உலகத்தில் நான் உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன்…

photo (4)

உலகத்தில் நான் உன் அருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்…

சின்ன பிள்ளையில் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில்
மேலப்பள்ளிவாசல் கந்தூரி வந்தால்
குழாய் ரேடியோ கட்டி இந்த பாடலில்
இருந்துதான் கந்தூரி கொண்டாட்டங்களை ஆரம்பிப்பார்கள்
இசை முரசு நாகூர் ஹனீபாவின் அந்த
கணீர் குரல் பெரிய தெருவை தாண்டி
கலந்தர் மஸ்தான் தெரு கீழக்கடைசி வரை கேட்கும்.அந்த வயதில் நாகூர் ஹனிபா பற்றியெல்லாம் தெரியாது,
ஏதோ இசுலாமிய பாடல் என்றுதான் தெரியும் ஆனாலும் அதையும் தாண்டி அந்த கம்பீர குரலில் ஏற்பட்ட
ஈர்ப்புதான்,பின்பு அவர் பாடல்களை அதிகம் கேட்க ஆர்வத்தை தூண்டியது.

buy Bactrim online justify;”>எத்தையோ பிற இசுலாமிய பாடல்பாடும்
பாடகர்கள் இருந்தாலும்,நாகூர் ஹனிபா அவர்களின் அழுத்த திருத்த உச்சரிப்பும்,
உச்சஸ்தானத்திலும் பிசிறு வராத
தெளிவான குரலும்,பாடும் போது
அவரின் ஆர்ப்பாட்டம் இல்லாத உடல் மற்றும் தலை கை அசைவும்,இசுலாமிய பாடல் என்றால் இவர்தான் என ஆயிற்று…

எங்கள் ஊரில் தறிச்சத்தத்திற்கும் தார் சுற்றும் சத்தத்தோடு சேர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் பதினொரு மணிவரை,இவரின் பாட்டு சத்தமும் சேர்ந்து ஒலித்தால்,இவர் பாடல் கேட்காமல் நாங்கள் யாரும்
வளர்ந்திருக்க முடியாது என்றால் மிகையில்லை எனலாம்…

வாத்தியக்கருவிகள் அதிகம் இல்லை என்றாலும்,வார்த்தை வார்ப்புகளால்
அவர் பாடும் போது இனிமை கூடித்தான் இருக்கும்,ஆனாலும் பாடலுக்கேற்ற
வாத்தியங்களும் சிறப்பாகவே பயன்படுத்தியிருப்பார்,குறிப்பாக #பெரியார்_பிலாலின்_தியாகவாழ்க்கை
பாடலில் பிரிவின் வலியை வெளிப்படுத்த
வேண்டும்,அவரின் குரலில் அந்த பாவம்
வந்தாலும்,அந்த பாடலில் அந்த வலியை
உணர்த்த #செனாய்_ என்ற இசைக்கருவி தேவைப்படுகிறது,அதை மொத்ததில் சரணத்தில் நான்கு இடத்தில்தான் பயன்படுத்தியிருப்பார்
#தெருவெல்லாம்_திரிந்தார்_பித்தன்_
#போலே_மதினாவிலே_சதா என்ற வரிக்கு பிறகு வரும் அந்த செனாய் இசைதான்,மொத்தபாடலையே தாங்கி நிற்பது போல் தோன்றும்.

ஹனிபாவின் குரலில் அத்தனை வசீகரத்துக்கு இன்னொரு காரணம்
அவரின் பாடல்களுக்கு அலங்காரத்தமிழ் வார்த்தைகள் கொண்டு பாட்டு எழுதிய கவிஞர்கள் நாகூர் சலீம்,நாகூர் ஆபிதீன்,காஸிம் மற்றும் அப்துல் கபூர் போன்றவர்களும் முக்கிய காரணம்.
அந்த கவிஞர்களைப்பற்றி அதிக குறிப்புகள் கிடைக்கவில்லை,மேலும் யார் யார் என்ன பாடல் எழுதினார்கள் என்று தெரியவில்லை,ஆனாலும் அவர்களின் எளிமையான மற்றும் வலிமையான வரிகள், பாடல்களுக்கு உயிர் கொடுத்தது என்பது மறுக்கவே முடியாத உண்மை…

“சன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞானப்பெருமான்”என்று மிக அழகாக தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பாடலிலும்
மிக எளிமையான வார்த்தைகளையும்
“இனபேதம் குலபேதம் மறுத்தார் நபி
எங்கும் இன்பங்கள் பொங்கிடவே
உழைத்தார் நபி” என இருளில் நிலவாக பிறந்தார் பாடலில் அழகிய வார்த்தைகளிலும்…”பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை” என்ற ஆழ்ந்த உண்மையையும்..
“பெருமான் நபிகள் பகன்றார்கள்”
போன்ற அரிதான வார்த்தைகளையும் கொண்டு அனைத்து பாடல்களிலும் அழகு சேர்த்த அந்த புலவர்களையும் நினைத்துபார்க்க தோன்றுகிறது.

குடும்பத்தோடு எங்காவது வேனில் சுற்றுலா சென்றாலோ,கல்யாண வீடுகளிலிலோ,சில இடங்களில் கடைகளிலிலோ தினமும் இவர்பாடல்
ஒலிக்காமல் இருந்ததில்லை
ஏன் இன்னமும் ஊரில் இருந்தால் நண்பர்கள் எல்லாம் பெருநாள் தொழுகை முடிந்து ஷாபி வீட்டில்தான் கூடுவோம்,அங்கு டீ பரிபமாற்றங்களுடன் ஹனிபாவின் பாடல்களும் இனிக்கும்.
“அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்,நீ இல்லாமலே எதுவும் இல்லை எங்கள் இறைவா” மற்றும் “நான் உருளவேண்டும் புரள வேண்டும் போலிருக்குது அன்னல் நபி பொன் முகத்தை” பாடல் தவறாமல் கேட்பதுண்டு…

#இறைவனிடம் _கையேந்துங்கள்” பாடல் மதங்களை கடந்து எல்லோரும் விரும்பும் ஒரு பாடலாக இருக்கிறது என்பது மாறாத உண்மை, இன்னும் சொல்லப்போனால் பலருக்கு அவரின் பாடல் மூலம் தான் வரலாறுகளை அறிந்திருக்கிறார்கள்.

கர்பலாவின் வரலாற்றுக்கும்,ஹஜ்ஜின் தியாகத்திற்கும்,நோன்பின் மகத்துவத்திற்கும்,இறைவனை போற்றுவதற்கும்,பெருமானாரை புகழ்வதற்கும் என அனைத்திற்கும் பாடல் இருக்கிறது,சில தர்ஹாகளின் புகழ்பாடும் விரும்பதகாத பாடல்களை
தவிர்த்துப்பார்த்தால் நாகூர் ஹனிபா எப்போதும் இசை முரசுதான் என்ற மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

– அபூபக்கர் சித்திக் 

Add Comment