இது ஓர் அஞ்சலிக் குறிப்பு அல்ல -முடவன் குட்டி

இது ஓர் அஞ்சலிக் குறிப்பு அல்ல

-முடவன் குட்டி

( Kadayanallur.Org யில் O K முகம்மது இபுறாகீம் M C அவர்கள் 26-03-2014 அன்று மறைந்த செய்தி குறிப்பு பதிவானது. அதன் தொடர்ச்சியாக எனது நினைவுகளைப் இங்கே பதிவு செய்கிறேன் )

ibrahim

தறி நெய்வதைக் குலத்தொழிலாகக்கொண்டு  வாழ்ந்த காலம் ஒன்று  இருந்தது. ஊரே  ஓர் குடும்பமாய் வாழ்ந்தோம். ராப்பகலாய்  தறிக்குழியில் கிடந்தாலும் , தறிகாரனுக்கு கடைசியில் மிஞ்சுவதென்னவோ  கடனும், காய்ந்த வயிறும் தான்: இருந்தபோதிலும், அந்நியோன்னியமும் அன்பும் அங்கே   செழித்திருந்தது.
             எங்கள் தெருவில்  வயசாளி ஒருவர் இருந்தார். அவர் வழக்கமாக,  ஊராணிக்குத் தெரு வழியே போகும்போது, ஒரு வீட்டுத் திண்ணையில் தார் சுத்திக் கொண்டிருக்கும் ஆமினாவிடம் பேச்சுக்கொடுப்பார்:
”.ஏம்மா.. ஆமினா..சடவாறப்போன  ஒம்  மருமவளோட   தாய்க்காரி நேத்து எங்கிட்ட அழுதா: இனிமெ எம் மவ  சண்டை போட மாட்டா ஆமினா மதினி கிட்ட சொல்லுங்கண்ணே–ன்னு. இன்ணைக்கு மருமவளப் போயி கூப்பிடு. கண்டிப்பா வருவா” -என்பார். அப்படியே மேற்கே  நடப்பார். வழியில்  மருமவ வூட்டு வாசல்-ல நின்ணு சத்தம் போடுவார்: “ எம்மா.. ஒம் மாமியார் ஆமினாவுக்கு  முட்டு வலி: தறியில எறங்க முடியாம அழுவுறா..  .அவ கூப்பிட வந்தாலும் வராட்டாலும்  நீ அங்க இன்ணைக்குப் போயிடணும்..” -எனச் சொல்லியவாறு  ஊராணிக்கு நடப்பார். திரும்பி வரும் வ்ழியில், ஹமீது சாயிபு இவரிடம் “ சாச்சா.. பஞ்சாயத்தில பேசியபடி, அண்ணன் இன்னும் நெல்லு அளக்கல்லே..” என்பார்.  “வேய் இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ. ஒன் அண்ணண்ட்ட நான் சொல்றேன்”  என்பார் .
         ஒரு வ்யசாளியின் சாயங்கால  நடை:  போகிற போக்கில்- சர்வ சாதாரணமாக மாமி-மருமவ  சச்சரவைத் தீர்த்து வைக்கிறார். பஞ்சாயத்துத் தீர்ப்பை மதியாத அண்ணன் மேல் கோபம் கொண்ட ஒரு தம்பி  சமாதானமாகிறார்.
       செல் போன், கம்ப்யூட்டர்  தலைமுறை இளசுகளுக்கு,  இது நம்ப முடியாத கட்டுக் கதையாகத் தெரியும். ஆனால் நான் சொல்வது நிஜம். (அந்த வயசாளியை  நான் நன்கறிவேன்)
        பாகப் பிரிவினை, அண்ணன் – தம்பி தகறாறு, கணவன்-மனைவி பிணக்கு..என எத்தனையோ பிரச்சினைகளை இந்த வயசாளி  சமாதானம் செய்து தீர்த்து  வைத்திருக்கிறார். இவர் போல ஒவ்வொரு தெருவிலும் இரண்டு மூன்று வயசாளிகள் அன்று நமது ஊரில் இருந்தனர். பணமோ-செல்வாக்கோ-அந்தஸ்தோ அற்ற சாமான்யர்களான இந்த வயசாளிகளால், ஒரு சமூகமே  ஆரோக்கியமாக இருந்தது.
  இதனை இப்படியும் சொல்லலாம்.
         இந்த வயசாளிகளை-உன்னத மனிதர்களை -அன்றய தறிகார சமுதாயம் உருவாக்கிற்று. 
             
