ஏன்’ என்ற கேள்வி!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம். கடந்த சில ஆண்டுகளாக இச்சட்டத்தின் மூலம் மக்கள் வெளிக்கொணர்ந்த உண்மைகள் பல. இதனால் சிலர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. வெறும் பத்து ரூபாயில் அரசின் எந்த நடவடிக்கையையும் கேள்வி கேட்க முடியும் என்கிற இந்த வாராது Buy Viagra வந்த மாமணியை ஒளி இழக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அண்மையில் இச்சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரைத்து, இதனை அமல்படுத்தும் முன்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதன் காரணமாக அவற்றை இணையதளத்தில் கடந்த டிசம்பர் 17 முதல் 27 வரை வெளியிட்டு கருத்துகளைக் கேட்டது.

இந்தச் சட்டம் மேலும் பயனுள்ள வகையில் இறுக்கமாக மாற்றப்படுகிறது என்கிற பொய்யுரையுடன் இதனை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்தப் பரிந்துரைகளைப் படிக்கும் எவருக்கும் எளிதில் விளங்கும்.

தகவல் அறியும் சட்டம் குறித்து கிராமப்புறங்களில் 8 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும், நகரங்களிலும்கூட 55 விழுக்காடு மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் தகவல். வருமான வரி வரவை அதிகரிக்க அரசு காட்டும் முனைப்பில் பத்து விழுக்காடுகூட அரசின் செயல்பாடு குறித்து மக்கள் தெரிந்துகொள்ள உதவும் தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

அரசு அலுவலகங்களில் இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள பொதுத் தகவல் அலுவலர்களில் பாதிப் பேர், இந்த மனுக்களை எப்படிக் கையாளுவது என்பது குறித்து பயிற்சி பெறாதவர்கள் என்பதும், நான்கு மனுக்களில் ஒன்றுக்கு மட்டுமே அரசின் பதில் கிடைக்கிறது என்பதும் இன்னும் ஆச்சரியம் தரும் தகவல். இந்தச் சட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படும் முன்பாகவே இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு மாற்றங்கள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள்.

இப்போது இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றிருப்பதை, ஒரு நபர் ஒரு துறை சார்ந்த ஒரு விஷயத்தை மட்டுமே கேட்க வேண்டும், அதையும் 250 சொற்களுக்கு மிகாமல் எழுதுதல் வேண்டும் என்பதுதான் மிகப்பெரும் நாசவேலை என்றே சொல்லிவிடலாம். இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டால், எந்த மனுதாரரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கேள்விக்கும் இன்னொரு விஷயத்தைத் தொடாமல் கேள்விகளை அடுக்கிச் செல்லவே முடியாது.

உதாரணமாக, ஒரு கிராமப் பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர் பணிக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தனக்குப் பதில் வெறும் ரூ.2,000 சம்பளத்தில் ஒருவரை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்றோ ரகசியமாக ஒரு தகவல் கிடைத்தால், இதுகுறித்து அந்த கிராமத்தவர் பல கேள்விகள் மூலம் விசாரித்தால்தான் முடியும். அந்தப் பள்ளிக்கு எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்? எத்தனை ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள்? அவர்களின் பெயர் விவரம் என்ன? இந்தப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர் யாராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? அவருக்கான ஊதியம் என்ன? ….இவ்வாறு தொடர்ச்சியான கேள்விகள் மூலம் அரசின் பதில்களைப் பெறும்போதுதான் அதில் உள்ள முரண்கள் மூலம் முறைகேடுகளை அம்பலப்படுத்த முடியும். மேலும், 250 சொற்களுக்குள் எல்லாவற்றையும் கேட்டறியும் நுட்பம் யாவருக்கும் முடியாத ஒன்று.

அடுத்து, இத்தகைய தகவல்களைப் பெற்றுத்தரும் செலவுகளை மனுதாரரே ஏற்க வேண்டும் என்கிற பரிந்துரை விஷமத்தனமானது. அதற்காக நிர்ணயிக்க இருக்கும் கட்டணம் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கிறது. அதாவது ஒரு நகல் எடுக்க ரூ.2 என்பது அதிகம். தனியார் நிறுவனங்கள் ரூ.1 பெறும்போது இவர்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பது ஏன்?

மேலும், ஆவணங்களைப் பார்க்க வேண்டுமானால் ஒரு மணி நேரம்தான் இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்துக்கு ரூ.5 செலுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோப்புகளைக் கேட்டால் அரசு அலுவலகங்களில் வெறும் குப்பையைத்தான் காட்டுவார்கள். இல்லாத இடத்தையெல்லாம் தேடி, மனஉறுதியோடு போராடித்தான் உரிய கோப்புகளைக் கண்டடைய நேரிடுகிறது. அப்படியிருக்கையில், இதற்குக் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்கிற பரிந்துரை ஏற்புடையதல்ல.

மனுச் செய்தவர் இறந்துபோனால் அத்துடன் அந்த மனுவை முடிந்ததாகக் கருதி மூடிவிடலாம் என்கிறது இன்னொரு பரிந்துரை. எனக்கு ஏன் இன்னும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கேட்டவர் இறந்துபோனால், அத்துடன் அதை முடித்துக்கொள்ள வேண்டியதுதானா? அந்த மனுமீதான விளக்கம் கிடைத்தால்தானே அவரது மனைவி அல்லது வாரிசு மேல்நடவடிக்கை எடுக்க முடியும்?

மாநில அளவிலான மேல் முறையீட்டை, ஓர் அதிகாரி தான் விரும்பும் அதிகாரி அல்லது பிரதிநிதி மூலம் எதிர்கொள்ளலாம் என்கிறது ஒரு பரிந்துரை. தனது பிரதிநிதி என்பதன் பொருள் வழக்குரைஞர் என்கின்றனர் இந்தப் பரிந்துரையை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள். “அதிகாரிகள் தங்களுக்கான வழக்குரைஞரை நியமிப்பார்கள், ஒரு ஏழை மனுதாரர் இந்தச் செலவுக்கு என்ன செய்வார்? மீண்டும் இதை ஒரு நீதிமன்றமாக மாற்றும் முயற்சி இது’ என்கின்றனர்.

சட்டம் கிடுக்கிப்பிடியாக இருக்கும் இப்போதே பதில் அளிக்காமல் தட்டிக் கழித்ததால் மேல் முறையீட்டு மனுக்கள் மாநில அளவில் லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. இன்னும் இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டுவிட்டால், இனி இந்திய நாட்டில் ஒருவரும் ஒரு கேள்வியும் கேட்க முடியாது என்ற நிலையல்லவா உருவாகும்? இப்படியெல்லாம் மாற்றங்களைச் செய்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்குப் பதில் தகவல் பெறும் உரிமை ஆணையத்தையே இழுத்து மூடிவிடலாமே. தனது தவறுகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்கு அரசு செய்யத் தொடங்கியிருக்கும் தகிடுதத்தங்களில் இதுவும் ஒன்று

Thnks: Dinamani

Add Comment