ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்

newPic_56_jpg_1739119hதிருவாரூர். 1938. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

14 வயது கருணாநிதியின் மனதில் அரசியல் விதையாக விழுகிறது அழகிரியின் பேச்சு. பின் கருணாநிதி மாணவர் மன்றம் தொடங்குகிறார்; பத்திரிகை தொடங்குகிறார்; பேசுகிறார், எழுதுகிறார், நாடகம் போடுகிறார்; பெரியார், அண்ணாவைச் சந்திக்கிறார்… பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் வரலாற்றில் பட்டுக்கோட்டை அழகிரி இடம்பெற்ற சூழலையும் இன்றைக்கு மு.க.அழகிரி இடம்பெறும் சூழலையும் இணைத்துப் பாருங்கள்… திராவிட இயக்கமும் கருணாநிதியும் தமிழக அரசியல் சூழலும் எவ்வளவு சீரழிந்திருக்கின்றன!

திராவிட இயக்கத்தின்பால் பற்றுகொண்ட எவரும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்: கருணாநிதிக்குப் பின் தி.மு.க. என்னவாகும்? இதோ அதையும் தன் காலத்திலேயே நடத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.

வரலாற்றுச் சாபக்கேடு

ஒருமுறை கருணாநிதியைப் பேட்டிக்காகச் சந்தித்தபோது, இந்தக் கேள்வியைக் கேட்டேன்: “உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய விமர்சனம் குடும்ப அரசியல். சொல்லப்போனால், ஊழல் உள்ளிட்ட உங்கள் மீதான ஏனைய குற்றச்சாட்டுகளுக்கும் அதுவே அடிப்படை. இதற்காக என்றைக்காவது ‘ஏன் இந்தக் குடும்பத்தை உள்ளே நுழைத்தோம்’ என்று வருந்தியது உண்டா?”

ஏற இறங்கப் பார்த்த கருணாநிதி, தனிப்பட்ட சில விசாரிப்புகளுக்குப் பின் சொன்னார்: “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. என்றைக்குமே கட்சியா, குடும்பமா என்றால், கட்சிக்குதான் நான் முழு முதல் இடத்தையும் கொடுப்பேன் என்பதை எனையறிந்தோர் நன்கறிவர்.”

அப்போதும் சரி, அதற்கு முன்பும் பின்பும் சரி; மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகக் கொண்டுவந்ததில் தொடங்கி, கடந்த நாற்பது ஆண்டுகளாகக் குடும்ப/வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு இந்தப் பதிலையே கருணாநிதி சொல்லியிருக்கிறார் வெவ்வேறு வார்த்தைகளில்.

கட்சிக்குள் அந்தக் கேள்வி வந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய கவனத்தின் வெளிப்பாடே கட்சியின் வட்டக் கிளை வரை எல்லா மட்டங்களிலும் குடும்ப/வாரிசு அரசியலை அவர் பொதுமைப்படுத்தியது. ஒருகட்டத்தில், இந்தக் கேள்வியையே அவர் வெறுக்கத் தொடங்கினார்.

செய்தியாளர்களால் மட்டும் அல்ல; கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர்களால்கூட அவரிடம் விவாதிக்க முடியாத விஷயமாக அது மாறியது. அப்படிப்பட்ட கருணாநிதியைத் தானே வலிய வந்து கட்சியைக் குடும்பம் சீரழித்த கதையை அம்பலமாக்க வைத்திருக்கிறது காலம்.

ஜனநாயகக் கேலிக்கூத்து

தன்னுடைய ஒரு மகனுக்குக் கட்சியின் மகுடத்தைச் சூட்டவும் இன்னொரு மகனைக் கழற்றிவிடவும் கருணாநிதி சொல்லும் காரணங்களும் அதையொட்டி நடக்கும் கூத்துகளும் கூசவைக்கின்றன. கருணாநிதி மற்றும் அவருடைய மகன்களின் கூற்றுப்படி, அவர்கள் யாவரையும் கட்சி நிர்வாகிகளாகப் பாவித்தே அவர்கள் நியாயத்தைப் பேசுவோம். தி.மு.க-வின் தென் மண்டலச் செயலர் அழகிரியின் நீக்கத்துக்குக் கட்சியின் தலைவர் கருணாநிதி சொல்லும் முக்கியக் காரணம் என்ன?

“தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது இனம் தெரியாத வெறுப்பு அழகிரிக்கு இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக ஜனவரி 24 விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத் தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.

நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்றுவிடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்துவிடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல, கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலேகூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்துவிடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது பொறுத்துக்கொள்ள முடியாதது.”

மக்களுக்கு இது புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், அழகிரியிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் வாய்ப்போ, தனிமையில் ஒரு மணி நேரம் ‘மனம் திறந்த பேட்டி’ எடுக்கும் வாய்ப்போ உங்களுக்குக் கிடைத்தால் இதில் எதுவுமே அதிர்ச்சியோ ஆச்சரியமோ தராது.

நாம் இங்கு பெரும் ஆளுமைகளாக ஆராதிக்கும் பலரும் வசை வார்த்தைகளில் புரள்பவர்கள்தான். ஊடகங்கள் இதை வெளிப்படுத்தாமல் தவிர்க்கக் காரணம் பொதுவாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட குணநலன்களை விவாதிக்க வேண்டாம் என்பதால்.

ஆனால், பொதுவாழ்வின் தவறுகளை நியாயப்படுத்தத் தனிப்பட்ட வாழ்வை வீதிக்கு எடுத்து வந்ததன் மூலம் இது தொடர்பான விவாதத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் கருணாநிதி. அப்பட்டமான, அன்றாடக் குடும்பச் சண்டையை அரசியல் யுத்தமாக மாற்றுகிறார். ஸ்டாலினுக்குக் கூடுதல் பாதுகாப்பு கேட்டுப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடவும் முனைகிறார்.

உண்மையில், கருணாநிதி – அழகிரி விவாதங்களில் நாம் கவனிக்க வேண்டிய பகுதி இதுதான்:

“தி.மு.க-வில் ஸ்டாலினுக்குப் பொருளாளர் பதவியைத்தானே கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ தலைவர் மாதிரி செயல்படுகிறார். எனக்குத் தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால், என்னிடம் எதுவுமே கேட்காமல், தென் மாவட்ட தி.மு.க. தொடர்பாக முடிவெடுத்தால் என்ன அர்த்தம்? தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? அப்படியானால், தி.மு.க-வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்?” என்று கேட்கிறார் அழகிரி. இந்தக் கேள்விகளுக்குக் கருணாநிதி உரிய பதிலைச் சொல்லவில்லை.

மேலும், பத்திரிகையாளர்கள் கேட்ட இரு கேள்விகளுக்குக் கருணாநிதி அளித்த பதில்களும் இங்கே கவனிக்கப்பட வேண்டிவை: “அழகிரி மன்னிப்புக் கோரினால் அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்துசெய்யப்படுமா?” என்ற கேள்விக்கு, கருணாநிதி சொன்ன பதில்: “இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்.”

“தென் மண்டலச் செயலர் பதவிக்கு அழகிரிக்குப் பதிலாக வேறு யாராவது நியமிக்கப்படுவார்களா?” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்: “நியமிக்கப்பட மாட்டார்கள். அந்தப் பதவியே அழகிரிக்காக உருவாக்கப்பட்டது.”எனில், கருணாநிதி யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்?

படிக்காத பாடம்

கருணாநிதி பொதுவாழ்வில் வாங்கிய முதல் பேரடிக்கு அவருடைய குடும்ப அரசியலே காரணமாக அமைந்தது. அதற்காகக் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அவர் உட்கார வேண்டியிருந்தது.

