துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி ‘செம்மொழித் தமிழ்’ வெளியீட்டு விழா

துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி ‘செம்மொழித் தமிழ்’ வெளியீட்டு விழா
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாத இதழான ‘தமிழ்த்தேர்’ துவங்கி பிரதியெடுத்து வெளியிடப்பட்டு வந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக அச்சில் வெளிவரும் நிகழ்வு ஒரு விழாவாக கடந்த பிப்ரவரி 4-ம் தேதி துபாய் கனடியன் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெரும்புலவர் திரு.முஸ்தஃபா அவர்களும், குவைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போது ருவைஸில் பணிபுரிந்து வருபவருமான திரு.பாலா என்கிற பாலசுப்ரமணியனும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மாலை 7.00 மணிக்கு செல்வி.ஆனிஷா பானுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழா, திரு.கீழை ராஸாவின் காந்தர்வக் குரலில் சிம்ம கர்ஜனைபோல் முண்டாசுக்கவி பாரதியின் பாடலோடு தொகுத்துவழங்க, நிகழ்வின் ஆரம்பமே வேகமெடுத்தது.
தொடர்ந்து செல்வி.நிவேதிதாவின் வரவேற்பு நடனத்தில் சூடுபிடித்தது. அதற்கடுத்து நிவேதிதா, தன் ‘மதர்ஸ் ப்ரீஸ்’ குழுவினருடன் இணைந்து செம்மொழிப் பாடலுக்கும், ‘சாரல்’ எனும் இசைத்தொகுப்புப் பாடலுக்கும் சிறப்பான முறையில் நடனங்களை வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாய் விழா மேடைகளை அலங்கரித்துவரும் இக்குழுவினரின் நடனங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன என்பதும், எந்தவொரு தமிழ் நிகழ்ச்சியானாலும் செல்வி.நிவேதிதாவின் நடனங்கள் தவிர்க்க முடியாத அம்சம் என்பதும் கண்கூடான உண்மையாகும். அடுத்து துபாய் நகைச்சுவை மன்றத்தைச் சேர்ந்த திரு.ரமணி மற்றும் திரு.நெல்லை அவர்கள் நகைச்சுவைத் துணுக்குகளை வழங்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து செல்வி.ஸ்ரீவித்யா கிருஷ்ணகுமார் ‘இன்னிசை பாடிவரும்’ எனும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படப் பாடலை கீபோர்டில் வாசித்து பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேரின் 4 ஆண்டுகாலம் கடந்து வந்த பாதை காணொளியாக திரையில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னணியாக இசைக்கோர்ப்புடன் செல்வி.நிவேதிதா தானே எழுதிப்பாடிய ‘தமிழ்த்தேரே! தமிழ்த்தேரே!’ பாடல், மிக இனிமையாகவும், இவ்விதழ் மற்றும் அமைப்பின் சிறப்புகளுக்கு மேலும் மெருகூட்டும் வண்ணமும் அமைந்திருந்தது. இக்காணொளியை உருவாக்குவதில் பங்குவகித்த திரு.கீழை ராஸாவும் திரு.லஷ்மி நாராயணனும் சுருக்கமாகவும் மிக நேர்த்தியாகவும் உருவாக்கி வழங்கியமை சிறப்பான அம்சமாகும்.
