சாதாரண பஸ்ஸில் எஸ்எப்எஸ் கட்டணம்: பயணிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

சாதாரண பஸ்ஸில் எஸ்.எப்.எஸ். பஸ் கட்டணம் வசூலித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், பயணிக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெருவைச் சேர்ந்தவர் பெத்து மாரியப்பன். இவர் 29.10.2008-ல் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்குச் சென்றார்.

அதே நாளில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண அரசுப் பேருந்தில் ஏறினார். தூத்துக்குடி செல்ல ரூ. 50 கொடுத்து நடத்துநரிடம் டிக்கெட் கேட்டார் பெத்து மாரியப்பன்.

எஸ்.எப்.எஸ். பஸ் என்பதால் தூத்துக்குடிக்கு பஸ் கட்டணம் ரூ. 60 என நடத்துநர் கூறினாராம். ரூ. 50 தான் தன்னிடம் உள்ளதாகக் கூறிய பெத்து மாரியப்பன், அருகில் இருந்த பயணி ஒருவரிடம் ரூ. 10 வாங்கி ரூ. 60 கொடுத்து நடத்துநரிடம் டிக்கெட் வாங்கினாராம்.

இதுகுறித்து பெத்து மாரியப்பன், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர், திருநெல்வேலியிலுள்ள பொதுமேலாளர் மற்றும் தூத்துக்குடி கிளை மேலாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் தராததால், அவர் தூத்துக்குடி online pharmacy no prescription நுகர்வோர் நீதிமன்றத்தில் இவர்கள் மூவருக்கும் எதிராக மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில் அவர் கூறியது: மதுரையில் இருந்து சாதாரண பஸ்ஸில் தூத்துக்குடிக்கு செல்ல ஏறினேன். நடத்துநர் என்னிடம் ரூ. 60 கட்டணம் வசூலித்து விட்டார். சாதாரண பஸ் கட்டணம் ரூ. 48தான்.

எஸ்.எப்.எஸ் பஸ் குறிப்பிட்ட இடங்களில்தான் நிற்கும். ஆனால், இந்த பஸ் எல்லா இடங்களிலும் நின்று வந்தது. இதனால், காலவிரையம் ஆனது. எனவே, சேவை குறைபாட்டுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

மனுவை நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பத்ர துளசி, லியோனார்டு வசந்த் ஆகியோர் விசாரித்து பெத்து மாரியப்பனுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ. 5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.

Add Comment