மதுவை ஒழிக்க மகத்தான வழி

மதுவை ஒழிக்க
மகத்தான வழி

மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் அது குறித்து விழிப்புணர்வு செய்தாலும் நாளுக்கு நாள் மதுவின் கோரத்தாண்டவம் தமிழகத்திலே அதிகரித்துக் கொண்டே போகிறது. பால்முகம் மாறாத பாலகனும் கூட மது அருந்துகின்றான். பெண்களும் அருந்துகின்றார்கள். மதுவற்ற
தேசத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாதவாறு மதியழிக்கும் மது இன்று எங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது. மதுவால் தெருவிற்கு வந்த
குடும்பங்கள் பல அறுந்த உறவுகள் பல முறிந்த திருமணங்கள் பல! மது தீமைகளின் தாயாகத் திகழ்கிறது.

தனது சிந்தையை மதுவிடத்தில் ஒப்படைத்தவர்கள் அதனை விட்டு மீளவே முடியாதவாறு அது குடிப்பவர்களை ஆளுமை செய்து விடுகிறது. மதுவைத்
தடுக்க வேண்டிய அரசாங்கமோ குடி கொடுக்கும் குடியரசாகத் திகழ்கிறது. பல உயிர்களைக் குடித்த மதுவை அறவே நிறுத்தமுடியாது எனப் பலர்
கூக்குரலிடும் இந்த நேரத்தில் மது அழிந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

சமூகத் தீமைகளுக்கெதிராக அழுத்தமான குரலைப் பதிவுப் செய்ய இஸ்லாம் ஒருபோதும் தவறியதில்லை. மதுவின்றி வாழ்கையில் எதுவுமே இல்லை என
வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்கள் மது அருந்துதல் என்பது ஒரு தீய பழக்கம் என்ற சிந்தனையே இல்லாது தண்ணீர் குடிப்பது போல் மது அருந்தும் குடிகார மக்களாக வாழ்ந்து வந்தனர்.

திசையற்று பயணித்துக்கொண்டிருந்த அந்த மக்களின் வாழ்வில் நேர்வழி காட்டும் கலங்கரை விளக்கமாய் வந்துதித்த இஸ்லாமிய மார்க்கம் இலட்சிய வாதிகளாக, ஒழுக்க சீலர்களாக, உயரிய பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்களாக அவர்களை மாற்றியது.

ஆரம்பத்தில் மக்களிடையே இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்ட பின்னரும் இந்த போதையளிக்கும் மது எதற்கு என்ற ரீதியில் நபியவர்களிடத்தில் மதுவைப் பற்றி பேசினார்கள். உடனே அல்லாஹ்வோ நபியவர்களோ உடனடியாக மது தடுக்கப்பட்டு விட்டது அது உங்களுக்கு ஆகுமானதல்ல என்று உத்தரவு விதிக்க
வில்லை. ஏனெனில் அது மனித இயல்பிற்கு சாத்தியமற்றது. விரும்பி அருந்திக்கொண்டிருந்த மதுவை உடனடியாக எவ்வாறு நிறுத்த முடியும்? எனவேதாம் இஸ்லாம் எடுத்தோம்,கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமான முறைகளைக் கையாண்டது.

இறைவன் நபி(ஸல்)அவர்களுக்கு திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தை இறக்குகின்றான்.,
. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் நன்மையை விட தீமை அதிகமுள்ளது தவிர்ந்திருத்தல் நல்லது என முதலாவதாக வசனம் இறங்கியது. சிலர் தவிர்ந்திருநதனர. ,சிலர் மது
அருந்தினார்கள். சிறிது காலம் சென்றது மக்கள் மது குடித்தவாறே தொழுகையில் ஈடுபட்டார்கள். தொழுகையின்போது குர்ஆனின் வசனங்களை ஓத வேண்டும். தொழுகையில் போதை காரணமாகச் சிலர் தவறாக ஓதினார்கள். இப்போது இறைவன் சற்று கட்டுபடுத்தும் விதமாக “நீங்கள் மது அருந்திய நிலையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;” (திருக்குர்ஆன் 4:43)என்ற வசனத்தை இறக்கினான்.

இவ்வாறு சிறிது காலம் சென்றது. இப்போது மக்கள் தொழுகையின் போது மட்டும் மது அருந்தாமல் இருந்தனர். இருந்தாலும் நேர்வழி பெற்ற நபித் தோழர்கள் மதுவைத் தடை செய்வது பற்றித் தெளிவான வசனம் இறைவனிடமிருந்து வர வேண்டும் எனப் பிரார்த்தித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின்னர் மதுவிலக்கு குறித்து முழுமையான வசனம் இறக்கியது.

.‘நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்அருவருக்கத்தக்கச்
செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’ (திருக்குர்ஆன் 5:90)

இவ்வசனம் இறக்கப்பட்டதும் நபித்தோழர்கள் மகிழ்ந்தார்கள். எங்கள் விஷயத்தில் எங்கள் இறைவன் தெளிவான தீர்ப்பளித்து விட்டான் என இறைவனைப் புகழ்ந்தார்கள். இந்த வசனம் இறங்கியதுபோது வினாடிகூட தாமதிக்கவில்லை. அருந்திக் கொண்டிருந்தவர்கள் மதுவைத் Buy Doxycycline Online No Prescription துப்பினார்கள். குடித்தவர்கள் வாந்தி எடுத்தார்கள். மதீனா வீதிகளிலே அவர்கள் வீடுகளில் வைத்திருந்த மது பீப்பாய்களைக் கொட்டினார்கள்.

மதுவிலக்கு அங்கு பூரணமாக அமல்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு அது ஒரு பாரமாகவோ, சுமையாகவோ, பின் பற்ற முடியாததாகவோ இருக்கவில்லை அவர்கள் இறைத்தீர்ப்பை பொருந்திக் கொண்டார்கள். மதுவை முழுவதும் விட்டொழித்த சான்றோர்களாய்த் திகழ்ந்தார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று..? இறைவனைக் குறித்த அச்சத்தை முதலில் விதைத்தார்கள். பின்னர் படிப்படியாக மது தடை செய்யப்பட்டது. முதலில் மதுவின் தீங்கைப் பற்றி எடுத்துரைத்து, பின்னர் இறைவனை ஐவேளைத் தொழும் போது தடைவிதித்து, பின்னர் மதுவை முற்றிலுமாக தடை செய்த போது அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

பழக்கபடுத்துதல் மூலமாகவும்,அதன் பின்விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமாகவும் எத்தகைய தீய குணத்தையும் விட்டொழிக்க முடியும் என்பதனை இஸ்லாம் நிரூபித்துள்ளது. இந்த ரமளான் மாதமும் நமக்கு அத்தைகைய ஒழுக்கப்பயிற்சியைத்தான் தருகிறது. இந்த மாதத்தில் மதுவை விட்டொழிக்க முடியும், சிகரெட் மற்றும் புகையிலைப் பழக்கத்தை விட முடியும். இது ஒழுக்கப் பயிற்சிக்கான மாதம். இஸ்லாம் காட்டும் நல்லொழுக்கப்
பயிற்சியைக் கடைப்பிடிப்பதன் மூலமாக நம்மிடையே சமூகத் தீமையாகத் தலைவிரித்தாடும் மதுவை ஒழிக்கும் வழிமுறை நமக்குக் கிடைகிறது.

எனவே இந்தப் பயிற்சி மாதத்தில் நம்மிலுள்ள தீய குணங்கள், கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் நமது தேசத்தையே நாசமாக்கும் மதுவை ஒழிக்க பாடுபடுவோம்.

Add Comment