அடுத்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வானலைவளர்தமிழ் அமைப்பின் தலைவரும் சிவ்ஸ்டார் குழும நிறுவனங்களின் உரிமையாளருமான திரு.கோவிந்தராஜ் மற்றும் அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் தலைவர் மற்றும் தொழிலதிபர் டாக்டர் திரு.மூர்த்தி ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வானலை வளர்தமிழ் ஆலோசகர் திரு.காவிரிமைந்தன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திரு.மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அமைப்பின் தலைவர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி அமர, தமிழ்த்தேரின் முதல் அச்சுப்பிரதி வெளியீடு நிகழ்ந்தது. முதல் பிரதியை திரு.கோவிந்தராஜ் அவர்கள் வெளியிட, திரு.முஸ்தஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இரண்டாவது பிரதியை திரு.காவிரிமைந்தன் அவர்கள் வெளியிட, திரு.பாலா அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாவது பிரதியை செயலாளர் திரு.சிம்மபாரதி அவர்கள் வெளியிட, அஜ்மான் திரு.மூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அமீரகத்தின் ஏனைய சகோதர அமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசி, தமிழ்த்தேர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து இதழைப் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் வாழும் தமிழ்க்குழந்தைகளுக்கு நமது தாய்மொழியாம் தமிழ்மொழியில் எழுதவும் பேசவும் முறைப்படி கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில் வானலை வளர்தமிழ், அமீரகத்தின் ஏனைய சகோதர அமைப்புகளுடன் இணைந்து முயற்சித்து வருவதின் தொடர்ச்சியாக ‘தமிழ்த்துளி’ அமைப்பின் நிறுவனர் திருமதி.ப்ரியா அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி போதிப்பதின் அவசியம் பற்றி உரையாற்றினார். விழாவில் கலந்துகொண்ட ஈடிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேளாலர் திரு.மீரான் அவர்கள் இப்பணிக்காக தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
இதனை அடுத்து சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட திரு.பாலா மற்றும் திரு.முஸ்தஃபா ஆகியோர் தமிழ் குறித்தும், அதன் பெருமைகள் குறித்தும், மற்ற மொழிகளைவிட தமிழுக்குத்தான் செம்மொழிக்கான முழுத் தகுதியும் உண்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அவையோரை அகமகிழச் செய்தனர். குறிப்பாக, திரு.முஸ்தஃபா அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பதில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளன, ஒரு வார்த்தையை எப்படிப் பிரித்து பலவித அர்த்தங்களில் பயன்படுத்தலாம் என்பவற்றை விளக்கிச் சொல்ல அவையோர் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் வானலை வளர்தமிழின் ஊக்குவிப்பாக அதன் உறுப்பினர் அதிரை திரு.இளையசாகுல் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு ‘அவளுக்கும் உண்டு உணர்வுகள்’ எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. அதன் மதிப்புரையை கவிஞர் திரு.இரஜகை நிலவன் வழங்கினார். ஏற்புரையில் கவிஞர் இளையசாகுல் ஒவ்வொரு விரலுக்கும் இத்தொகுப்பு வெளிவரக் காரணமான ஒரு நபரைக்குறிப்பிட்டு தன் நன்றியை வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. அதில் தமது கட்டைவிரலாய் தலைவர் கோவிந்தராஜ் அவர்களைக் குறிப்பிட்டு, அனைவரும் வேலைக்காரத் தேனீக்கள், அவர்தான் ராணித்தேனி என்று உவமைப்படுத்தியதும் அனைவரின் பாராட்டைப் பெற்றது.
இறுதியாக, இலக்கிய மேடையை ஜனரஞ்சக மேடையாக்கி தந்திரக் கலைஞர் வைக்கோம் ஷா அவர்களின் அற்புதமான தந்திரக் கலை (ஆயபiஉ ளூழற) நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிசயிக்கும் வகையில் அவர் நிகழ்த்திக் காட்டிய தந்திரக் காட்சிகளைக் கண்டு பெரியவர்கள் கைதட்டலுடன் ரசிக்க, குழந்தைகள் குலுங்கி குலுங்கி சிரித்த வண்ணம் கண்டு மகிழ்ந்தனர். அனைத்து நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்வுடன் விழா இனிதே நிறைவுபெற்றது. துணைத்தலைவர் ஜியாவுத்தீன் நன்றியுரை வழங்கினார். விழா முழுமையும் கீழை ராஸா அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் எளிமையாகவும் இனிமையாகவும் இயல்பாகவும் நிறைவாகவும் அமைந்தது என்பதில் மிகையில்லை. திரு.ஆனந்தன் அவர்களின் சீரான மேடை நிர்வாகமும் திரு.லஷ்மி நாராயணனின் ஒலி-ஒளி நிர்வாகமும் பாராட்டுக்குரியவை.
இந்த Buy cheap Lasix இதழ் சிறப்பாக அச்சில் வெளிவர, தனது தமிழ் அலை அச்சகம் மூலம் அனைத்து உதவிகளையும் செய்து, இதழை சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டு வழங்கிய கவிஞர் இசாக் அவர்களின் பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. அவருக்கு வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கீழை ராஸா, சிம்மபாரதி, லஷ்மி நாராயணன், முகவை முகில், ஆனந்தன், ஆதி பழனி, தண்டலம் பழனி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழா நிறைவில் சிவ்ஸ்டார் பவன் சார்பாக உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடுமுறை தினமான வெள்ளியன்று நிகழ்ந்த இவ்விழா, துபாய்வாழ் தமிழர்களுக்கு ஒரு பல்சுவை விருந்தாக அமைந்தது என்பது உண்மை. இந்நிகழ்வில் ஏனைய சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்குகொண்டு விழா நிறைவாக அமைய ஊக்கம் தந்தனர்

Add Comment