்ளேயே
துயரத்தோடு செத்து விடுகிறது.”

இந்த உலகமே தன்னுடையதுதான் என்று தலைநிமிர்ந்து திரிந்தவர்கள் எத்தனை பேர்? இதைக் ‘கட்டி’ ஆண்டு கர்வம் கொண்டு அலைந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எல்லாம் இன்று எங்கே? அல் மார்ரி விடை சொல்கிறார்.

“இந்த உலகம்
பயங்கரமான மணப்பெண்
எத்தனையோ மாப்பிள்ளைகளைக்
கொன்றுவிட்டு
இன்னும்
கன்னியாகவே இருக்கிறாள்!”

அரபியர்கள் இன்று எண்ணெய்க் கிணறுகளால் உலகத்தையே விலை பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணக் கிணறுகள் இதயங்களை அல்லவா வாங்கிக் கொள்கின்றன!

(கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘முட்டைவாசிகள்’ நூலிலிருந்து…)

Add Comment