298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

கிய்வ்: 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் – ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது  ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து வியாழக்கிழமையன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மதியம் 2.15 மணி அளவில், தற்போது உள்நாட்டுப் போர் நடந்து வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதி அருகே விமானம் சென்று கொண்டிருந்துபோது,அதன் மீது ஏவுகணை ஒன்று  தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மலேசிய ஏர்லைன்ஸ் தனது டுவிட்டர் தளத்தில், உக்ரைன் வான்வெளியில் பறந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

விமானத்தில் 283 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 15 ஊழியர்களும் பயணம் செய்து கொண்டிருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்ய எல்லையருகே விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்கும் விமானம் நுழையவேண்டிய தருணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது

விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சிதறி கிடப்பதாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மலேசிய விசாரணை குழு உக்ரைன் விரைந்தது

இந்நிலையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து  மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுபற்றி உடனடி விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மலேசியா அரசு உக்ரைனுக்கு சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. மலேசியா பேரழிவு உதவி மற்றும் மீட்பு குழு, மருத்துவ குழு அந்த விமானத்தில் சென்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோவிடம் பேசியுள்ளேன்.

முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உக்ரைன் அதிபர் உறுதி அளித்துள்ளார். மலேசிய விசாரணை குழு உக்ரைன் விரைந்துள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களிடம் உக்ரைன் அரசு பேச்சுவார்த்தை Ampicillin No Prescription நடத்தும் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ உறுதி அளித்துள்ளார். மேலும், மீட்பு பணிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுக்குழு இன்று அவசர கூட்டம்

இதனிடையே உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.

சிதறி கிடக்கும் உடல்களும் விமான பாகங்களும்

சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்த நிலையில்,  கிராபோவோ என்ற கிராமத்தின் அருகே விமானம் நொறுங்கி கிடக்கும் இடத்தில் குறைந்தது 100 சடலங்களாவது சிதறிக்கிடப்பதை தான் பார்த்ததாக மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். மேலும் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு சிதறி கிடப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பகல் 12 மணி வரை,  121 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம்,  ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் சர்வதேச அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தங்களுக்கும் விமானம் விழுந்து நொறுங்கியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்,விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும்  உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் 33 ஆயிரம் உயரத்தில் பறக்கும் விமானத்தை வீழ்த்துவது என்பது சாதாரண ஏவுகணைகளால் இயலாது என்ற கருத்தையும் நிபுணர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

ராடார் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளோ, விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளோதான் இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்தும், எழுந்திருக்கும் நெருக்கடி குறித்தும் விவாதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர்கள் இரங்கல்

உக்ரைனில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி 298 பேர் பலியான சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இதுவொரு கோர விபத்து என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக உக்ரைன் பிரதமர் அறிவித்துள்ளார். மலேசிய விமானம் உக்ரைன் மண்ணில் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பதால், தாக்குதலுக்கு அந்நாட்டு அரசே பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் அமைதி நிலவியிருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

மறைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூன், விமான விபத்து குறித்து தெளிவான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், குற்றவாளிகள் மீது உக்ரைன் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தியுள்ளார். இந்த கோர சம்பவம் குறித்து விசாரிக்க மலேசிய அதிகாரிகள் குழு உக்ரைன் விரைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நன்றி:விகடன்

Add Comment