நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா?

”தானாக கொடுப்பது தானம். அதையே கட்டாயப்படுத்தி, மிரட்டி வாங்கினால் அதற்கு பேரென்ன…?” இப்படித்தான் கேட்கிறார்கள் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கின்னஸ் ரெக்கார்டு’ மெகா ரத்த தான முகாமில் கலந்துகொண்டவர்கள்.

ரத்தம் கொடுக்க வரும்போது ஒன்றும், ரத்தம் கொடுத்த பின்பு இன்னொன்றுமாக பார்கோடு அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிவிடுகிறார்கள். இதைக் கணினியில் காட்டினால் அது கின்னஸ் சாதனைக்குப் பதிவாகிறது. இதுவரை அரியானாவில் 43,752 பேர் கொடுத்த ரத்த தானம்தான் சாதனையாக உள்ளது. அதை பீட் செய்யத்தான் இவர்கள் 50 ஆயிரம் என்ற டார்கெட்டை வைத்தார்களாம்.

Buy Levitra />

”தமிழக முதல்வரின் கவனத்தைக் கவரவேண்டும் என்பதற்காக அதிரடியாக எதையாவது செய்யவேண்டும் என்று அந்தக் கட்சிப் புள்ளிகள் நினைப்பது தப்பில்லை. அதற்காக அடுத்தவன் உதிரத்தையா எடுப்பது? தமிழகத்தில் இன்று ரத்த தானத்திலிருந்து உடல் உறுப்பு தானம் வரைக்கும் மக்களிடம் நல்ல விழிப்பு உணர்வும் உதவும் குணமும் ஏற்பட்டுள்ளன. ரத்த தான கழகம், அமைப்புகள் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். முன்பெல்லாம் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கிய நிலை போய் ஒரு போன் செய்தால் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் ரத்தம் கொடுக்கத் தயாராக வந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில், தங்கள் தலைவியின் பிறந்தநாளை கின்னஸ் சாதனை ஆக்கவேண்டி ரத்த தானம் போன்ற உன்னத சேவையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி” என்ற குற்றச்சாட்டை, சில சமூக ஆர்வலர்கள்  தெரிவித்தனர்.

சேலத்தைச் சேர்ந்த சில ஓட்டுநர், நடத்துநர்கள், ”எங்க பெயரோ, புகைப்படங்களோ வரக்கூடாது. வந்தால் எங்க வேலையை தொலைத்துவிடுவார்கள்” என்ற நிபந்தனையோடு பேசினார்கள், ”உடல்நிலை சரியில்லாமல் இப்போதுதான் டியூட்டியில் ஜாயின் பண்ணினேன். கட்டாயம் ரத்தம் கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. சேலம் மாவட்டம் முழுவதும் இந்த கணேஷ் காலேஜில்தான் ரத்தம் கொடுக்கிறோம். இதுமட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களிடம் அது கொடுப்போம்… இது கொடுப்போம் என்று ஆசைகாட்டி அவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். கூட்ட நெரிசல் அதிகமா இருக்கு. இந்தக் கும்பலில் சிக்கி கீழே விழுந்து ஒரு டிரைவரின் கால் முறிஞ்சுடுச்சு. அவருடைய கால்கள் என்ன ஆனது என்றுகூட பார்க்காமல் அவரிடமிருந்து ரத்தம் எடுப்பதைத்தான் பார்க்கிறாங்க. ரத்தம் கொடுத்ததும் சற்று சோர்வாக இருப்பதற்கு ஜூஸ், பிஸ்கெட் கொடுப்பாங்க. ஆனால் அதை எதையும் இங்கு கொடுக்கவில்லை. எங்க எல்லோரையும் கட்டாயப்படுத்தி இங்கு வரச்சொன்னாங்க” என்று ஆதங்கப்பட்டார்கள்.

சேலம் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க. தொ.மு.ச. பொதுச் செயலாளர் பெருமாள், ”தொழிற்சங்க பொறுப்பாளர்களும் கழக அதிகாரிகளும் முதல்வர் பிறந்தநாளுக்கு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகக் கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தமாக ரத்தத்தை எடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே எங்கள் ரத்தத்தை இந்த அரசு உறிஞ்சிவிட்டது. இப்போது நேரடியாகவும் உறிஞ்சியிருக்காங்க. ரத்தம் தர மறுத்தால் இடம் மாற்றுவோம், வருகைப் பதிவேட்டில் லீவு போடுவோம், ரூட் மாற்றி விடுவோம் என மிரட்டித்தான் ரத்தம் கொடுக்க வைத்திருக்கிறார்கள். நாங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணிகளைச் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க முடியும். உழைத்து உழைத்து ரத்தமே இல்லாத எங்களைக் கட்டாயப்படுத்தி ரத்தம் எடுத்தால் எப்படி பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு செல்ல முடியும்?” என்றார்.

மதுரையில் இதுபற்றி நம்மிடம் பேசிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், ”வருகிற 24-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்ததினம் வருகிறது. அம்மாவை எப்படி அட்ராக்ட் பண்ணுவது என்பதில் தமிழக அமைச்சர்களுக்குள் பலத்த போட்டி நடக்கிறது. மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது, தீ மிதிப்பது எல்லாம் ரொம்ப பழைய ஸ்டைல் என்பதால், இப்போது புது முயற்சியில் இறங்கிவிட்டனர்.

