சொல்லிய வண்ணம் செயல்

சொல்லிய வண்ணம் செயல்

-மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

பின்பற்றப் படாத வார்த்தைகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. செயலில் இல்லாத சொற்களை எளிதில் உபதேசித்து விடுகிறோம். சொல்வதற்கு வார்த்தைகள் ஏராளம் உள்ளன. செய்வதற்கு நாம் இயலாதவர்களாக ஆகி விடுகிறோம். நாம் வாழுகின்ற வாழ்க்கைக்கும் வாயிலிருந்து வரும்
வார்த்தைக்கும் ஏக வித்தியாசமாக வாழ்கின்றோம். அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளை மீறும் போது விமர்சிக்கும் நாம் கொடுத்த வாக்கை நாம்
என்றாவது நிறைவேற்றியுள்ளோமா..?என்பது குறித்து சிந்திப்பதில்லை.

நாம் buy Bactrim online பேசும் போதும், உரையாற்றும் போதும், உபதேசிக்கும் போதும் நமது செயல்பாடுகளை ஒட்டி நாம் சொல்லாடுகின்றோமா..? இல்லை நமது
சொற்களுக்கேற்ப செயல்படுத்தியுள்ளோமா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். .இல்லையெனில் நாம் வெற்றுச் சொல்வாதிகளாகி விடுவோம்.

மதுவின் தீங்கு குறித்து பகலெல்லாம் உரையாற்றி விட்டு இரவில் மது அருந்துபவரை, பெண்ணுரிமை குறித்து முழங்கி விட்டு தனது மனைவியை அடிப்பவரை, பொறுமை குறித்து நாவாடி விட்டு தொட்டதுக்கெல்லாம் கோபம் கொள்பவரைக் குறித்து நாம் என்ன நினைப்போமோ அது போல நாம் மாற்றமாக நடக்கும்போது நம்மையும் பிறர் எண்ணுவார்கள்.

யாரும் நம்மை பார்க்கவில்லை அவருக்கென்ன நம்மைப் பற்றித் தெரியவாபோகின்றது..?,சும்மா உபதேசிச்சா போகுது என்று போலியான வாழ்கையில் நடித்துக் கொண்டிருக்கிறோம். நமது இரகசியங்கள், நமது சுயரூபங்கள் கண்காணிக்கப்படும்போது அவ்வாறு நாம் பேசுவோமா? வெற்று வார்த்தைகளை உபயோகிப்போமா? நிச்சயம் மாட்டோம்.அவ்வாறு உபதேசிக்க நாம் தைரியமற்று இருப்போம். ஆனால் நம்மை எந்நேரமும் இறைவன் கண்காணித்துக் கொண்டிரும்போதும் அந்த உணர்வு சிறிதளவேனும் இல்லாமல் நாம் வெறுமனே உபதேசிக்கின்றோம். செயலில் இல்லாததை வாய் கிழியப் பேசுகிறோம்.

முதன்முறையாக நாம் தவறிழைக்கும் போது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறோம். மீண்டும் மீண்டும் நாம் அதனைத் தொடர்ந்து செய்யும் போது
அத்தகைய அவலங்கள் நம் மனதில் நங்கூரம் பாய்ச்சி விடுகின்றன. இத்தைகைய போலியான பொய் வாழ்க்கையிலிருந்து உண்மை வார்த்தைகளை உபயோகிக்க விரும்புவர்கள், வார்த்தைக்கேற்ப வாழ்க்கை அமைத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் செய்வதைச் சொல்லி, சொன்னதைச் செய்து
நமக்கெல்லாம் முன் மாதிரியாக,வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்)அவர்களது வாழ்கையை வாசித்துப் பாருங்கள்.

அன்று வாழ்ந்த மக்களிடையே பொய்மை புரையோடிப்போன காலத்திலும் வாழ்நாளில் ஒருபோதும் நபியவர்கள் பொய்யுரைத்ததில்லை, நாணயம் மருந்துக்கும் இல்லாத காலத்தில் வாக்குறுதி காப்பவர்களாக இருந்தார்கள். அதன் காரணத்தினால்தான் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஏகத்துவ பிரசாரத்தை மேற்கொண்ட பொழுது இஸ்லாமியக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள்கூட முஹம்மதே…! நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள் என்று சொல்வதற்கு வாய் கூசி நின்றார்கள் மாறாக நபி(ஸல்) அவர்களை அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்றே அழைத்தனர்.

ஆம்.! சொல்லுக்கேற்ப செயலமைத்த ஒளிவுமறைவற்ற கள்ளங்கபடமில்லாத தூய்மையான வாழ்க்கை பெருமானாருடையது. நபியவர்கள் சொன்னதைச்செய்வார்கள். செய்வதைச் சொல்வார்கள். அவர்களது வாழ்க்கை நமக்கு வழிகாட்டி நெறிப்படுத்தும். எந்த நற்செயலைச் செய்யுமாறு மக்களை ஏவுவார்களோ அதற்கு நபி(ஸல்)அவர்களே முன்னுதாரணமாக இருப்பார்கள். நபி(ஸல்)அவர்கள் அரியணையில் இருந்து கொண்டு வெறும் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கவில்லை. மக்களோடு மக்களாகக் கலந்து எளிய மனிதர்களுடனேயே வாழ்ந்தார்கள்.

ஊருக்கு உபதேசம் வழங்கிவிட்டு தம்மை மறந்துவிடுகின்றவகளைக் குறித்து “ நீங்கள் சொல்லாததை ஏன் கூறுகின்றீர்கள்” என்று இறைவன் கண்டிக்கின்றான். உபதேசம் வழங்குவது எளிதோ எளிது. ஆனால் அதனை நாம் கடைப்பிடிப்பதுதான் சிரமம். வள்ளுவன் கூற்றுபோல
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

வெகு எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் சொல்லைச் செயலாக்குவது யார்? அதற்கு விடைதருகிறது ரமளான் நோன்பு. இது சொற்பயிற்சி மாதமல்ல. செயல் பயிற்சி மாதம். நமது உபதேசங்களை நாம் நம்மில் பரிசோதிக்கும் காலம். பசியைப்பற்றி பேசியவர்களெல்லாம் பசியைப் படிக்கும் மாதம் இது. கட்டுப்பாட்டையும் அறத் தூய்மையும் போதித்தவர்கள் கட்டுப்பட்டுக்கிடக்க இது நேரம். இறைத் தொடர்பை வளர்த்துக் கொள்ள ஓர் இனிய தருணம் இது.

இந்த நாளிலே இறைவனுக்காக நோன்பிருந்த நிலையில் நாம் நல்லதைச் செய்வோம். சொல்வதைச் செய்வோம் ,செய்வதைச் சொல்வோம் என மனமார
உறுதியேற்று நமது சொற்களை நம்பிக்கைக்கு உரியதாக்குவோம். நாம் வாழுகின்ற வாழ்க்கை கொஞ்சம் உண்மையானதாக இருக்கட்டும்.

Add Comment