ஒரு மாத காலம் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் TNTJ அறிவிப்பு.

DSC_5163ஒரு மாத காலம் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் TNTJ மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அறிவிப்பு.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.

இதன் காரணமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் தீவிரவாத சமுதாயமாக, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக பொது மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வின் போதும் எல்லா முஸ்லிம் இயக்கங்களும் அதை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விடுகின்றனர். பள்ளிவாசல்களில் இதைக் கண்டித்து உரைகள் ஆற்றப்படுகின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் பிரமுகர்கள் இதற்காகக் கவலைப்படுகின்றனர்.

ஆனாலும் முஸ்லிம் சமுதாயமும் அதன் தலைவர்களும் இது போன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார்கள் என்ற உண்மை, ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில்லை.
முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதையும், முஸ்லிம்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுவதையும் சமுதாயம் சந்தித்து வருகிறது. தனியார் பள்ளிக் கூடங்களில் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவே கல்வி மறுக்கப்படுகிறது. பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான முகச்சுளிப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் மக்களையும், வார்த்தைகளால் வேதனைப்படுத்தும் மக்களையும் முஸ்லிம் சமுதாயம் சந்தித்து வருகிறது. பேருந்து, ரயில் பயணங்களில் கூட இது போன்ற நிலையை முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம் பெண்களும் கூட இதில் விதிவிலக்கில்லை.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பலருக்கு அரசு வழக்கறிஞர்கள் தான் நியமிக்கப்பட்டனர். சமுதாயம் அவர்களுக்கு உதவ மறுத்ததால் அரசாங்கமே வழக்கறிஞர்களை இலவசமாகச் செய்து கொடுத்ததை இதற்கு உதாரணமாக கூறலாம்.
தீவிரவாதச் செயல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது எனும் போது அது போன்ற செயல்களை முஸ்லிம்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது கூட முஸ்லிமல்லாத மக்களுக்குப் புரியவைக்கப்படவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தில் யுதம் தாங்கி நடத்தப்படும் ஜிஹாத் எனும் புனிதப் போர் தனி நபர்கள் செய்வதல்ல. ஒரு இஸ்லாமிய அரசாங்கம் தன் மீது போர் தினிக்கப்படும் போது நாட்டு மக்களைக் காப்பதற்காக நடத்தும் போரே ஜிஹாத் எனும் போராகும் என்ற உண்மை மறைக்கப்பட்டு சில மூடர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் இஸ்லாம் மார்க்கத்தின் செயலாகவும் பார்க்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்,

ஆனால் இஸ்லாமிய மார்க்கமும், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் இந்த தீவிர வாதச் செயல்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளனர். இஸ்லாம் என்பது அன்பு மார்க்கம். அது மனித உயிர்கள் மட்டுமல்லாமல் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் கருணை மார்க்கம், ஒரு உயிரை வாழ வைத்தவன் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போன்றவன். ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது ஒட்டு மொத்த உலக மக்களையும் கொலை செய்வதைப் போன்றதாகும் என்று திருக்குர்ஆன் மூலம் போதிக்கும் பக்தி மார்க்கம்தான் இஸ்லாம்.

இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை என்பதையும், முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதையும் முஸ்லிம் அல்லாத சமுதாய மக்களுக்குக் கொண்டு செல்லும் கடமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடமையை நிறைவேற்றும் முகமாக கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், மற்றும் கண்காட்சிகள் வாயிலாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய உள்ளோம்..

இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை ஒருமாத காலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், அனைத்து கிளைகளும் இந்த தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவார்கள்

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இதில் பங்கெடுத்து முஸ்லிம்கள் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதையும், இஸ்லாம் மார்க்கமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் பிற சமுதாய மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என முஸ்லிம் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறோம்

அல்-காயிதாவுக்கு இந்திய முஸ்லீம்களின் எச்சரிக்கை

மனித உயிர்கள் புனிதமானவை என்பது இஸ்லாத்தின் போதனை இதறக்கு எதிராகவும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் செயல்பட்டு வரும் அல்காயிதா இயக்கத்தை கண்டிப்பதுடன் முஸ்லீம்கள் அதன் கிளையை இந்தியாவில் எங்கும் அமைய விடாமல் அல்-காயிதாவை விரட்டியடிக்க வேண்டும்.

பில்லி, சூனியம் மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை

அப்பாவி பொதுமக்கள் மற்றும் பெண்களின் அறிவை மழுங்கடித்து அவர்களைப் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்றெல்லாம் கூறி ஏமாற்றி அவர்களின் சொத்துக்களையும், பெண்களின் கற்பையும் சூறையாடும் அனைத்து சமுதாயங்களிலும் உள்ள மந்திரவாதிகளையும், சூனியக்காரர்களையும் சமூக விரோதிகளாக அறிவித்து, வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என கூறினார். மேலும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வித்தைகளுக்கு அஞ்சாமல், இவை அறிவிற்கும், இறைநம்பிக்கைக்கும் எதிரானது என்பதை விளங்கி பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அரசுத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப் படுவதை கண்காணிக்க குழு அமைத்தல்

மத்திய மாநில அரசாங்கங்கள் இஸ்லாமியர் நலனுக்காக எத்தகைய திட்டங்களை தீட்டினாலும் அதன் பலன் சிறிதளவு கூட இஸ்லாமிய மக்களைச் சென்றடைவதில்லை. இஸ்லாமிய மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. எனவே இஸ்லாமியர் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் பெயரளவில் இல்லாமல் அதன் பலன் உண்மையில் மக்களைச் சென்றடைகிறதா? என்பதைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும்

இஸ்லாத்தைத் தழுவியோருக்கானஅரசுவேலைவாய்ப்பு

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாகக் கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை

சிறுபான்மையானாலும்,பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும்

இச் சந்திப்பின்போது மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், மாவட்ட தலைவர் செய்யதலி மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் மாவட்ட பொருளாளர் மைதீன், துணைத் தலைவர் செய்யது சுலைமான் துணைச் செயலாளர் ஜாகீர், அகமது மற்றும் கடையநல்லூர் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் செயலாளர் buy Amoxil online நிரஞ்சர் ஒலி பொருளாளர் மைதீன் துணைத் தலைவர் அப்துல் காதர் துணைச் செயலாளர் முகம்மது பிலால் மற்றும் அய்யூப்கான், அமீன், சிராஜ், குறிச்சி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்
இப்படிக்கு,

(ஆர். ரஹ்மத்துல்லாஹ்)
மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Add Comment