அப்போது தொடங்கி, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர் பாடம் கற்பதற்கான வாய்ப்புகளை அவருடைய குடும்பத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். தி.மு.க. வரலாற்றிலேயே அதற்கு ஏற்பட்ட பேரிழுக்கான அலைக்கற்றை ஊழல் அவற்றின் உச்சம். நீரா ராடியா உரையாடலில் எல்லாமே அடங்கியிருந்த. ராசா, கனிமொழிக்கு எதிராக மாறன்கள் நகர்த்திய காய்களையும், மாறன்களையும் ஸ்டாலினையும் நோக்கிக் கனிமொழி, ராசா நகர்த்திய காய்களையும் நேரடியாகப் பார்த்தார் கருணாநிதி. அவருக்குப் பின் கட்சியில் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டக் காட்சி அது. அப்போதும் கருணாநிதி மாறவில்லை.

அடுத்த தலைவர் யார்?

பொதுப்புத்தியில் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார் கருணாநிதி. அது: தி.மு.க-வின் அடுத்த தலைவராக எல்லா வகையிலும் தகுதியானவர் ஸ்டாலின் என்பது. இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாத வாதம் இது. இந்த விஷயத்தில் அழகிரி ஒரு துருவம் என்றால், ஸ்டாலின் இன்னொரு துருவம் என்பதே உண்மை. அழகிரி, கட்சியை குண்டர்களுடையதாக்கினார் என்றால், ஸ்டாலின் கான்ட்ராக்டர்களுடையதாக்கினார்.

நடக்கும் எல்லாக் கூத்துகளுக்கும் நடுவிலும், இன்றைக்கும்கூட இடஒதுக்கீட்டுக்காகக் கருணாநிதிதான் ஜெயலலிதாவோடு அறிக்கைப் போர் நடத்த வேண்டியிருக்கிறது. எல்லாத் தகுதிகளும் வாய்ந்த ஸ்டாலின் என்ன செய்கிறார்?; இன்றைக்கு அல்ல; சித்தாந்த ரீதியாக என்றைக்காவது, எதுபற்றியாவது அவர் பேசியது உண்டா?

தன்னுடைய அரசியல் வாழ்வை ‘நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்’ என்று வர்ணிப்பார் கருணாநிதி. உண்மை. பள்ளியில் தன்னைச் சேர்த்துக்கொள்ள மறுத்த தலைமை ஆசிரியரிடம் “பள்ளியில் இடம் கொடுக்கவில்லை என்றால், குளத்தில் விழுந்து உயிரை விடுவேன்” என்று மிரட்டி, பள்ளியில் சேர்ந்த கருணாநிதிக்கு no prescription online pharmacy ஒரு கட்சியை நடத்த எப்படிப்பட்ட போர்க்குணம் வேண்டும்; அது தன் பிள்ளைகளிடம் இருக்கிறதா என்று தெரியாதா என்ன?

கருணாநிதி என்ற நாடகாசிரியர் தன்னுடைய பொதுவாழ்வு நாடகத்தின் ஆரம்பக் காட்சிகளைக் காவியத்தன்மையோடு எழுதத் தொடங்கினார். அதன் நிறைவுக் காட்சிகளோ பின்

நவீனத்துவக் கூறுகளோடு முடிவை நோக்கிச் சொல்கின்றன. எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் தன்னுடைய கதை ஒன்றில் ஒரு முதியவரின் நிலையை பீஷ்மரோடு ஒப்பிட்டு, ‘நட்ட பயிர்களே அம்புகளாக, சரப் படுக்கையில்’ படுத்திருப்பதாகக் குறிப்பிடுவார். இன்றைக்குக் கருணாநிதியின் நிலையும் அதேதான். கூடவே தான் விதைத்த அம்புகளின் படுக்கையில் தி.மு.க. எனும் பேரியக்கத்தையும் அவர் படுக்கவைத்திருக்கிறார்!

சமஸ்- தொடர்புக்கு: samas@kslmedia.in,நன்றி:தி இந்து

Add Comment