அடுத்த வருசமாவுது கிடைக்குமாடே…(கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்)

நேரத்தை எச்சரித்து அலறும் அலாரம்களின் பாதுகாப்பில் இரவில் மடியில் கொஞ்சம் தலைசாய்ப்பதும், உறங்கிப் பின் விழித்து உண்பதுவும்
வைகறையில் வணங்கிப் பின் உறங்கியும் மறுபடியும் அந்த மணிச்சத்தத்தில் முற்பகலில் எழுந்து குளித்துக் கிளம்பி அலுவலகம் வருவதுமாய்,

நேற்றோடு சேர்த்து இன்று இரண்டாம் நாளில்,

மாலை மயங்கி இரவு தழுவுகையில் இப்தார் என்று ஆசை மிகக்கொண்டு உணவும் பானமும் உட்கொண்டு ஆண்டவனுக்கான தாகமும் பசியும் ஆர்வமாய் முறிப்பதும்,

இரவில் முக்கியமாக தராவீஹ் எனும் இறைவணக்கத்தில் இறுதியாக அங்கே வித்ரு தொழுகையில் கேட்கப்படும் கல் மனமும் கனியும் படியான கை மலர்த்திக் கண்ணீருடன் கேட்கும் துஆ, மற்ற நேரமெல்லாம் குர்ஆன் ஓதுவது, என…

முந்தைய வழக்கமான காலை மதியம் இரவு எனும் உண்ணும் பழைய பொழுதுகளைக் மறந்து புதிய பொழுதுகளில் உண்பதும் குடிப்பதுமாய், கடினமான வேலைகளை பசித்திருக்கும் நோன்புக்காலங்களில் தவிர்த்து ஒதுங்குவதும் கெட்ட வார்த்தைகள் பேசாமலும் கேட்காமலும் அதனை பேசும் சபைகளிலிருந்து ஒதுங்கியும், வீண்விவாதங்களை தவிர்ப்பதுமாய்…
இன்னும்…

பஜ்ரு எனும் வைகறை வணக்கத்தின் அழைப்பு (பாங்கு)க்கு முன்பாக தன சஹருக்காக அந்தமூன்றாம் ஜாமத்தில் பிரிஜ்லிருந்து எடுத்தோ அல்லது அப்பொழுதுதான் சமைத்தோ சிலர் ஓவனில் வைத்து எடுத்த ஆவி பறக்கும் சோறும் அதற்கான கறியும் அது ஆறிவிடும் முன்பே அமர்ந்து உண்டு கழிக்கும் அந்த வழக்கமான வைகறை பசியாறும் எந்திர வாழ்வின் எந்த சுவையுமில்லாத இன்றைய சஹர்….

வாழ்வில் மறக்கமுடியாத சில அமர்க்களமான மகிழ்ச்சியான ஆரவாரமிக்க பொழுதுகளுடன் கலந்து எனது குட்டிக் காலத்தின் மகிழ்வான பொழுதுகளைத் தாங்கி நிற்பதால் இன்றைக்கு அனுபவிக்கும் இந்த வைகறைப் பொழுதுகளை சஹர் என சொன்னாலும் அது அன்னியப்பட்டு கொஞ்சம் அகன்றே என்மனதோடு மல்லுக்கட்டி நிற்கிறது..

என் நினைவுகளின் தோட்டத்தில் பதியனிட்டு வளர்த்த மணம் வீசும் மலர் செண்டுகளாய் பூத்துக்குலுங்கும் அந்த மறக்க முடியாத மழலைக் காலத்து சஹர் பொழுதுகளும் நோன்புக் காலங்களும்…

ஆவலோடு கூடும் அந்த பிந்தைய ஜாமத்தில் கையோடு வெண்கலச் செம்பில் தளும்பும் தண்ணீரை வைத்துக் கொண்டு இருள் படர்ந்த அந்த பொழுதில் நண்பனின் வீட்டுத் திண்ணையில் ஏனைய அனைவரும் கூடியிருக்க அங்கே அந்த சஹர் நேரத்தில் அனைவருமாய் சேர்ந்து கொண்டு ஒவ்வொருவராக சாப்பாட்டின் தொட்டுகிட என்ன கிட்டியது என்பதைக் கலந்துகொள்வோம், அல எங்கூட்டுல கருவாடு, எங்கூட்டுல கத்தரிக்கா, எங்கூட்டுல மீனு ன்னு சொல்லி அந்த கருவாட்டுநோன்பு மீன்நோன்பு கத்தரிக்காநோன்புகளை வயிறுகளில் இட்டு பூட்டி அன்றைய நாளை நோன்பாக்கும் மந்திரமான
“நவைத்து சவ்மகதின் அன்அதாயி பர்லி ரமலானி… என வட்டமாய் அமர்ந்து ஒவ்வொருத்தனாய் திக்காம தப்பில்லாம நிய்யத்து சொல்லும் போது அவனவன் வயிறு வண்ணான் தாளி போல ஒரு நாளைக்கான உணவை இரை சேர்த்துப் புடைத்து நிற்கும்.

