மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது…

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது
 
 நந்தினி நேர்காணல்
குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணாவிரதம் இருந்தார். பழச்சாறு மட்டுமே மிஞ்சியது.
 
இதெல்லாம் சரிப்பட்டு வராது. தொடர் போராட்டங்களினால் அரசின் செவிட்டுச் செவியில் சங்கு ஊதிப் பார்ப்பது எனத் தம் தந்தையுடன் நீண்ட நெடிய போராட்டத்திற்காய்க் கிளம்பிவிட்டார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. கைதுகளையும் முட்டுக்கட்டைகளையும் கடந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார். நீறு பூத்த நெருப்பாக இப்போராட்டம் வெடித்து அதன் அக்னிச் சூட்டில் மது அரக்கன் கருகிவிடமாட்டானா? என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் நந்தினியைச் சந்திக்க மதுரைக்கேகினோம். தந்தை ஆனந்தனுடன் சமரசத்திற்கான நேர்காணலை நேர்த்தியுடன் தெளிவுடன் தொடர்கிறார் நந்தினி.
நந்தினிக்கு ஏன் மதுவின் மீது அவ்வளவு கோபம்?
எனக்கு மட்டும் இல்ல சார். தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தக் கோபம் வரணும். மதுவினால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் என் சமுதாயம் என் கண்முன்னே நாசமடைவதை எப்படி என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? மதுவினால் மானம் இழந்தவர்கள் எத்தனை பேர்? தந்தையை இழந்தவர்கள் எத்தனை பேர்? கணவனை இழந்த என் வயதையொத்த பெண்கள் எத்தனை எத்தனை பேர்? மதுவினால் எத்தனை விபத்துகள். எவ்வளவு பிரச்னைகள்? ஒரே வரியில் சொல்வதானால் எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமே மதுதான். இதை ஒழிக்காத வரை நம் தமிழகம் ஒருக்காலமும் முன்னேறாது.
உங்கள் போராட்டத்தின் பின்புலம் என்ன..?
(நந்தினி பதில் சொல்லத் தொடங்குமுன் அவருடைய தந்தை ஆனந்தன் குறுக்கிட்டு “ஸார்.. இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்றேனே..என்று தொடர்ந்தார்)
நான்தான் என் மகளுக்கு உந்துசக்தி. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றினேன். ஓய்வு பெற 15 ஆண்டுகள் மீதமிருக்கும்போதே விருப்ப ஓய்வு பெற்று சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 18 ஆவது வயதில் அரசுப்பணியில் சேர்ந்தேன். அப்போதிருந்தே அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். தொழிற்சங்க ஈடுபாடு ஏற்பட்டபோது சமுதாயப் புரிதல் எனக்கு அதிகமானது. வேளாண் துறை என்பதால் கிராம மக்களின் வாழ்வை மிக அருகிலிருந்து கவனித்து வருகிறேன். கிராமங்கள் நசிந்து வருகின்றன. இளைஞர்கள் அடித்தளத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். கலாச்சாரச் சீரழிவு பெருகத் தொடங்கி விட்டது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து குடிகார மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த அரசு திட்டம் தீட்டியது. மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தால்தான் அரசின் அநியாயங்களை
 யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். அதனால் அரசே ஊத்திக் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் போராட்டக் களத்திற்கு என் மகளோடு வந்தேன். என் மகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.
நந்தினி நீங்கள் உங்கள் தந்தையுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றீர்களே..! அந்தப் போராட்டப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்…!
மது அரக்கனை ஒழிக்க வேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வை முதலில் மேற்கொண்டோம். குடியினால் தந்தையை இழந்த 100 குழந்தைகளை அழைத்துக் கொண்டி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு விரிவாய் கடிதம் எழுதினோம். எந்தப் பதிலும் இல்லை. டிசம்பர் 24 ஆம் நாள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள். எனவே முதல்வர் சென்னையில் இருப்பார் என்பதால் 23ஆம் தேதி நான் என் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்னைக்குக் கிளம்பினோம். அன்று மாலையில் நாங்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டோம். இரவு திருவெரும்பூர் காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். 25 ஆம் நாள் காலையில் விடுவிக்கப்பட்டோம்.
முதல்வர் கொடநாடு செல்வதால் நீங்கள் சென்னை வரவேண்டாம் என போயஸ் கார்டனிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. உண்ணா விரதம் மேற்கொண்ட நிலையிலேயே சென்னைக்கு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குரோம்பேட்டையில் மீண்டும் கைது செய்யப்பட்டோம். உண்ணாவிரதத்தினாலும் பயணத்தினாலும் நாங்கள் மிகவும் களைப்படைந்து இருப்பதால் அங்குள்ள மருத்துவமனையில் எங்களை வைத்தார்கள்.