சிலர் விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம், மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். செல்லூர் ராஜு போன்றவர்கள் ஆன்மிகத்தில் இறங்கி, அம்மா பிரதமராவதற்கு மகாயாகம் நடத்துவதாக சீன் காட்டுகிறார்கள். ஆனால், எங்கள் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியோ வேறு மாதிரியாக யோசித்தார். அதன் எதிரொலிதான் இந்த மெகா ரத்த தான முகாம். இதற்காக கடந்த சில மாதங்களாக அதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழகத்திலுள்ள 10 போக்குவரத்து கோட்டங்களில் மெகா ரத்த தானம் நடத்துவதென்று முடிவு செய்தனர்.

ஒவ்வொரு போக்குவரத்துக் கழகக் கிளைக்கும் கோட்ட மேலாளரிடமிருந்தும் கடிதங்கள் அனுப்பட்டன. போக்குவரத்துக் கழக ஊழியர் ஒவ்வொருவரும் கட்டாயம் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டனர். அதிலும் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும், நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆர்டர் போடப்பட்டது. அதற்கு சலுகையாக இரண்டு நாள் விடுமுறையுடன் செலவுக்குப் பணமும் தருவதாகவும் சொன்னார்கள்.

இது மட்டுமில்லாமல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கு பெர்மிட், எஃப்.சி. எடுக்க வருகிறவர்கள், டிரைவிங் லைசென்ஸ் வாங்க வருகிறவர்கள், வாகனங்கள் பயன்படுத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்கள் மாணவர்களையும் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக பல ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எந்த பேப்பரும் தராமல், ரத்தம் கொடுத்த ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே கொடுக்கப்படும் என்று ஓரலாக அறிவித்தார்கள்” என்றார்.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் புதுப்பட ரிலீஸுக்கு வந்ததுபோல விசிலும் அரட்டையுமாக காலை ஏழு மணியிலிருந்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். ”ரத்தம் கொடுக்க இவ்வளவு ஆர்வமா?” என்று, ஒரு மாணவரிடம் கேட்டதற்கு, ”அட போங்க சார். லீவே விடாத எங்க காலேஜ்காரங்களையே லீவு கொடுக்க வெச்சிருக்காங்க. இதோ ரத்தம் கொடுத்துட்டு, செலவுக்கு தர்ர பணத்துல ரெண்டு ஷோ பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கே. அதான் ஜாலியா இருக்கோம்” என்றார்.

பல இடங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலிருந்தும் எடுத்து வந்த பெட்டுகளையும் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தினார்கள். இதில் ரத்தம் கொடுத்த சிலருக்கு மயக்கம் வந்ததாகவும், அவர்கள் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பேசிக்கொண்டார்கள்.

ராமநாதபுர மாவட்ட சி.ஐ.டி.யூ. நிர்வாகி ஒருவர், ”போக்குவரத்து தொழிலாளர்களின் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் இருக்கின்றன. ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியப் பலன்களைக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அனைத்து பிராஞ்சுகளிலும் ஆள்பற்றாக்குறை உள்ளது. தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகத்துக்கும் அவர்களின் பி.எஃப்-க்கும் நிதி ஒதுக்குங்கள் என்று நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். அதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அமைச்சர் இப்படி தேவையற்ற விழாவை நடத்துகிறார். சமீபத்தில்தான் முதல்வர் பசும்பொன் வந்ததற்காக அனைத்து டெப்போக்களிலிருந்தும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் அனுப்பப்பட்டன. அப்போதும் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றனர். இப்போதும் அதுபோல் செய்கின்றனர். இதனால் பல ஊர்களிலும் இரண்டு நாட்களாக பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை. நல்லவேளை ரத்த தானம் மட்டும் நடத்த ஆசைப்பட்டார் அமைச்சர், கிட்னி தானம் என்று சிந்தித்திருந்தால் தொழிலாளர்களின் கதி என்னவாகியிருக்கும்” என்று அதிர்ச்சி கூட்டினார்.

சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல் நபராக ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். மற்ற ஒன்பது நகரங்களிலும் நடக்கும் முகாம்கள் அனைத்தும் சென்னையிலிருந்தே பார்க்கும்வகையில் தொடர்பு செய்யப்பட்டிருந்தது. ரத்தம் கொடுக்க, கொடுக்க கின்னஸ் நிர்வாகிகளின் கம்ப்யூட்டரில் கவுன்டிங் ஓடிக்கொண்டிருந்தது. இதை கின்னஸ் நிறுவனத்தின் நிர்வாகி லூசியா கண்காணித்தார். சென்னையில் மட்டும் 42 ரத்ததான வங்கிகள் ரத்தத்தைச் சேகரித்தன.

டாக்டர்களிடம் விசாரித்தபோது, ”ஒட்டுமொத்தமாக இவ்வளவு பேர் ரத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசு ரத்த வங்கியில் இவ்வளவு ரத்தத்தை சேமித்துவைக்கப் போதிய வசதிகள் இல்லை. இவ்வளவு ரத்தத்தை பாதுகாப்பது கடினம்” என்றார்கள்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ”ரத்த தானம் குறித்த விழிப்பு உணர்வை போக்குவரத்துத் துறை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் முதல்வர் பிறந்தநாளை ஒட்டி ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமினால் பஸ் சேவையிலும் வருவாயிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” என்றனர்.

இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விளக்கம் கேட்க பல முறை முயற்சித்தும் ‘வழக்கம்போல்’ முடியவில்லை. அதிலும் அவர் சாதனை படைக்க விரும்புகிறார் போலும்!

– வீ.கே.ரமேஷ்,செ.சல்மான், எஸ்.மகேஷ்

  படங்கள்: எம். விஜயகுமார், வி.சதீஸ்குமார்

நன்றி:விகடன்

Add Comment