இறையச்சம் – வாழ்க்கை ஈஸியாகட்டும்!

‘வாழ்க்கை ஈஸியாக வேண்டுமா?’ என தங்கள் நிறுவன பொருளை உபயோகிக்க சொல்லும் Levitra online வாசகங்களை பார்க்கின்றோம். அவைகள் எல்லாம் துளியளவே உண்மையைக் கொண்ட விளம்பர யுக்திகள். தேவைகளே உருவானவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லும் சாகச வார்த்தைகள்.தேவைகளே இல்லாத இறைவன் நம் வாழ்க்கை பயணம் இலேசாக ஓர் அற்புதமான வழியை காட்டியுள்ளான்.

அது தான் ‘தக்வா’ எனப்படும் இறையச்சம்.

நம்பிக்கையாளர்கள் அடைய கூடிய பாக்கியங்களில் முதன்மையானதாக இறையச்சத்தை குறிப்பிடுகின்றார்கள் நபி பெருமானார் சல்லல்லாஹ் அலைஹிவசல்லம்.

இறைவனுக்கு யார் பயந்து நடக்கிறார்களோ அவருக்கு அவருடைய காரியத்தை அவன் இலேசாக்குவான் என்கிறது திருமறை குர்ஆனின் வேத வரிகள் (65:44)

“உங்கள் முன்பு ஒரு கதவும் அடைபடக் கூடாதென்ற விருப்பம் உங்களுக்கிருப்பின் இறைவனுக்கு பயப்படுங்கள். இறையச்சம் என்பதே சர்வ கதவுகளையும் திறக்கும் திறவு கோலாகும்” என்கின்றார்கள் மகத்தான இறைஞானி முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரஹ்). இதற்கு பயபக்தி உடையவர்களுக்கு அறியாப்புறத்திலிருந்து வாழ்வாதரங்கள் அளிப்பதாக கூறும் இறைவசனத்தையும் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வளவு அற்புதமான தக்வா – இறையச்சம் என்றால் என்ன?

சிங்கம், புலியை கண்டால் பயப்படுவது போன்ற பய உணர்வா?

இல்லை.

சர்வாதிகாரியான ஆட்சியாளனிடம் மக்களுக்குள்ள பயம் போன்றதா?

நிச்சயமாக இல்லை.

பின் எந்த வகை பயம் என்றால் காதல் நிறைந்த மனைவி தன் கணவனின் பிரியத்துக்கு ஏற்ப நடக்க முயலும் போது அவன் வெறுப்புக்கு ஆளாக கூடிய விசயங்களை தானும் வெறுத்து அதை விட்டு விலகும் மனோ நிலையை உவமை சொல்கின்றார்கள் ஆன்மீக பெரியார்கள்.

“இறை நம்பிக்கைக் கொள்ளல் என்பதன் விளைவாவது, ‘இறைவனை நேசித்தலும், அவனால் நேசிக்கப்படலும்’ என்னும் உண்மையை பல்வேறு இடங்களில் குர்ஆன் அழுத்தமாக கூறுகின்றது” என தன் புகழ் பெற்ற திருமறை விரிவுரையில் கூறுகின்றார் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

மனிதனை குறிக்கும் ‘இன்சான்’ என்ற வார்த்தைக்கு கண்மனி என பொருள். ஆன்மீகத்தில் மிகவும் ஆழமான பொருள் அதற்கு இருக்கிறது. அவன் இருப்புக்கு சாட்சியாக வந்த மனிதனுக்கு கண்மனி என்னும் காதல் பெயர் எத்தனை பொருத்தம்.

இறைவனின் காதல் கண்மனி – டார்லிங் நாம்.

இனி தக்வா என்பது காதல் பாதை என்பதை மனதில் கொண்டு அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

தக்வா எனும் சொல் விகாயத் ( பாதுகாத்து கொள்ளல்) என்னும் வேர் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இறைவன் வெறுக்கத் தக்க செயல்களை விட்டு தன்னை பாதுகாத்து கொள்ளுவது தான் தக்வாவின் அடிப்படை.

செய்யதினா உமர் (ரலி) அவர்கள் தக்வா என்றால் என்ன? என உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் கேட்டபோது “முட்கள் நிறைந்த பாதையில் நீங்கள் நடந்ததுண்டா?” என உபை(ரலி) அவர்கள் திருப்பி கேட்டார்கள். “ஆம் நடந்துள்ளேன்” என உமர்(ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள்.அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மறுபடியும் உபை(ரலி) அவர்கள் கேட்க, “சிரமப்பட்டு எச்சரிக்கையோடு நடந்தேன்” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த நிலை தான் தக்வா ஆகும் என உபை(ரலி) கூறினார்கள்.

நம் காதலுக்குரிய இறைவனுக்கு பொருத்தமற்ற விஷயங்கள் தான் உலக வாழ்வில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ‘முட்கள்’.

தக்வா என்பது நமது ஆன்மீக வளர்சிக்கு உதவும் மனோ நிலையாகும். ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆன்மாவும் தான் உலகில் பிறப்பதற்கு முன்பே தக்வா என்றால் என்ன என்ற விளக்கத்தை பெற்றவையாகத் தான் பிறக்கின்றன என்று கூறுகிறது வேத வரிகள். இது சரி! இது தவறு! என்னும் மனசாட்சியின் குரலில் அது எதிரொலிக்கிறது.
பயபக்தியாளர்களுக்கு நேர் வழி காட்ட வந்த அருட் கொடை தான் இறைவேதம்.

