“பாலஸ்தீன் அரபுகளுக்கே சொந்தம்” – மகாத்மா காந்தி!

பாலஸ்தீன் நெருக்கடி குறித்தும் ஜெர்மனியில் யூதர்கள் மீது இழைக்கப்பட்ட அக்கிரமங்கள் குறித்தும் என்னுடைய கருத்தைக் கேட்டு ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இந்தக் கடினமான பிரச்சினை தொடர்பாக என்னுடைய கருத்துக்களை வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இல்லை எனச் சொல்ல முடியாது.

எனது அனுதாபங்கள் எல்லாமே யூதர்களுக்கே. தென் ஆபிரிக்காவில் நான் கழித்த காலத்திலிருந்து யூதர்களை நெருக்கமாக அறிந்து வந்துள்ளேன். சில யூதர்களுடன் என்னுடைய நட்பு இன்று வரை தொடர்கின்றது. இந்த யூத நண்பர்கள் மூலம் காலங்காலமாக அவர்கள் மீது இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை அறிந்துகொண்டேன். அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கிறார்கள். தீண்டத் தகாத மக்கள் மீது இந்துக்கள் இழைத்த கொடுமைகளுக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. தீண்டத் தகாத மக்கள் மீதும் யூதர்கள் மீதும் இழைக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற கொடுமைகளுக்கு மத அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. யூதர்களின் நட்பு மட்டுமல்ல, உலகெங்கும் யூதர்கள் மீது காட்டப்படுகிற அனுதாபமும் அவர்கள் மீதான எனது அபிமானத்துக்குக் காரணமாகும்.

ஆனால், யூதர்கள் மீதான எனது அனுதாபம் என்னைக் கட்டிப் போடவில்லை. நீதிக்கு முரணான அவர்களின் நடத்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. யூதர்களுக்கு ஒரு தேசிய இல்லம் (தனி நாடு) வேண்டும் என்ற முழக்கத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் இதற்கான அங்கீகாரத்தைப் பைபிளில் காட்டுகிறார்கள். எங்கு பிறந்தார்களோ, எங்கு பொருள் சம்பாதித்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தந்த நாடுகளை தமது சொந்த நாடாக அவர்கள் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? உலகெங்கும் எல்லா நாட்டு மக்களும் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்..! ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து எப்படிச் சொந்தமோ, பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் எப்படிச் சொந்தமோ அப்படித்தான் பாலஸ்தீனும் அரபு மக்களுக்கே சொந்தம். அரபுகள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனித விரோதமானதுமாகும்.

இன்று பாலஸ்தீனில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது? அவற்றில் யாதொன்றையும் எந்தவொரு தார்மீக நெறிமுறையின் படியும் நியாயப்படுத்தவே முடியாது. அங்கு நடத்தப்பட்டு வரும் அட்டூழியங்களை எந்நிலையிலும் ஏற்றுகொள்ளவே முடியாது. பாலஸ்தீன் முழுவதையோ அல்லது அதன் பகுதியோ யூதர்களுக்குத் தந்துவிட்டு கண்ணியம் மிக்க அரபுகளை அவமானப்படுத்துவது மனித குலத்துக்கு விரோதமான குற்றமாகவே கருதப்படும். இதற்கு மாற்றமான நன்மையான அணுகுமுறை ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அது இன்று உலகெங்கிலும் எந்தெந்த நாடுகளில் பிறந்து, வணிகம் புரிந்து வாழ்ந்து வருகிறார்களோ அந்தந்த நாடுகளிலேயே அவர்கள் நியாயமாகவும் நீதியுடனும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவது தான். பிரான்ஸில் பிறந்த கிறிஸ்தவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருப்பதைப் போல பிரான்ஸில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சுக்காரர்களே!

‘எங்களுக்குப் பாலஸ்தீன் தான் வேண்டும், பாலஸ்தீனத்தைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்குச் சொந்தமல்ல’ என யூதர்கள் முரண்டு பிடித்தால் உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் அவர்கள் செட்டிலாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்த நாடுகளில் இருந்தெல்லாம் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை ஏற்றுகொள்வார்களா அல்லது ‘எங்கு வேண்டுமானாலும் வாழ்வோம் இரண்டு நாட்டுக் குடியுரிமையும் வேண்டும்’ என இவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

இவர்கள் தனிநாடு வேண்டும் என வாதாடுவதற்கு ஆதாரமாக முன்வைப்பது ஜெர்மனியில் இவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த கதைகளைத்தான். இந்த ஜெர்மன் கொடுமை ஈடிணையில்லாததுதான். ஆனால், அதற்காக அப்பாவிப் பாலஸ்தீனர்கள் தான் பலிக்கடா ஆக்கப்பட வேண்டுமா? மனிதகுலத்துக்கான நன்மைக்காக ஒரு போரை நியாயப்படுத்த முடியும் என்றால், அது ஜெர்மனிக்கு எதிரான போராகத்தான் இருக்க முடியும். ஆனால், எந்தவொரு போர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆக, அப்படிப்பட்ட போருக்கான சாதக பாதகங்களை அலசுவது எனது வேலையாகாது.