அந்தப் பொழுதில் கிசுகிசுக்கும் குரலில் சாக்கு இழுத்துவிடப்பட்ட அந்த இருள் கப்பிய திண்ணைகளில் அதிகம் சிரிப்புகளுடன்.. முந்தைய நாள் நோன்பைப் பற்றிய கதைகள், நோன்பு திறக்கப் பள்ளிவாசலுக்குப் போனதும் தராவீஹ் தொழுகை தொழுததும், தொழுவும் போது சேக்காளி மூஸா சிரிச்சதுக்கு இரண்டாவது ஸஃப்பில் இருந்து தாண்டி பாய்ஞ்சு வந்து வைத்தியர் பெத்தாப்பா கண்ணை உருட்டி முழிச்சு மிரட்டி அவனை…
அல!… அவன் செவிய பிடிச்சுத்தூக்கி தலையில் நங்குன்னு கொட்டி உட்டதும், பாத்துக்கிட்டுருந்த பாக்கி அவ்வளவு பேரும் அங்கே அவன் அழுவுறதை பார்த்து சிரிச்சு கழிச்சதை, சாரிடே இவந்தேண்டே மொதொ சிரிச்சான். கூத்தும் கேலியுமாய் கழியும் அந்தப் பொழுதில்..

அந்தக் கூதலின் குளிர்ச்சியில் கூடிட தன்பெட்டை இணை தேடி நடுத்தெருவில் எங்களைக்கடந்து ஓடியவண்ணம் நாக்கைத் தொங்கப் போட்டு அலையும் தெருநாய்களைக் கண்டால்… ஒரே கூச்சலுடன் கையில் கல்லை எடுத்க்க்கிட்டு ஏ! அல …உடாத புடி! புடி! ன்னு அங்கே திண்ணையில் சாத்தி வைத்திருக்கும் அலகம்புக்கெட்டிலுருந்தும் ஆளுக்கு ஒரு கம்பு ஒண்ண உருவி அடிக்க பாயுறதுமாய், தண்டைக்கார ஓடை வரை தொரத்த…
இப்ப ஓயக்கிட்டிருந்த அது கொஞ்சம் ஓடி ஸ்லோவாயி நின்னு திரும்பி உர்ர் ன்ன நேரம்,

அல நின்னுட்டு டே!… வந்தா செத்தம்பா..
உடமாட்டம் இப்பதான் எங்கள்ட்டருந்து கல்லு நிக்காமப் பறக்கும்… இல்லைன்னா எங்க கால் பெடரியில் பட நாங்க அங்கன நிக்காம பறப்போம்.
அதுல ஒருத்தன் ஓடும்போது சொல்வான் நாயடிச்சா நாப்பது நன்ம டே…

நல்லம்மாகளின் அழைக்கத் தேடிவரும், வருகைகள் அந்த அதிகாலை ஜமாத்துகளை கலைத்து வீடு கொண்டு சேர்க்கும்.
இவ்விதம் கழியும் அந்த மகிழ்ச்சிமிக்க எங்களின் செட்டில் அவனும் ஒருவன்.

ஏழு எட்டுன்னு படிக்கும் எங்கள் செட்டில் சேரும் அவன் நாலாம் வகுப்பில் படிக்கும் பால்ய பருவத்தில் மிகவும் சின்னப்பையன். அவன் எங்களின் செட்டை அவனுக்கு பிடிக்கும், எப்பொழுதுமே தன்னையும் எங்களில் இணைத்து கொள்வான். அவங்க வீட்டில் கூட அவங்க உம்மா“எல நீ ஒந் தரத்துப் பேக்களோட சேரம்லே! கீழ வூட்டு மம்மலி கூட சேறு அப்படின்னு சொல்லும்… ஏ மாடா அவங்கோ பெரிய கொமரப்பேக்கோ அவங்க பின்னாலே அலையிற!” அப்படின்னு வையும், அவனும் ஒன் வேலையப் பாருளான்னுட்டு எங்கள்ட்ட வருவான். எப்பவுமே எங்கள் செட்டில் அவனும் ஒரு ஆள்.

