பாதகம் செய்வோரைக் கண்டால்…!

பாதகம் செய்வோரைக் கண்டால்…!

மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

பிரச்னை…! பிரச்னை..! எங்கும் பிரச்னை.. எப்போதும் பிரச்னை! ஆனால் எல்லாப் பிரச்னைகளையும் நாம் ஒரே மாதிரிப் பார்க்கிறோமா..? நம் கண் முன்னே ஒரு அநீதம் நிகழ்கின்றதென்றால் நாம் அதன் விபரீதத்தைப் பார்ப்பதில்லை மாறாக அது நிகழும் இடத்தைப் பார்க்கிறோம். நமது வீட்டில் அநீதம் நடந்தால் பொங்கி எழுகிறோம். நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் நடந்தால் போராடுகின்றோம். நம் அண்டை வீட்டில் நடந்தால் கூட்டத்தோடு குரல் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுகிறோம். அண்டை மாநிலத்தில் நடந்தால் அனுதாபப் படுகிறோம். நமது நாட்டில் நடந்தால் விமர்சிக்கின்றோம். நமது வீட்டில், நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய அதே கொடுமைகள் வேறி எங்காவது நிகழும் போது அதைத் தகவல்களாக உள்வாங்கிக் கொண்டு சலனமின்றி இருந்து விடுகிறோம்.

நம்மைச் சார்ந்தவர் மீதான நமது அக்கறை, மனிதநேயம் அவ்வளவுதானா..? நமது நியாய அநியாயங்களை நமது ஈவிரக்கங்களை நமது வீட்டிற்குள் நமது
ஊருக்குள் சுருக்கி விட்டு எவ்வாறு நம்மால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது. தீமைகளும் அநீதிகளும் புயலாய் வீசும் போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? துப்பாக்கி முனைகளில் உரிமைகளும் குண்டுக் கனைகளில் உடமைகளையும் இழந்து கொண்டிருக்கும் மக்கள் மீது வகுப்புவாத இனவெறித் தாக்குதலில் சிக்குண்டு மடிந்து போகும் குழந்தைகள் மீது கோரமான முறையில் கற்பழித்துக் கொல்லப்படும் அப்பாவிப் பெண்கள் மீதும் நாம் என்றாவது குறைந்த பட்சம் பரிதாபப் பட்டுள்ளோமா.?

நமது மாநிலத்தில் இல்லையே ,நமது நாட்டில் இல்லையே என நமக்கு நாமே சமாதானம் கூறிக்கொள்கிறோம். அது இலங்கையில் ஈழத் தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போதும், பலஸ்தீனத்தில் காஸா பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சொந்த நாட்டிலே இஸ்ரேல் இராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்படுவது குறித்தும், அங்குள்ள மக்கள் உணவு உடை இருப்பிடம் நீர் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்குக் கூட அக் கொடுமைக்காரர்களை எதிர்பார்த்த வண்ணம் இருக்கும் வேளையில் இன்னும் உலகில் எங்கெல்லாம் அநீதிகளும் ,தீமைகளும் தலைவிரித்தாடுகின்றனவோ அங்கெல்லாம் ஏன் நமது குரல்கள் ஒலிப்பதில்லை..? நமது பேனாக்கள் அது குறித்து என்றேனும் எழுதியுள்ளனவா..?

நம் கண்முன் நிகழும் அநியாயங்களை நாம் தடுக்க வேண்டும். நாம் வெறுமனே வேடிக்கை பார்த்தோம் என்றால் நாம் அந்த அநீதியைக் கண்டு கோபப்படவில்லை எனில் நாளை நமக்கும் அது போல நிகழும் போது நமது நிலைமையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் சிறுமை கண்டு எழவில்லை எனில் அநீதி கண்டு ஆத்திரப்பட வில்லையெனில், குற்றம் கண்டு அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் எடுபடவில்லை எனில் சமூகத் தீமைகள் புரையோடிப்போன ஒரு அழுக்குச் சமூகத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு விடும்.

பாவங்களைத் தடுப்பதென்றல் எவ்வாறு தடுப்பது? அதை நாம் தடுப்பது சரியாகுமா? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது நபி மொழி. அண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் யாரேனும் வெறுக்கத்தக்க விஷயத்தைக் கண்டால் அவர் அதை கையால் தடுக்கட்டும். அது அவரால் இயலவில்லையெனில் அவர் நாவால் தடுக்கட்டும். அதுவும் அவருக்கு இயவில்லையெனில் அதை (அந்தத் தீங்கை) அவர் மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே ஈமானில்(இறை நம்பிக்கையில்) பலவீனமான நிலை”

கையால் தடுக்கும் அதிகாரம் படைத்தவர் அநீதிகளைக் கையால் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை வாயால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தீமைகள் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடும் போது மனித உரிமைகள் மீறப்பட்டு மனிதம் வெட்கித் தலைகுனியும் வேளையிலும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நாம் அந்தத் Viagra online தீமையை வெறுத்து ஒதுக்க வேண்டும். நம்மால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும். கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். இனிமேலும் அநீத விதை ஊன்றப் படாமல் இருக்க நாம் பாதுகாக்க வேண்டும்.

மனிதர்களில் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்
.மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர் (திருக்குர்ஆன் 3:104)

கருணை மாதமான இந்த ரமளானில் நாம் பார்த்துக்கொண்டிருக்க, நாம் கேட்டுக்கொண்டிருக்க அனுதினமும் நிகழும் அநீதிகளுக்கெதிரான நமது குரல்களை பதிவு செய்ய வேண்டிய நேரமாக இதை நாம் கருத வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும்,அநியாயக்காரர்கள் அகற்றப்படவும் நாம் இறைவனிடத்தில் இருகரமேந்தி பிரார்திக்க வேண்டும். நமது உள்ளங்கள் பிராத்திக்கட்டும் நம் கண்கள் பனிக்கட்டும், அநியாயங்களும்,அட்டூழியங்களும் நம் முன்னே நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது இனிமேலும் நாம் அதை வேடிக்கை பார்க்க வேண்டாம். மனித குலம் ஒரே இனம். நாமெல்லாம் ஒரே சமுதாய மக்கள் என்பதை என்றும் மறக்க வேண்டாம். அநீதம் கண்டெழுவோம். மனிதம் காப்போம்.

Add Comment