பிரதமர் மோடி ஒரு கோழை மற்றும் மனநோயாளி” என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக கூறியுள்ளார்

தனது அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காட்டமாக விமர்சித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி ஒரு கோழை என்றும், மனநோயாளி என்றும் கூறியுள்ளார். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் மறைமுகமாக மோதல் நடந்து வருகிறது. அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் மூலம் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில் டெல்லி அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும், முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகத்திலும் Lasix No Prescription இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“5 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெல்லி அரசு டெண்டர் வழங்கியுள்ளது. இது குறித்த புகாரை விசாரிக்கவே உரிய அனுமதி பெற்று முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகம், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது” என்று சிபிஐ விளக்கம் அளித்தது.

ஆனால் முதன்மைச் செயலாளர் ராஜேந்தர் குமார் மீதான புகார் ஆதாரங்களை என்னிடம் அளித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ” அரசியல் ரீதியாக பிரதமர் மோடி என்னை எதிர்கொள்ள முடியாததால் இந்த கோழைத்தனமான நடவடிக்கையில் மோடி ஈடுபட்டுள்ளார். மோடி ஒரு கோழை மற்றும் மனநோயாளி” என காட்டமாக கூறியுள்ளார்.

இதனிடையே முதல்வர் ( கெஜ்ரிவால் ) அலுவலகம் சிபிஐ-யால் சீலிடப்பட்டதும், முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

” இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஓ பெரியன் கூறியுள்ளார்.

மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி, ” இது சரியான செயல் அல்ல” என்று கூறியுள்ளார்.

” இந்த சோதனை நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் கவுரவத்தை ஆக்கிரமிக்கும் மோடி அரசின் மேலும் ஒரு தரம் தாழ்ந்த நடவடிக்கை” என்று மார்க்சிச்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடி உள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்றும், இந்த சோதனை நடவடிக்கை கெஜ்ரிவாலுக்கோ அல்லது அவரது ஆட்சி நிர்வாகத்திற்கோ தொடர்புடையதல்ல என்றும் விளக்கமளித்தார்.

டெல்லி அரசில் உள்ள மற்றும் டெல்லி முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு எதிரான ஊழல் புகார் தொடர்பாக 14 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுவும் கெஜ்ரிவால் அலுவலகத்தில் அந்த அதிகாரி சேருவதற்கு முன் செய்ததாக கூறப்படும் குற்றம் தொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என ஜெட்லி மேலும் கூறினார்.

ஆனால் ஜெட்லியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று “கூட்டாட்சியை பாதுகாப்போம்!’ என முழக்கமிட்டதால், கூச்சல் குழப்பம் நிலவி, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நிதியமைச்சர் ஜெட்லி பொய் சொல்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ள கெஜ்ரிவால், தனது அலுவலக கோப்புகள் சிபிஐ அதிகாரிகளால் பார்வையிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரி ராஜேந்தர் அலுவலகத்தைதான் சோதனையிட்டோம் என்று கூறுவது சால்ஜாப்பு என்றும் கூறியுள்ளார்.

ஆனால் கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ” எதற்கெடுத்தாலும் பிரதமரை குற்றம் சாட்டுவது ஃபேஷனாகிவிட்டது. சிபிஐ ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு” எனக் கூறியுள்ளார்.

அதேப்போன்று பா.ஜனதா எம்.பி. விஜேந்தர் குப்தா, கெஜ்ரிவால் பிரதமருக்கு எதிராக அறுவெறுப்பான வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ. 13 லட்சம் பறிமுதல்

இதனிடையே ராஜேந்திர குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், இதில் 2.4 லட்சம் ரூபாய் ராஜேந்திர குமாரின் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ” அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவோ அல்லது சீலிடப்படவோ இல்லை. நீதிமன்றத்தில் இருந்து உரிய உத்தரவு பெற்றுதான் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு எதிராக கெஜ்ரிவால் தெரிவித்த கருத்து கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும்” என்றார்.

Vikatan

Add Comment