இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல்-காய்தா

muslim_2104564f

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் போலியான உதவி இந்திய முஸ்லிம்களுக்குத் தேவையில்லை

அல்-காய்தாவின் தலைவர் அய்மான் அல்ஜவாஹிரி தமது 55 நிமிட வீடியோ உரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்: “அல்-காய்தாவின் கிளையை இந்தியாவில் தொடங்கவிருக்கிறோம். பர்மா, வங்கதேசம், அசாம், குஜராத், காஷ்மீர் ஆகிய இடங்களில் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் போராடப்போகிறோம். இஸ்லாமிய கிலாபத்தை நிறுவப்போகிறோம்.

” இந்தப் பேச்சு, நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், உளவுத் துறை ஆகியன இதுகுறித்துக் கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளன. அல்-காய்தாவின் அறிக்கையினால், இவர்கள் எல்லாரையும்விட அதிக ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர் முஸ்லிம் சமுதாயத்தினர்.

சோவியத் எதிர்ப்பால் பிறந்த அமைப்பு

1980-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் படையெடுத்தபோது, அவர்களை விரட்டுவதற்காக அமெரிக்க உளவுத் துறையின் தார்மிக, பொருளாதார, ஆயுத உதவியோடு தொடங்கப்பட்ட இயக்கமே அல்-காய்தா. ஒசாமா பின்லேடன் அதன் தலைவ ராக இருந்தார். ரஷ்யர்களை ஆப்கன் மண்ணிலிருந்து Amoxil No Prescription விரட்டியடித்ததும் அல்-காய்தாவுக்கும் அமெரிக்கா வுக்கும் பகை மூண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளானார் கள். அல்-காய்தா பயங்கரவாத வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்கள் நிகழ்த்தின.

இராக்கில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி, அங்குள்ள சிறுபான்மையினரையும் யஜீதிகளையும் ஷியாக்களையும் கிறித்தவர்களையும் கொன்று குவித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பும் இவர்களிடமிருந்து பிரிந்து சென்றதுதான். இப்போது இவ்விரு அமைப்புகளுக்கிடையே கடும் பகை நிலவிவருகிறது. இஸ்லாமிய கிலாபத்தை அமைத்துவிட்டோம் என்று உலக முஸ்லிம்களின் ஆதரவை, குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெற ஐஎஸ்ஐஎஸ் முயல்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வேகமான வளர்ச்சி அல்-காய்தாவுக்குப் பீதியை ஏற்படுத்தியது. அல்-காய்தா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, சரிந்துவரும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த அல்-காய்தா இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு ஆதரவு கிடைக்காது

அல்-காய்தா தனிமனிதர்களை உசுப்பி அதன் மூலம் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முயற்சிக்கக்கூடுமே தவிர, ஓர் அமைப்பாக இந்தியாவில் தடம்பதிக்க முடியாது. சர்வாதிகார, எதேச்சாதிகார, மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருப்பதால், அந்த நாடுகளில் அல்-காய்தாவுக்கு எளிதில் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால், இந்தியா போன்ற வலுவான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பன்மைச் சமூக அமைப்பு கொண்ட நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கிடைக்காது.

இந்திய முஸ்லிம்களும் பயங்கரவாத இயக்கங்கள் குறித்துத் தெளிவான பார்வையுடன் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் இஸ்லாமிய அறநெறிகளுக்கு முரணானது. ‘எவனொருவன் ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் மனித இனத்தையே கொலை செய்தவனாவான்’ என்கிறது திருக்குர்ஆன். அத்துடன் போர் தர்மங்களையும் தெளிவாக வகுத்துள்ளது இஸ்லாம். “போர்முனையில் இல்லாதவர்களை (பொதுமக்களை), முதியோர், குழந்தைகள், பெண்கள், மடங்களில் உள்ள துறவிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், இந்த பயங்கரவாதிகளோ பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவைப்பதையும், விமானங்களைக் கடத்துவதையும், பத்திரிகை நிருபர்களைக் கொலை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, இந்த பயங்கரவாதக் குழுக்கள் விளிம்பு நிலைக் குழுக்களாகச் செயல்படுகின்றனவே அன்றி, மையநீரோட்டத்தில் அவர்களால் இணைய முடியவில்லை. பயங்கரவாதத்தில் ஈடுபடாத அமைப்புகளே பெரும்பான்மை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நோயைவிட மருந்து மோசமாகலாம்

எகிப்தில் ராணுவ சர்வாதிகாரிகள் கடந்த 80 ஆண்டு காலமாக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட நிலையிலும், இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஜனநாயகப் பாதையிலேயே போராடிவந்தது கவனிக்கத் தக்கது. பயங்கரவாதம் ஒருபோதும் ஒரு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்த்துவைக்காது. மேலும் சிக்கலாக்கி, அந்தச் சமூகம் பழிப்புக்கும் நெருக்கடிக்கும் உட்படுத்தப்படும். நோயை விட மருந்து மோசமானது என்ற நிலையே உருவாகும். எனவே, அநீதிக்கு எதிராக நீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகள் தீரும். எனவே, அல்-காய்தாவின் இந்த அறிவிப்பினால் முஸ்லிம்களுக்குப் பாதிப்புகளே அதிகமாகும்.

