பெயரில்லாத ஒரு பூச்சியும் …. நானும் ( கவிதை – முடவன்குட்டி)

நீலச்சிறகுகள் விரிய
மிதந்தவாறே
பறந்துவந்தது அது …

வண்ணத்துப் பூச்சியா ..? வேறா..?
பகுத்து அறியும் வலையுள் வீழ்ந்தேன் –
கண் நழுவி காணாமல் போயிற்று…..

அ…. அதோ ..
புராதன கோப்புகள் தூங்கும்
அடுக்கொன்றின் மூலையில் –
சுண்டுவிரல் அகல இடைவெளியுள்
சில துளி இலைகள் ..
உலர்ந்த இலை நரம்புகள் .. என
கருக்கொண்டிருந்தது ஒரு கூடு.
எத்தனை நாள் உழைப்போ..? உயிர் தவிப்போ..?

கூட்டிற்கும்- வெளியே வில்வ மரத்துக்குமாய்
தடம் பதியாது
போவதும் – வருவதும்
வருவதும் – போவதுமாய்
வண்ணத்துப்பூச்சி;
சிற்றுயிர் ஒன்றின்
முழுவாழ்வுப் பெரும்பயணம்…!

“ஐயோ பூச்சி”
-அலறினார் சக ஊழியை;
“கடிச்சிடும்” “அடிச்சுக்கொல்லு”
இரைச்சல் அதிரலில்
“வேணாங்க…..”
என் முனகல்
விசும்பித் தேய-
“கோப்புகளை அகற்றி தூசு தட்டி
அடுக்கி வை; பூச்சி இருந்தா
ஒரு போடு போடு”-
பியூனுக்கு உத்தரவிட்ட ஹெட்கிளார்க்
கூடவே
“பூச்சியைப்புடிச்சு பாலூட்டி வளங்க..”-வென
எனக்கும் சொன்னார்;

மீண்டும் வந்தது
வண்ணத்துப்பூச்சி:
மனித அராஜகம் அறியாது
தனது கூடு தேடித்தேடி
காணாது-
தடுமாறிற்று.

தடுமாற்றம்
சற்றுச் சிறு கணம் தான்:
‘விருட்’ டென மேலெழுந்து
உயரப் பறந்தது.

நானோ-
ஹெட்கிளார்க் விட்டெறிந்த
வேடிக்கைச் சொல்லில் விஷம் கண்டு
கீழே கீழே
அழுந்தி புதையலானேன்.

– —- —– —– —– —— —– —– —– —-

இக்கவிதை Amoxil No Prescription ‘சமரசம்’ 1998-ஜனவரி இதழில்
வெளிவந்தது;
இப்போது
சில சொற்கள் சேர்ந்துள்ளன.
சில நீங்கி விட்டன.

.

Add Comment