அங்கிருந்து விடுதலையாகி கொடநாடு நோக்கிச் சென்றோம். செல்கின்ற வழியில் பெருந்துறையில் எங்களை மீண்டும் கைது செய்தார்கள். எங்கள் உண்ணாவிரதத்தையும் நாங்கள் விடவில்லை. பெருந்துறை மருத்துவமனையில் எங்களைச் சேர்த்தார்கள். பின்னர் 26 ஆம் தேதி எங்களை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சொல்லி அவர்கள் வாகனத்தில் எங்கள் இருசக்கர வாகனத்தையும் ஏற்றிக்கொண்டு நேராக மதுரைக்குச் சென்று எங்கள் வீட்டில் கொண்டு சேர்த்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் செல்லவில்லை. மீண்டும் திரும்பி மதுரை வைகை ஆற்றுப்படுகையில் எங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம். என்னுடைய இளைய சகோதரியும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டாள்.
மீண்டும் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். அப்போதும் உண்ணாவிரதம் 7ஆவது நாளாகத் தொடர்கிறது. எங்கள் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து என்னை திருச்சி பெண்கள் சிறையிலும், என் தந்தையை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தார்கள். அங்கு எங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் போராட்டத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு ஜாமீன் தர மறுத்தார்கள். இறுதியாக ஜனவரி11 ஆம் நாள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தோம்.
எங்கள் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி மண் வாரித் தூற்றும் போராட்டத்தை மேற்கொள்ளச் சென்றபோது சென்னை மெரினாவில் வைத்து நாங்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். மே3 ஆம் தேதி எனக்கு பரீட்சை இருந்ததால் நான் மே 1 ஆம் நாள் விடுவிக்கப்பட்டேன். என் தந்தையை மே 11 ஆம் நாள் விடுவித்தார்கள்.
ஜூன் 23ஆம் நாள் பழ நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தை மதுரையில் நடத்தினோம். மதுவை ஒழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். ஜூலை 29 ஆம் நாள் சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை முன்பு மது அரக்கி உருவபொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இத்தகைய போராட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா..?
Doxycycline online justify;”>
9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு மாணவர்கள் கூடக் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இச் சூழலில் மதுவுக்கெதிரான குரல் எழும்போதுதான் சமுதாயம் விழிப்புஉணர்வு அடையும். எங்கள் போராட்டங்களினால் ஓரளவு மக்களிடம் விழிப்பு உணர்வு வந்துள்ளது. மாற்றங்களை நோக்கித்தான் பயணிக்கின்றோம். நிச்சயம் ஒருநாள் மதுக்கடைகள் இழுத்து மூடப்படும். அந்த மாற்றத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
போராட்டங்களினால் மட்டுமே மதுவை ஒழித்துவிடமுடியுமா? மது ஒழிப்பிற்கான வேறு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?
மதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். indian penal code  ஐபிசி பிரிவு 328 இன் படி அரசு மதுவிற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா…? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் மது அருந்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த செய்தியை அண்மையில் படித்திருப்பீர்கள். பலாத்காரத்திற்குத் தூண்டுதலான மதுவை அரசுதான் கொடுத்திருக்கிறது என்றால் இந்தக் குற்றத்தைத் தூண்டிய வழக்கில் அரசையும் இணைக்க முடியும். தவறுகளைத் தடுக்க வேண்டிய அரசே சாராயம் விற்பதுதான் வேதனை. சட்டத்தை அரசே காலில் போட்டு மிதிக்கும்போது சட்டத்திற்குத்தான் என்ன மரியாதை? எங்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதுபோன்ற சட்டப்பூர்வ விளக்கத்தைப் போராட்டங்களின் மூலம் முன்னெடுத்து வைக்கின்றோம். எங்கள் போராட்டம் ஒரு நாள் மக்கள் போராட்டத்திற்குத் தூண்டும் என நம்புகிறோம். மக்களின் ஒருமித்த குரல் ஓங்கி எழும்போது இந்த நியாயமான குரலுக்கு அரசு ஒருநாள் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.
மதுவினால் அரசுக்கு வருமானம் வருகிறது. மதுவைத் தடைசெய்தால் வருமானம் தடைபடுமே என்ற காரணத்தைச் சிலர் முன்வைக்கின்றார்களே….!
மதுவினால் அரசுக்கு வருமானம் என்று தினமலர் பத்திரிகைதான் செய்தியைப் பரப்பிவருகிறது. டாஸ்மாக்கைக் காப்பாற்றுவதில் தினமலரின் பங்கு முக்கியமானது. அரசுக்கு வருமானம் என்பது மூளைச்சலவை. சாராயத்தைக் கொடுத்துக் கணவனிடமிருந்து காசு பறிப்பார்கள். வீட்டுக்கு ஆடு, மாடு கொடுப்பார்களாம். உங்களிடம் இலவசம் கேட்டது யார்? அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழியே இல்லையா? கிரானைட் கற்களைத் தனியார் சுரண்டி விற்கிறார்களே… அரசு கிரானைட், தாது மணல்களை எடுத்து வருமானம் பார்க்கட்டுமே…! ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடிக்கு குடிக்கிறார்கள் மக்கள். மதுவைத் தடைசெய்தால் அந்த 50ஆயிரம், 60ஆயிரம் கோடியைத் தொழிலில் போடுவார்கள். வீடு கட்டுவார்கள். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்தாலும் அது அரசுக்கு நன்மையைத்தானே தரும். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால் அரசுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். குடியினால் ஏற்படும் விபத்துகளில் அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு? குடியினால் குடல் வெந்து மருத்துவமனைகளில் செத்து மடியும் மக்களுக்கான மருத்துவச் செலவு எவ்வளவு? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் மதுவினால் அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதுதான் நிதர்சனம்.
