அழுதவனைக் காணோம்

அழுதவனைக் காணோம்

சிதிலம் சிதிலமாக உடைத்து 

சின்னா பின்னமாக்கினார்கள்

செழுமையாய் நின்ற மஸ்ஜிதை 

செங்கல் செங்கலாய் பெயர்த்தார்கள்.

 

சினம் தீராது கொக்கரித்து

நூற்றாண்டுகள் கண்ட பள்ளியை

நாலே மணிகளில் தரைப்படுத்தினார்கள்… 

மறக்காமல் 

மடிந்த மஸ்ஜிதின் மண்மேட்டில் 

கொடியேற்றிக் கொண்டாடிய பின்னரே 

கிளம்பினார்கள்…

இறையில்லத்தை இழந்தவன்

டிசம்பர் ஆறு தோறும்

இழந்த உரிமைகளுக்காக அழுதான்

வீதிகளில் நின்று கூவி

கை முஷ்டி உயர்த்தினான்…

இடித்தவன் நாடாளுமன்றத்தின் நடுவில் 

நயமாக அமர்ந்து கொண்டான்…

உரிமைகள் பறிக்கப்பட்ட குடிமகனை

ஒண்ணு மண்ணான உறவுகளைப் பிரித்து

நீ தீவிரவாதி 

ஓடிவிடு அண்டை தேசம் 

எனக் கூறிவிரட்டினார்கள்…

அவனுக்கு

உதவிக்கரம் மறுத்தார்கள் 

வாசலில் நின்றவனுக்கு 

ஓசைப்படாமல் கதவுகளை சாத்தினார்கள்..

அவன் இழந்த உரிமைகளுக்காக 

எல்லா டிசம்பர் ஆறிலும்

தாய்மண்ணின் வீதியில் நின்று 

அழுது பின் ஒய்ந்து விடுவான்…

இன்று டிசம்பர் ஆறு

அவனுக்கு அழக்கூட பொழுதுகளில்லை…

ஒப்பாரி ஓசை ஒலிக்கவில்லை…

அவர்களை Buy cheap Doxycycline எங்கே?

ஆம்! அவர்களுக்கு உயிர் காக்கும் வேலை

ஆங்காங்கே துயர்துடைக்கக் கிளம்பி 

பெற்றோரையும் உற்றாரையும் நீங்கி 

பல நாட்களாய்…. 

ஆழி சூழ்ந்த 

பட்டணத்தில் அவன் பிணம் சுமக்கின்றான்

மரணக்குழியிலிருந்து மீட்டு சகமனிதனை 

ஆறுதலுடன் மேலே உயர்த்துகின்றான்

சுமக்கத் தோள்களைத் தருகின்றான் 

இரவுபகல் மறந்து உறவுகளைக் கண்டு

வெள்ளம் கடத்திவிடும் 

வள்ளமாய் நின்று வட்டமடிக்கின்றான்…

ஆயினும் 

கொஞ்சம் அழுகுரல் கேட்கிறதே 

யாருடையது?

உள்ளம் உடைந்து அழாமல் 

இந்த டிசம்பர் 6 ம் கடந்து செல்லவில்லை

இம்முறை பள்ளியை இழந்தவனுக்காக 

அவன் துயரம் உணர்ந்து

அவன் உறவின் புனிதம் நாடி

அந்தப் பள்ளியை எழுப்பவேண்டி  

இந்த மண்ணே அழுவது கண்டு

அவன் கொஞ்சம் ஆறுதல் கொள்கிறான்….

இறைவன் போதுமானவன் 

இனி எங்கள் பள்ளிவாயில்கள் 

உங்களின் பாதுகாப்புடனும்

சகோதரத்துவம் மேலோங்க 

சந்தேகமின்றி மண்ணில் அமையும்

அல்ஹம்துலில்லாஹ்…

– கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

Add Comment