பாழ் நரகத்தில் நாம் வீழலாமா?

பாழ் நரகத்தில் நாம் வீழலாமா?

மெளலவி வி.எஸ்.முஹம்மது முஸம்மில் அல்புகாரி

இறைவன் மனிதனைப் படைத்தான். வாழ்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்தான். வழிகாட்டும் நெறிமுறை வேதத்தையும், வாழ்ந்து காட்ட
தூதர்களையும் அருளினான். மனிதனைப் படைத்த இறைவனே மனிதனை மரணிக்கச் செய்கிறான். இறந்ததும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி கேள்வி
கணக்குகளைக் கேட்கிறான். அவரவரின் செயல்களுக்கேற்ப சுவனத்தை நற்கூலியாகவும், நரகத்தைத் தண்டனையாகவும் வழங்குகின்றான்.

நல்லறங்கள் செய்தால் சுவனப்பேறு கிடைப்பது போல இவ்வுலகில் வரம்பு மீறி வாழ்ந்த பாவிகளுக்கு நரகம் உண்டு. வேதனைகளே நரகத்தின் அடையாளம். நரகத்தில் எங்கும் இருள் மண்டிக்கிடக்கும். பார்த்தாலே பயங்கரமூட்டும் நெருப்பு ஜுவாலைகளால் சூழப்பட்டது. அங்கு நுழைபவர்களுக்கு இறைவனின் வேதனை இறங்கிக்கொண்டே இருக்கும். அங்குள்ள துர்பாக்கியசாலிகள் இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள். நரகவாசிகள் இழிவு படுத்தப்படுவர்.

அவர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் கூடத் தரப்படமாட்டாது. மாறாக அழுகிய உடம்பிலிருந்து வரும் துர்நாற்றமிக்க சீழ்தான் தரப்படும்.கொடிய விஷ சந்துக்கள் துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். அவரவர் செயல்களுக்கேற்ப இங்கு படித்தரமான துன்புறுத்தும் வேதனைகள் உண்டு.

இன்னும் நரகத்தைப் பற்றி திருக்குர்ஆன் விரிவாகப் பேசுகிறது. அங்குள்ள வேதனைகளைக் கூறி மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. இறைவனின் அருளும், இரக்க குணமும் எவ்வளவு விசாலமனதோ அதுபோன்றே அவனது கோபமும், தண்டைனைகளும் அளவிடமுடியாதது. நமது வாழ்க்கை இவ்வுலகில் முடிவடைந்ததும் நம்மை மறுமையில் இறைவன் மீண்டும் உயிர் தந்து எழுப்புகிறான். நம்மை சாதாரண விந்துத் துளியிலிருந்து படைத்தவனுக்கு நம்மை இறந்த பின்பு மீண்டும் உயிர் தருவது முடியாத காரியமா என்ன ..? அதற்குப் பின்னர் நம்மை கேள்வி கணக்கு கேட்பான். பின்னர் அவனே நாம் சொர்க்கவாதிகளா அல்லது நரகவாதிகளா என்பதை நமது செயல்களை துல்லியமாக விசாரித்துத் தீர்மானிக்கின்றான். no prescription online pharmacy அதிலும் நரகவாசிகளில் அவன் நாடியவர்களை அவர்களது தண்டனைக் காலம் முடிவுற்ற பின்னர் நரகிலிருந்து விடுவித்து சுவனத்தில் நுழைவிக்கின்றான்.

இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள், இறைவனுக்கு இணை கற்பிப்பவர்கள், இறைக் கட்டைளைகளை மீறி வாழ்ந்த பாவிகள் ஆகியோர நரகில் நுழைவிக்கப் படுவார்கள். நரகத்தின் கொடுமைகளையும், அதில் நுழையத்தகுதியுள்ளவர்களையும் இஸ்லாம் விவரிக்கக் காரணம் அப்பொழுதாவது நாம் திருந்தி வாழ வேண்டுமே என்பதற்காகத்தான்.

நரகிலிருந்து பாதுகாவல் தேடிக் கொள்வதற்கான வழிமுறைகளை இஸ்லாம் எடுத்துச் சொல்கிறது. அல்லாஹ்வை ஓரிறைவனாக ஏற்று அவனது கட்டளைகளுக்கும் அவனது தூதர் முஹம்மது(ஸல்)அவர்களின் கட்டளைகளுக்கும் கீழ்படிந்து, நல்லறங்களோடு வாழ்ந்து மரணிப்பவர்கள் நரகிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்.

நரக வாயில்கள் மூடப்பட்டு, சுவன வாயில்கள் திறக்கப்பட்ட இந்த புனித ரமளானின் கடைசி பத்து நாள்கள் நரக நெருப்பிலிருந்து பாதுகாவல் தேடும்
நாள்களாக இஸ்லாம் வகுத்துள்ளது. இத்தைகைய நாள்களில் “யா இறைவா..! எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து சுவர்க்கத்தில் நுழைவிப்பாயாக”
என்று பிராத்திக்குமாறு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

இறைவன் தன் திருமறையில் ”உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்”(திருக்குர்ஆன் 66:6) என
எச்சரிக்கின்றான் .

இறைவனும் அவனது தூதரும் யாரையும் நரகில் நுழைவித்து வதைப்பதை ஒருபோதும் விரும்ப வில்லை. இறைவனுடைய அருள் அவனது கோபத்தை
முந்தி விட்டதாக இருக்கின்றது. அவன் கருணையாளன், அன்பாளன், கிருபையுடைபவன்,அவன் தன்னை நிராகரிபவர்களைத் தவிர யாரையும் மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். இறைவன் பாவம் புரிபவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவும், பிறருக்கு அநீதம் இழைக்கப் படாமல் எல்லோரும் வாழ்வதற்காகவும்தான், பாவம் செய்தவர்களை நரகில் நுழைவிக்கின்றான். இல்லையேல் நம்மை கஷ்டப்படுத்துவதை இறைவன் ஏன் விரும்புகிறான்

இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள். “நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப் போகிறான்? அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், அவர்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான் “(திருக்குர்ஆன் 4:147).

இறைவனின் கருணையை நபி(ஸல்)அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்தும். உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள் (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்கு(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. (எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள்.

தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்துத் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், “மாட்டாள்; எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம்.

அப்போது இறைத்தூதர்(ஸல்)அவர்கள் “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று கூறினார்கள்.

தாயினும் பன் மடங்கு அளப்பரிய கருணையாளன் நம்மை தீயிலிடப் பிரியப்படுவானா என்ன? நபி (ஸல்) அவர்களும் தனது சமுதாயத்தில் யாரும் நரகில் நுழையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். நாம் பிறப்பதற்கு முன்னரே நாம் நரகில் நுழையக்கூடாது என்பதற்காக அழுதழுது பிரார்த்தித்தார்கள் அந்த கருணை நபியவர்கள்.

”நீங்கள் உலர்ந்த பேரீச்சம் பழத்தின் துண்டுகளைத் தர்மம் செய்தாவது உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்”என அக்கறை மிகுதியுடன் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நரகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை இஸ்லாம் விரிவாகக் கூறியுள்ளது. நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நம்மை
தயார்படுத்தும் ரமளானின் இந்த பத்து நாள்களை பயனுள்ளதாய் பயன்படுத்தி அந்த ஓரிறைவனை மட்டுமே வணங்கி நல்லறம் செய்து நம்மையும்,
நம்மைச் சார்ந்தவர்களையும் கொடிய நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.

Add Comment