பயங்கரவாதம் இந்திய மண்ணில் கால்பதிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம் தலைவர்களும், சமய அறிஞர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அதனை வன்மையாகக் கண்டித்துவருகின்றனர். இதன் காரணமாகவே முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத வலையில் விழாமல் காப்பாற்றப்பட்டனர்.

இந்திய அளவில் எதிர்ப்புகள்

அல்-காய்தா தலைவர் ஜவாஹிரியின் சமீபத்திய அறிக்கையையும் முஸ்லிம் தலைவர்கள் கடுமையாகவே எதிர்த்துள்ளனர். இந்தியாவிலுள்ள முக்கியமான 12 அமைப்புகளின் கூட்டமைப்பாக விளங்கும் ‘முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்’தின் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம் கூறியிருப்பதாவது: “இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் விசுவாசமான குடிமக்கள். அல்-காய்தா இங்கு கால்வைக்க முயற்சித்தால், அதனை முஸ்லிம்கள் வன்மையாக எதிர்ப்பார்கள்.

இந்திய முஸ்லிம்கள் இந்திய அரசியல் சாசனத்தினாலும், இந்தியச் சட்டங்களினாலும் பாதுகாப்புப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் போலியான உதவி தேவையில்லை. அந்த அமைப்பு மத்திய கிழக்கில் பெரும் அழிவையும், நிலையற்ற தன்மையையும் தோற்றுவித்துள்ளது. இவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் இவர்களின் சிந்தனையைப் பரப்புபவர்களைத் துரத்தியடிக்கும்படியும் இந்திய முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அப்துல் ஹபீஸ் பாரூக்கி “அல்-காய்தாவின் கொள்கை இந்திய முஸ்லிம்கள் மீது செல்வாக்குச் செலுத்த எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்ததும், முஸ்லிம்களின் செல்வாக்குப் பெற்றுள்ளதுமான தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமியப் பல்கலைக் கழகம் ஜவாஹிரியைக் கண்டித்துள்ளது.

அகில இந்திய மில்லி கவுன்சிலின் தலைவர் எம்.ஏ. காலித் “அல்-காய்தா எங்களின் நண்பர்களல்ல. அவர்கள் அப்பாவிகளைக் கொல்கின்றனர். இஸ்லாத்தின் பெயரில் கொலைகளைச் செய்து இஸ்லாத்தை இழிவுபடுத்துகின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் எதிரிகள். எங்களுக்கு அவர்களின் அனுதாபம் தேவையில்லை” என்று கூறுகிறார். “இந்துக்களே எங்களின் நண்பர்கள். சிறுபான்மையினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டபோது எங்களுக்காகப் போராடியவர்கள் அவர்களே” என்கிறார் உருது எழுத்தாளர் ஹஸன் கமால். அல்-காய்தா பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவே.

அரசு செய்ய வேண்டியது

அல்-காய்தாவின் நடவடிக்கை இந்தியாவில் ஊடுருவாமல் இருக்க உளவுத் துறையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பாவிகளை வேட்டையாடுவதால் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாது. அத்தோடு சிறுபான்மையினர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் போன்ற பலவீனமான மக்களின் பிரச்சினைகளைக் கிடப்பில் போடாமல் உடனுக்குடன் தீர்வு காண்பதாலும் பயங்கரவாதச் செயல்களின்பால் அவர்கள் கவரப்படுவதைத் தடுக்க முடியும்.

உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் பொய்க் காரணங்களைக் கூறி ஒரு நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும், தலையாட்டி பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கவும் அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும்.

கொடுமையான ஆட்சியாளர்களை மாற்றும் பொறுப்பு அந்த நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும். ஜனநாயகம் பேசிக்கொண்டே உலக சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் காப்பாற்றும் இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். இவர்களது இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் வெறுப்பும் விரக்தியும் கொண்ட இளைஞர்கள் பயங்கரவாதச் சிந்தனைகளுக்குப் பலியாகின்றனர். அரசு பயங்கரவாதமும் குழு பயங்கரவாதமும் ஒரு விஷச் சக்கரமாகும். இந்தச் சக்கரம் உடைக்கப்படுவதன் மூலமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.

கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர்,தொடர்புக்கு: kvshabib@yahoo.com

தி இந்து

Comments

comments

Add Comment