       இவ்விதம், தனது நலனை மட்டும் கருதாது, பிறருக்காகத் தொண்டு செய்த, சென்ற தலைமுறை மனிதர்களைப்போல, இங்கே -இன்று  -எவரேனும் இருக்கிறார்களா..?
ஆம்: ஒரு சிலர் தான். விரல்விட்டு எண்ணிவிடலாம்.
      இந்த ஒரு  சிலரில், ஒருவர்  ஓ.கே.முகம்மது இபுறாகீம் அவர்கள்.
.      இது பழைய காலம் அல்ல. ,உணவு  உடை,வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, குழந்தைகள் படிப்பு, கல்யாணம்.. என – இன்று-  ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்வு,  போராட்டமாகவே கழிகிறது. இந்தச் சூழ் நிலையில், ஒருவன் மற்றவனுக்கு நல்லது செய்ய  நினைப்பதே’ பெரிய விஷயம். ஆனால் ஓ.கே. முகம்மது இபுறாகீம் அவர்கள்,  தனது முப்பது வயதிலிருந்தே, அலுவலகத்தில் வேலையும் பார்த்துகொண்டு –  நமதூர் மக்கள் பலருக்கு   மனிதாபிமானத்துடன்  உதவிகள் பல செய்திருக்கிறார். ‘ நாலு பேருக்கு  நல்லது செய்ய வேண்டும்’- என்ற இவரது குணம், ஓரு கட்சி/ அமைப்பு, தன் கொள்கையை/சித்தாந்தத்தை, இவர் தலைக்குள்  கட்டளையாகத்  திணித்தபடியால் வந்து  படிந்து கொண்டதல்ல:  அல்லது ஓர் அற நூலின் போதனையைப்  ’பின்பற்றியே ஆக வேண்டும்’ என்ற ’கடமை உணர்வால்’ வலிந்து முடிந்து கொண்டதுமல்ல.  பிறருக்கு உதவியாக இருப்பது என்பது இவரது இயல்பின் ஒரு பகுதியாக இயற்கையாகவே இவரிடம் இருந்திருக்கிறது.
      இவர்  நமது ஊர் மக்களுக்காக ஆற்றிய பணியினை ஒரு பட்டியலுக்குள் அடக்க முடியாது.
      இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்  இவர் முனிசிபாலிட்டி கவுன்சிலர் ஆனார்
.( அட்டக்குளம் தெரு ). எம்.சி. ஆகிவிட்டதால், கவுரமாக  நாற்காலியில் அமர்ந்து வருவோர் போவோரின் மரியாதையை புன்சிரிப்பால் அல்லது தலையசைப்பால் ஏற்று, லோக்கல் பாலிடிக்ஸ்  பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக  தெருவுக்குப் போனார். சனங்களுடன் உரையாடினார்.அவர்களுடனேயே இருந்தார். ரேஷன் கார்டு வரலே.. முதியோர் பென்ஷன் ஏன் லேட்…சாக்கடை கட்டிக் கிடக்கிறது.. …என்ற,  அவர்களின் குறைகளை திறந்த மனதுடன் கேட்பார். உடனே  சரி செய்ய ஏற்பாடு செய்வார்.
      ஓய்வு பெற்ற ஊழியர் சங்கச் செயலாளராக இவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைக்கத்தக்கது. ஒரு செயலாளர் பதவியின்  வரம்புக்கு  உட்பட்ட பொறுப்புகளோடு நின்று விடாமல் , ஓய்வு பெற்ற ஊழியர்களைத்  தேடித் தேடி இவர் செய்த உதவி,  இவரது மனிதாபிமானத்தின் எல்லையைக் காட்டும்.
      அலுவலகத்தில் வேலை பார்த்துகொண்டே, நமது ஊரில் , எத்தனையோ பேரைக் கல்லூரியில் சேர்க்க ஊர் ஊராய் அலைந்துள்ளார் . உடல் நலம் சரியில்லாத  பலரை டாக்டரிடம் காட்ட திருநெல்வேலி மதுரை மருத்துவ நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