நோன்பு காலம் வரவும் எங்க அனைவரின் நோன்புகளோடு அவனும் மேற்கண்ட அனைத்து மகிழ்வுகளிலும் ஆசைப்பட்டவனாக தானும் நோன்பு வைக்கணுமின்னு அவனது வாப்பட்ட சொன்னான்.. அவர் உம்மாட்ட கேக்க சொன்னதும், அவன் கேட்டான், உடனே அவ்வும்மா அடிக்க வந்துட்டுது.
பச்ச மண்ணு… பசி தாங்கமாட்ட, செத்துப்போப்போற, போயி தூங்குலே.. அப்படின்னு பத்தி உட்டுட்டுது
கடேசியில இவன் அழுது கூட்டம் போடவும் சரின்னு அவனை சஹர் எழுப்புறேன்னு போய் சமாதானம் சொல்லி எழுப்பாமலே விட்டுட்டுது.

மறுநாள் காலையில் வழக்கமா எழுந்தவன் அழுது சஹர் எழுப்பாமல் விட்டதுக்கு கடுமையாக சண்டை போட்டுட்டு ஒன்னும் குடிக்காம திங்காம பள்ளிக்கூடம் வந்துட்டான், மதியமும் சாப்பிடாமல் அவங்க உம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளிக்கூடம் முடிந்த பின் எங்களுடன் வந்து அவனும் ஒரு நோம்பாளியாகக் கூடிக்கொண்டான். அவனது சோர்வையும் அசதியையும் கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் பல்லைக் கடிச்சிக்கிட்டு சந்தோசமா என்குடன் அலைந்தான். அவனது மகிழ்ச்சி எங்களின் அருகில் அமைந்த பொழுதுகளாய் இருந்த அந்த நேரத்தில், மாலை நெருங்கிவிட எங்களோடு வந்து பள்ளியில் நோன்புக் கஞ்சி குடிக்கப் கிளம்பிப் போன இடத்தில் ஆளுக்கு ஒரு கொட்றா எடுக்கும் போது, அவனும் எடுக்க…

அல நின்னு!

நீ சின்னப் பயன், நீ ஏம்ல இங்க வந்தே… நீ ஒன்னும் நோன்பு வைச்சிருக்க மாட்டே வயத்து நோன்பு தானலே… மாடா ஊட்டுக்கு போ! அப்படின்னு அங்கன ஓராளு கையில் ஈத்தக்களயை வச்சு அவனை மண்டையில் தட்டி விரட்ட பதறிப்போன அவன்,
பாக்கப் பாவமா ன்னாங்கோ அந்த அல்லாஹ் சத்தியமா! நான் நோன்புங்கோ, ஆண்டவன் சத்தியமா நான் நோம்புங்கோ இவன்ட்ட வேண்ணா கேளுங்கோ, நெசம்மா கொரவான் மையம்… அப்படின்னு கீச்சு online pharmacy without prescription மூச்சுன்னுஅழுவ ஆரம்பிச்சான்….

பசியுடனும் தாகத்துடனும் அந்த ஏக ரப்புல் ஆலமீன் மட்டுமே அறிந்த சஹர் செய்யாமலும் நிய்யத்து வைக்காமலும் நாளெல்லாம் நோற்ற நோன்பை தனது பிஞ்சு மனதில் ஆசையுடன் வைராக்கியத்தில் வைத்த தன் பரிசுத்த நோன்பை அந்த ஈத்தக்களயால் மண்டையில் அடிக்கும் அவரிடம் நிலை நிறுத்தி வாதிட்டுக் கொண்டிருந்தான்.

கடைசி வரை அவனுக்கு கஞ்சி வழங்கவுமில்லை, திரும்பிவிட்டான்…
ஆனால் அவ்வாண்டின் அனைத்து நோன்புகளையும் நோற்று அந்த மறுநாள் தொடங்கி சஹருடன் அனைத்து தராவீஹ் உள்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டான்… ஆனால் கஞ்சி குடிக்க மட்டும் வரமாட்டான்.
அவன் அடிக்கடிக் கேட்பான்.
அடுத்த வருசமாவுது கிடைக்குமாடே…

Add Comment