கப்பலுக்கு போன மச்சான்

photo

#கண்ணுகுள்ளே_வாழ்பவளே
#கல்புக்குள்ளே_ஆள்பவளே…

சவுதி அரேபியாவில் இருந்த போதுதான்
அந்த பாடல்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது,அங்கு வேலை செய்துகொண்டிருந்த கேரள நண்பர்கள்தான் அந்த பாடல்களை அறிமுகம் செய்துவைத்தனர்,
#மாப்பிள்ளா பாடல்கள் என்று பொதுவாக அழைப்பார்கள்,கேரள இசுலாம் சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடலாகவே இருக்கிறது
இந்த மாப்பிள்ளா பாடல்கள்.

கேரள இசுலாமியர்களின் பிறப்பு,காதல்,திருமணம்,நட்பு,பிரிவு என அனைத்தையுமே அவர்கள் பாடல் மூலம்
சொல்லியிருக்கிறார்கள்.அதிலும் மிகவும் பிரசித்தி பெற்ற கல்ஃபானு பாத்திமா பாடல்களும்,கண்ணனூர் ஷெரீப் மற்றும் பழைய பாடகரான பீர் முகம்மது பாடல்களும் திருமண நிகழ்ச்சியில் மைலாஞ்சி பாடல்களும்,மணப்பெண் அலங்கரிப்பில் ஒப்பனை பாடல்களும்,
Hansul Jamal,Badarul muneer போன்ற காதல் ஜோடி பாடல்களும் மிகவும் பிரபலமானவை…

ஆனால் தமிழில் இசுலாமிய சமூகம் சார்ந்த கலாச்சாரங்களை சொல்லிய பாடல் ஏதேனும் இருக்கிறதா என தேடிப்பார்த்தால்,மிஞ்சுவது ஒரு பாடல்தான் 1985 – 1990 களில் பெரும்பாலும் எல்லா தமிழ் முஸ்லீம்கள்
வீட்டிலும் ஒலித்த பாடல் #கப்பலுக்கு_போன_மச்சான் பாடல் மட்டுமே..

எங்கள் ஊர் இரண்டு மிகப்பெரிய நெருக்கடியை அன்று சந்தித்தது,ஒன்று
1950ம் காலகட்டதில் பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக
பலர் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும்
இடம்பெயர்ந்தார்கள்,அப்படி போனவர்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார்கள்.மற்றொன்று 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார மேம்பாட்டிற்க்காக வளைகுடா நாட்டிற்கு சென்றது.

மனைவிகளையும்,பிள்ளைகளையும்,
குடும்பங்ளையும்,உறவுகளையும் பிரிந்து
வளைகூடா நாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாரானார்கள்,இப்போது போல் வருடத்திற்கு ஒரு முறை எல்லாம் வந்து போய் கொண்டிருக்க முடியாது,
விசாவுக்கான கடன்,குடும்ப பொறுப்புகள் என அதிகம் இருந்ததால் நான்கு அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் ஊருக்கு வெக்கேஷன்
வரமுடியும்.

தொலைபேசிகள் அதிகம் பழக்கம் இல்லாத நேரங்களில் கடிதத்தில்தான்
அனைத்து தொடர்புகளும்..
சுகம்,சோகம்,ஆசை ஏக்கம் என அனைத்தும் கடித்ததில்தான்,
அப்படிபட்ட சூழ்நிலையில் கணவனும்
மனைவியும் பிரிந்து வாழும் அந்த உணர்வின் வலியை சொன்ன பாடல்தான்…..
“கப்பலுக்கு போன மச்சான்
கண்ணுநிறைய ஆசை வச்சான்,
எப்பதான் வருவீங்கன்னு
எதிர்பார்க்கிறேன்
இரவும்  பகலும் தொழுது தொழுது
கேட்கிறேன்….என்று விரகதாப உணர்வுகளை #நாகூர்_சலீம் அவர்களின் வலியான மற்றும் வலிமையான எழுத்தில்
காயல் ஷேக் அவர்கள் பாடிய பாடல்.

சில நினைவுகள் இன்னும் இதயத்தில்
நீங்காமல் இருந்து
கொண்டேயிருக்கிறது,இப்படித்தான் உறவினர் ஒருவரை வழியனுப்ப அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்,அவருக்கு
காலை எட்டு மணிக்கு பிளைட்,ஐந்து மணிக்கு ஏர்போர்ட்ல் இருக்க வேண்டும்
ஊரிலிருந்து நடு இரவு பதினொரு மணிக்குமேல் அவர் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்,ஒரு பத்தரை மணிக்கு
நாங்கள் அவர் வீட்டிற்கு சென்றிருந்தோம்,அவர் பிள்ளைகள் தூங்கிகொண்டிருக்கின்றன,கலங்கிய
கண்களோடு அவரின் மனைவி அவரிடம்
பேசிக்கொண்டிருக்கிறார்,அந்த காட்சி
எங்கள் மனதை பிசைந்தது,
அவ்வளவுதான் இன்னும் ஒரு மணிநேரம்
அதற்கு பிறகு அவர் மனைவியையும் பிள்ளைகளையும் இரண்டு வருடம் ஆகலாம்,இது என்ன வாழ்க்கை என சலித்துக்கொள்ளும்போதெல்லாம்
யதார்த்தத்தை மீறி வாழமுடியாது என்று
மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த பிரிவின் உணர்வுகளை எழுத்துக்குள் அடக்கிய ஒரு அழகிய பாடல்தான் இது..

மனைவி:துபாயுக்கு பயணம் போயி வருசம் ஆறாச்சு
துள்ளி வரும் காவிரி போல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நான் இங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்துடுங்க தக்க துணை நானாச்சு!!

கணவன்:பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி!
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமே பாரிலே யாருக்கடி?

இதைப்போல் இன்னும் நிறைய பாடல்கள் வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு,எதற்காக என்று கூட ஒரு கேள்வி எழலாம்,பிற சமூகத்தினர் நம் வாழ்க்கைமுறையையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வதற்கு ஒரு எளிமையான எளிதில் அனைவரையும் சென்றடையக்கூடிய விரசமில்லாத மாப்பிள்ளா பாடல்கள் போல் இசையுடன் கூடிய பாடல் தேவைப்படத்தான் செய்கிறது,அது ஒரு அடையாளமாகவும் இருக்கும்.

அபூபக்கர் சித்திக்

Add Comment