கடையநல்லூரில் திமுகவினரிடையே மோதல்

கடையநல்லூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக அபுபக்கர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடக் கூடாது. அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மதவாத பாரதிய ஜனதா கட்சி மத வெறியைத் தூண்டி மக்களை பிரித்து வருகிறது. அந்த பாஜகவை ஆதரிப்பவர் ஜெயலலிதா. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து செங்கலை அனுப்பியவர் ஜெயலலிதா. இந்துமத வெறியர்களுக்கு துணைப் போனவர் ஜெயலலிதா என்றார். இளங்கோவன் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது சில திமுக தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டனர். இதனால் கோபமடைந்த அவர் காரில் ஏறி வேகமாக புறப்பட்டு சென்றார். அவருடன் வேட்பாளர் அபுபக்கரும் புறப்பட்டார். அவரது காரை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த கூட்டத்துக்கு முன்பாக ரசாக்கை சிலர் தாக்கினர் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் திமுக நிர்வாகிகளுடன் அடிதடியில் இறங்கியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. தேர்தல் பணிகள் தொடர்பான கோஷ்டி பிரச்சனையே இந்த மோதலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திலிருந்த போலீஸார் இருதரப்பையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

oneindia.com

Add Comment