கட்டுரை 5 : பாவங்கள் அகற்றும் மாதம்

பாவங்கள் அகற்றும் மாதம்

-மெளலவி. வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

அரிதாய்க் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடுவது எவ்வளவு கைசேதத்திற்குரியது. மீண்டும் அதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் ஏதேனும் கிடைத்துவிடாதா என எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் உள்ளங்களுக்கு தவமிருந்து பெற்ற வரமாய் தொடர்ந்து அச்சந்தர்ப்பங்கள் நல்குமானால் அது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும், அத்தகைய மகத்தான வாய்ப்புகளோடு ஆண்டுதோறும் வருகிறது ரமளான்.

ரமளான் பாவமன்னிப்பின் மாதம். எல்லா மனிதர்களும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைப் பிரத்யேகமாகக் கொண்டுள்ள மாதமான ரமளானில் அருள் வளம்,பொறுமை,இறைநெருக்கம் போன்றவைகளைப் போல பாவமன்னிப்பும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் இரண்டாவது பத்து நாள்கள் பாவமன்னிப்பிற்கான நாள்களாக வகுக்கப் பட்டுள்ளது இன்னும் இம்மாதத்தில் செய்யும் நல்லறங்களுக்கு ஒன்றுக்குப் பன் மடங்காக இறைவனால் நற்கூலி எழுதப்படுவதால் இம்மாதத்தில் நாம் செய்யும் நல்லறங்கள் நம் பாவங்களை நீக்குகின்றன. நம் இதயத்தில் புகுந்திருக்கும் கொடிய குணங்களையும், தீய பண்புகளையும் நீக்கும் அருமருந்தாகின்றன.

சரி, எவ்வாறு பாவமன்னிப்புத் தேடுவது அதற்காக நாம் கொடுக்கபோகும் சன்மானம் என்ன..?எப்படி நம்மை வருத்திக் கொள்ள வேண்டும்?எத்தகைய தியாகங்களை செய்தாக வேண்டும்?காணிக்கையாக நேமிதங்களாக எவ்வளவு நாம் இறைவனுக்கு செலுத்தவேண்டும்? போன்ற பரிகாரங்களை நோக்கிய Lasix online நீண்ட பட்டியலெல்லாம் தேவையில்லை. நமது பாவக்கரையகற்ற இறைவனிடத்தில் சிபாரிசு செய்யும் இடைத்தரகர்களும் இதற்குத் தேவையில்லை.

நாம் செய்ய வேண்டியது மனதால் நம் தவறை உணர்ந்து மனம் கசிந்துருகி,இனிமேல் அந்தப் பாவத்தின் பக்கம் மீள மாட்டேன் என்ற உறுதியுடன், இறைவா…!மன்னித்தருள் என மனமுருகி அவனிடத்தில் கையேந்திப் பிரார்த்தித்தால் உடனடியாக நமது பிராத்தனைகளுக்காக அல்லாஹ் செவிசாய்க்கின்றான். நமது பாவக்கரையகற்றி நம் உள்ளங்களைத் தூய்மைப் படுத்துகின்றான்.நம்மீது வாஞ்சையோடு அன்பு காட்டி அருள் பொழிகின்றான். நம்மீது அக்கறை காட்டுகின்றான். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள் “தமக்குத் தாமே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே..!அல்லாஹ்வின் அருட்கொடைகள் மீது நிராசையடைந்து விடாதீர்கள்…(39:53)

எவ்வளவு பாவம் செய்து விட்டோம், எவ்வளவு அழுக்குகள் நிறைத்தவன் நான், என்னை அவன் ஏறெடுத்தும் பார்ப்பானா..? என்று நாம் நிராசையடையத் தேவையில்லை, நாம் எவ்வளவு பாவம் செய்த போதிலும் தவறுணர்ந்து அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோருபவர்களுக்காக அவன் கரம் விரித்துக் காத்திருக்கின்றான். உங்களுடைய இரட்சகனின் பாவமன்னிபின் பக்கம் விரைந்து வாருங்கள் (அல்குர்ஆன் 3:133 ) என பாவமன்னிப்பை நோக்கியழைக்கின்றான்.

இன்னும் பாவமன்னிப்புத் தேடுவதால் அந்த ஓரிறைவன் அளவில்லா உவகையடைகின்றான். எந்தளவிற்கென்றால், வெயில் சுட்டெரிக்கும் பாலை நிலத்தில் ஒரு பயணி ஒட்டகத்தோடு பயணம் செய்கிறார். வழியில் அயர்வுமிகுதியால் சற்று ஓய்வெடுத்து தூங்குகிறார். விழித்ததும் அவர் உணவுப் பொருட்களும் நீரும் போக்குவரத்திற்குத் தேவையான பொருள்களுடன் வந்திருந்த அவரது ஒட்டகத்தைக் காணவில்லை. இனி நாம் பட்டினி கிடந்தே நம் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டியதுதான் என்ற கவலையுடன் மயங்கிவிழுகிறார் நேரம் சென்றதும் கண் விழிக்கின்றார். அங்கே காணாமல் போன அவரது ஒட்டகம் அவர் கொண்டுவந்த பொருள்களைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. அந்த வேளையில் அவர் எவ்வளவு பூரிப்படைவரோ அதைவிட அல்லாஹ்விடம் நாம் பாவமன்னிப்புத் தேடும் போது அல்லாஹ் அளவிலா மகிழ்ச்சியடைகின்றான்.

பாவமன்னிப்பிற்கான தவணையாக இறைவன் நமது உடலை விட்டு இறுதி மூச்சுக் காற்று பிரியும் வரை அவகாசம் தருகின்றான், இவ்வளவு வாய்ப்புகளைக் கொடுத்தும், அவகாசமளித்தும் பாவமன்னிப்புத் தேடாத தனது அடியார்களின் மீதுள்ள அக்கறை கலந்த கோபமாகத்தான் தனது நபியவர்களை “இந்த ரமளான் மாதத்தை அடைந்தும் யார் பாவ மன்னிப்பைப் பெற வில்லையோ அவர் மீது நாசம் உண்டாகட்டும் என பிராத்திக்கச் செய்தான்.

முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பாவங்களற்ற நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தனது சமுதாய மக்களுக்கு முன் மாதிரியாக ஒரு நாளைக்கு நூறு தடவைக்கும் அதிகமாக பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். தனது தோழர்களிடதிலும் அதிகமதிகம் பாவமன்னிப்புத் தேட அறிவுறுத்தினார்கள்.

இம்மாதம் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும் நாம் நமது பாவங்களுக்காக வருந்தி இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு பெற்று நமது உள்ளங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்வோமாக.

Add Comment