இடதுசாரிகளும் மதுவை ஆதரிக்கின்றார்களே… கவனிக்கின்றீர்களா…?
யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் குற்றம் குற்றமே..! டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கூறுகின்றார்கள். இதில் தொழிலாளியின் நலம் எதுவுமில்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாற்றுப் பணிகளை வழங்கக் கோரி இருக்கலாம். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோருவது டாஸ்மாக்கை நிரந்தரப்படுத்து என்பதுதான் அதன் அர்த்தம். எந்தத் தொழிலாளி, பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ.. அவர்களின் அன்றாடக் கூலியை மதுவின் மூலம் அரசு வம்படியாகப் பிடுங்கிக் கொள்கிறது. மட்டுமில்லை உழைக்கும் வர்க்கத்தை நாசப்படுத்துவதும் இந்த மது அரக்கன்தான். மதுவை ஒழிக்க முன்வரவேண்டிய இடதுசாரிகள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது வேதனையானது. துயரமானது.
இந்தியா முழுவதிலும் தடை செய்தால்தான் தமிழகத்திலும் மதுஒழிப்பு சாத்தியம் என்பது சரியா..?
மதுவிலக்கு மாநில அரசு முடிவு செய்யவேண்டிய விஷயம். இந்தியாவில் தடைசெய்தால்தான் மாநிலத்திலும் தடை செய்வோம் என்றால் மாநில சுயாட்சிக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? 1971 வரை மது தடைசெய்யப்பட்ட மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்திக்கொண்டு அவருடைய கொள்கைக்கு எதிராக மது வியாபாரம் செய்கின்றனர். அ.தி.மு.க ஏதாவது திட்டம் கொண்டுவந்தால் அடுத்துவரும் திமுக அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடும். திமுக கொண்டுவந்த புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், உழவர் சந்தை, சமத்துவபுரம் என்று  எத்திட்டத்தையும் அடுத்து வரும் அதிமுக அத்தனை திட்டங்களையும் கடாசிவிடும். ஆனால் என்ன ஒற்றுமை பாருங்கள். மது விற்பதில் மட்டும் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை..! டாஸ்மாக்கைத் திறந்தது அதிமுக; அதற்காகவாவது திமுக அதை இழுத்து மூடியிருக்கலாம். கலைஞர்தான் மதுவிலக்கை உடைத்து மது ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்தவர். கலைஞர் கொண்டுவந்ததை அதிமுக ஆதரிக்கலாமா? அதற்காகவாவது மதுவைத் தடைசெய்திருக்கலாம் இல்லையா….!?
உங்கள் போராட்டத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எப்படி இருக்கின்றன..?
மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது. நான் படிக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். மதுவை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் வைகோ, தமிழருவி மணியன், டாக்டர் ராமதாஸ் போன்றோர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவிக்கின்றார்களே தவிர இதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டவில்லை. மதுவுக்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டாலே இந்த மதுவை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அரசியல்வாதிகள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்தானே….! எங்களுடைய போராட்டங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் கூட போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்களில் இச்செய்திகள் இன்னும் அழுத்தம் பெறுமானால் இது மக்கள் போராட்டமாக மாற வாய்ப்பு இருக்கின்றது. இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எங்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. கடந்த ஆண்டு முஸ்லிம் கட்சியின் தலைவர் ஒருவர் எங்களைச் சந்தித்து ரமளான் முடியட்டும். உங்கள் போராட்டத்தை நாங்கள் வீரியமாக்குகின்றோம் என்றார்கள். இதோ அடுத்த ரமளானும் வந்துவிட்டது. அவர்கள் வரவில்லை. எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதே வேளையில் இது தலையாயப் பணி இல்லையா..? நாங்கள்தான் முன்நின்று நடத்தவேண்டும் என்பதில்லை. தகுதியானவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும். எப்படியாவது மது ஒழிந்தால் சரி..!
மதுவை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று நம்புகின்றீர்களா…?
நிச்சயமாக…! மது இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். மதுவற்ற நாடாக இந்தியா மாறும். அதற்கான போராட்டவிதை என்றோ தூவப்பட்டு விட்டது. நாங்கள் அதில் இணைந்துள்ளோம். சமூக நலனிலும், நாட்டு நலனிலும் அக்கரை கொண்டவர்கள் ஒரணியில் இணையும் போது மதுவை இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் ஒழித்தே தீருவோம்.
சந்திப்பு: வி.எஸ்.முஹம்மது அமீன்  
நன்றி : சமரசம் ஜுலை 2014. 

Add Comment