தக்வா என்றால் என்ன?

என் ஆன்மீக குருநாதர் தக்வா என்னும் இறையச்சம் என்பதற்கு விளக்கமாக இறைவனுக்கு பயப்படுவதும் அவனுக்கு பொறுத்தமற்றவைகளை விட்டு பேணுதலாய் இருப்பதுமாகும், இவ்விதமாக இறைவனுக்கு இணைவைப்பதை பயப்படுவதும். அதை விட்டு பேணுதலாய் இருப்பதுமாகும் என சொன்னார்கள்.

நாம் பொதுவாக இணைவைப்பை விட்டு நீங்கி விட்டதாக நினைக்கின்றோம் ஆனால் உண்மை நிலை மிகவும் சிந்தனைக்குரியது.

வானம், பூமியில் உள்ள அனைத்துக்கும் இறைவன் தான் உரிமையாளன் – உடமையாளன் (மாலிக்) என வாயால் சொல்கின்றோம். மனதால் ஒவ்வொருவரையும் உடமையாளராகத் தான் விளங்குகின்றாம். அதனால் நம் தேவைகளுக்காக படைப்பினங்களின் தயவையே நாடுகின்றோம்.

இறைவனைத் தவிர யாருக்கும் சக்தி இல்லை என்கின்றோம் ஆனால் ஒவ்வொரு சிருஷ்டியும் சுயமாக இயங்குவதாகத் தான் உணர்கின்றோம். அதனால் அவைகள் தன் தானே நமக்கு லாபமும் நஷ்டமும் தருவதாக உணர்கின்றோம்.

இறைவன் ஒருவன் தான் சுயமாய் இருப்பவன். அவன் தயவின்றி ஒரு நொடி கூட நாம் தனித்தில்லை.உயிர், அறிவு, நாட்டம், வல்லமை, பார்வை, பேச்சு, கேள்வி முதலிய பண்புகள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை. படைப்பினங்களுக்கு இந்த பண்புகள் இறைவனால் ஒரு இரவல் நிலையில் தான் வழங்கப்படுகின்றது. இதை எல்லாம் ஒப்புக் கொண்டாலும் வாழ்வின் இயந்திரகதியில் இதை எல்லாம் தெளிவாக அறியவோ, அறிந்ததை உணர்வாக்கிக் கொள்ள முயல்வதோ இல்லை.

என் பெயர் அமீன், இன்னாருடைய மகன், இவர்களின் தந்தை, இவரது கணவன் என்பதெல்லாம் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாகி விட்ட விஷயங்கள். ஆனால் மேற் கூறிய இறைவனைப் பற்றிய நம்பிக்கையில் நமக்கு அத்தகைய தெளிவும், உறுதியும் இல்லை.

இன்னும் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்பது போல் அலட்சியமாய் காலம் கடத்துகின்றோம்.

இறைவனுக்கு சொந்தமானதை சிருஷ்டிகளுக்கு சுயமாய் விளங்குவது தான் இணை வைப்பின் அஸ்திவாரம். அதிலிருந்து தப்புவது தான் தக்வா!.

“அன்பனே! உனக்கு இறையச்சம் (தக்வா) இல்லை என்றால் உலகில் அமைதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ளாதே!” என்கிறார்கள் சங்கைக்குரிய கௌதுல் அஃலம்.

“நான் அல்லாஹ்வை பயந்து நடந்த பிறகு எனக்கு திறக்கப்பட்ட மெய்ஞான தலைவாசல் அதற்கு முன்பு திறக்கப்பட்டதில்லை” என்கின்றார்கள் அபுபக்ர் ஷிப்லி (ரஹ்)

இறையச்சத்தை அடையும் வழியென்ன?

1.இறைவனைப் பற்றி அதிகம் அறிந்தவனும் நானே. அதனால் அஞ்சுபவனும் நானே என பெருமானார் குறிப்பிகின்றார்கள். அதனால் இறைவனைப் பற்றிய ஞானம் தான் இறையச்சத்தின் முதல் தேவை. “ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள்” (25:59)என்கிறது திருமறை. நபி வழியில் இறைஞானம் போதிக்கும் மெய்ஞானிகளை தேடி அடைய வேண்டிய கடமை நம்க்கிருக்கிறது.

2.நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் தோழமையின் பங்கு மகத்தானது என்பதால். நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்ற வரை இறையச்சத்துடன் வாழவும் நமக்கு தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின் தோழமை வாழ்நாளெல்லாம் நமக்கு தேவை என்பதை “நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனை அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் (சாதிக்கீன்களுடன் சேர்ந்து) இருங்கள்”(9:119) என்றும் வழிகாட்டுகிறது இறைவேதம்.

இறையச்சம் என்னும் ஒரே ஒரு அச்சத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதனால் நம்மை வாட்டும் சகல அச்சங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இறைவன் அருளால் என்றென்றும் இறையச்சம் நிறைந்து நம் வாழ்க்கை ஈஸியாகட்டும்.

Add Comment