        சமீபத்தில் மருத்துவம் ( டாக்டர் )  படிக்க  இடம் கிடைத்த ஒரு ஏழைப் பையனை  கல்லுரியில் சேர்க்க திருச்சி சென்றார். அந்தப் பையனுக்குச் செலவு வைக்கக்கூடாது என்பதற்காக ரயில் நிலைய கழிவறையில்/குளியலறையில் காலைக் கடமைகளை முடித்தார். இதனை அந்தப் பையன் கண்ணீருடன் நினவு கூர்ந்தான்.
     இவர் திருச்செங்கோட்டில் வேலை பார்த்தபோது ஊஞ்சனை கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பணம் வசூல் செய்து கட்டிடம் எழுப்பி, அரசிடம் அனுமதி பெற்று  கூட்டுறவு வங்கி ஒன்றினை  நிறுவினார். அந்த ஊர் மக்களின் நினைவில் Buy Viagra Online No Prescription இவர் இன்னும் வாழ்கிறார்.
       இவர் இன்னும் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால், குறைந்தது- ஓர் ஐநூறு பேருக்காவது,  இவரின் உதவிக் கரம், குறை தீர்த்து வைத்திருக்கும்.
        நான் பழகிய அளவில், இவரிடம் எனக்குப் பிடித்த அருமையான  குணம்:
       அன்பும் சரி வெறுப்பும் சரி, இவரிடம் மிதமாக  இருந்தது என்பதும் கோப தாபங்கள், கசப்பு, வெறுப்பு இவைகளை மனதில் தேங்க விடுவதில்லை என்பதும் தான்.
    இவர் மனிதர்களை நேசித்தார். எல்லாரையும் அன்பினால், ஆரத் தழுவி அரவணைக்க பேராசை கொண்டார்.
              இவர் பற்றிய குறையாக சிலர் இதனைச் சொல்வதுண்டு.  தெரிந்த ஒரு மனிதரிடம்  பேசிக்கொண்டிருப்பார்.  அந்த மனிதரின்  வாழ்வில் நடந்த மிக்கியமான நிகழ்வில், தான் ஆற்றிய பங்கினை அவரிடமே  நினைவூட்டுவார்: நினைவூட்டிக்கொண்டே இருப்பார். இவ்வித   நினைவூட்டலை, நான் இவ்விதம் விளங்கிக் கொள்கிறேன்.   “ நான் உனக்கு மிகவும் நெருங்கியவனல்லவா..? உனது அன்பிற்க்கு உரியவனல்லவா..?  உனது உலகில்  நானும் உன்னோடு இணைந்து கொள்ளலாகாதா..? “ என்ற இவரின்,  ஆத்மார்த்தமான வேண்டுதலாக இருக்கக் கூடும்.   இவ்விதம், ஆழமான பிரியத்தையும், அதிகமான  நேசத்தையும், சக மனிதரிடமிருந்து  சதா தேடியவறே இருந்தார். 
 
                         இது தனி மனிதர் ஒருவருக்காக  எழுதப்பட்ட  அஞசலிக் குறிப்பு என்பதை விடவும்,  ’தான்’- ’தன் குடும்பம்’ என்பதையே குறியாகக் கொண்டு வாழும் பெரும்பாலோரைப் போல அல்லாமல்,  பிறருக்காக – ஆதரவற்ற சனங்களுகாக உதவிக்கரம் நீட்டும் ஒருவரின் வாழ்வு அர்த்தமுடையது என்பதை அழுத்தமாகச் சொல்லவும், மறைந்த இபுறாகீம் போன்றோர் தன்னலம் கருதாது பிறருக்காக  உதவி செய்ததைப் போல,  ஒவ்வொருவரும் பிறருக்குச் செய்ய வேண்டும்என்பதனைப் பதிவு செய்யவுமே இதனை  நான் எழுத நேர்ந்தது.  என்பதனைப் பதிவு செய்யவுமே இதனை  நான் எழுத நேர்ந்தது.

Add Comment