4 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜ.கவுக்கு பின்னடைவு!

INDIA-ELECTION/

பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஏழு இடங்களில் மட்டுமே பா.ஜ.க வென்றுள்ளது.

Buy Levitra Online No Prescription justify;”>பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து விசாலமான மதச்சார்பற்றக் கூட்டணியை அமைத்திருந்தன. இதற்கு பலன் கிடைத்துள்ளது. 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை மதச்சார்பற்ற கூட்டணி வென்றுள்ளது. பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேடி) பார்பட்டா தொகுதியில் தோல்வியைத் தழுவியது. இந்த 10 தொகுதிகளில் 2010 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, 6-இல் பாஜகவும், 3-இல் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 1-இல் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றிருந்தன.

மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஆளும் ஐக்கிய ஜனதா தளம், இந்த இடைத்தேர்தலில், 20 ஆண்டு கால பகைமையை மறந்து லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கைகோத்ததுடன், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நார்கதியாகாஞ்ச், ஹஜிபூர், பங்கா, மொஹானியா ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்நகர், சாப்ரா, மொஹியுதின்நகர் ஆகிய தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பார்பாட்டா, ஜாலே தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது.பாகல்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பாகல்பூர் தொகுதியை பா.ஜ.கவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடந்த முறை பாஜக வசமிருந்த தொகுதிகளை தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தட்டிப்பறித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லாலு-காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பஹோரிபந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரணவ் பாண்டேயை விட 7,977 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செளரவ் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

ஜய்ராகவ்கர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சஞ்சய் பாடக் 53,397 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பஜேந்திர மிஸ்ராவை தோற்கடித்துள்ளார். அகார் தொகுதியில், பாஜக வேட்பாளர் கோபால் பார்மர் 27,102 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ராஜ்குமார் கோரை தோற்கடித்துள்ளார்.

பஞ்சாபில் மாநிலத்தில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சிரோமணி அகாலி தளம் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பாட்டியாலா(புறநகர்) தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரினீத் கவுர் சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் பகவான்தாஸ் ஜுனேஜாவை விட 23,282 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தல்வாண்டி சபோ தொகுதியில் சிரோமணி அகாலி தளம் கட்சி வேட்பாளர் ஜீத் மொஹிந்தர் சிங், காங்கிரஸ் வேட்பாளர் ஹர்விந்தர் சிங் ஜாஸ்ஸியை விட 46,642 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மூன்றில் இரண்டு தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜகவுக்கு ஓரிடம் கிடைத்தது.

சிக்கோடி தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கவடகிமடா மஹந்தேஷை காட்டிலும் 31,820 வாக்குகள் கூடுதலாகப் பெற்று காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கணேஷ் ஹுக்கேரி வெற்றி பெற்றார்.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்டுவந்த பெல்லாரி ஊரகத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஓபலேஷைக் காட்டிலும் 33,104 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜகவுக்கு ஓரிடம்: ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றார். இந்த வெற்றி பாஜகவுக்கு ஆறுதலைக் கொடுத்தாலும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாதது பா.ஜ.கவுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இடைத்தேர்தல் வெற்றி உற்சாகத்தைத் தந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.

Add Comment