யூதர்கள் மீது இழைத்த கொடுமைகளுக்காக ஜெர்மனி மீது போர் தொடுக்கவே முடியாது எனில், குறைந்த பட்சம் ஜெர்மனியுடன் எத்தகைய உறவும் இருக்கக்கூடாதுதான். நீதி, ஜனநாயகத்துக்காகப் பாடுபடுகின்றோம் என முழங்குகின்ற நாட்டுக்கும் (இங்கிலாந்து) அந்த இரண்டுக்கும் வெளிப்படையான விரோதி என அறிவிக்கப்பட்ட நாட்டுக்கும் இடையே உறவு எப்படி மலரும்? அல்லது இங்கிலாந்து ஆயுதபாணி சர்வாதிகாரத்துவப் பக்கம் நெருங்குகின்றதா? இரட்டை வேடம், இரட்டைத் துலாக்கோல் போன்ற இடர்பாடுகளின்றி மனிதநேயப் போர்வையுடுத்துகின்ற பலவீனம் இன்றி அப்பட்டமாக வன்முறையையும் அராஜகத்தையும் கட்டவிழ்ப்பது எப்படி என்பதை ஜெர்மனி உலகுக்கு உணர்த்தியுள்ளது. எந்தவித மூடு மறைப்புமின்றி, சால்ஜாப்பு சாக்குப்போக்கும் இல்லாமல், வார்த்தை ஜாலங்கள் எப்படி பயங்கரமாக இருக்க முடியும் என்பதையும் அது உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்தத் திட்டமிட்ட, வெட்கமற்ற அராஜகத்தை யூதர்களால் எதிர்க்க முடியாதா? திக்கற்றவர்களாகி விட்டோம் என்கிற உணர்வுக்காளாகாமல், சுயமரியாதையைக் கட்டிக் காப்பாற்ற வழியே இல்லையா? உயிர் துடிப்புள்ள, இறைவன் மீது நம்பிக்கை உள்ள எந்தவொரு நபரும் விரக்தி அடையவோ நாதியற்றுப் போனோம் என வருத்தப்படவோ தேவையில்லை. யூதர்களின் ஜெஹோவா கடவுள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்களின் இறைவனைப் போன்றவரே. அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அவருக்குத் துணையில்லை. Buy Amoxil Online No Prescription அவரை விவரிக்க வார்த்தைகளும் இல்லை.

தாங்கள் வழிபடும் கடவுளுக்கு மேன்மை மிகு சிறப்புக்கூறுகள் இருப்பதாகவும், அவன் தங்களின் எல்லாச் செயல்பாடுகளையும் நிருவகிப்பதாகவும் நம்புகின்ற யூதர்கள் நாதியற்றுப் போனோமே என நிராசையடையக் கூடாது. நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்து அங்கேயே வாழ்பவனாக இருந்தால், நான் ஜெர்மனியையே எனது தாய்நாடாக அறிவிப்பேன். எவ்வளவு வலுவான ஜெர்மனியன் வந்து என்னை எதிர்த்தாலும் “என்னைச் சுட்டுத் தள்ளு அல்லது மரணக்குழியில் வீசு. ஆனாலும் எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்” எனச் சவால் விடுவேன். நாடுகடத்தப்படவும் அல்லது பாரபட்சமாக நடத்தப்படவும் அனுமதிக்கவே மாட்டேன். இதற்காக மற்ற யூதர்களும் என்னோடு சேரும்வரை நான் காத்திருக்கமாட்டேன். ஆனால், இறுதியில் எல்லாரும் என்னுடைய உதாரணத்தைப் பின்பற்றுவார்கள் என உறுதியாக நம்புவேன்.

பாலஸ்தீனில் இருக்கிற யூதர்களுக்குச் சில வார்த்தைகள். அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. பைபிளில் சித்திரிக்கப்பட்ட பாலஸ்தீனுக்கு புவியியல் சான்றோ வடிவமோ இல்லை. அது அவர்களின் இதயங்களில் இருக்கிறது. இப்போதைய பாலஸ்தீனம்தான் அவர்களின் சொந்த நாடு என அவர்கள் நம்பினால், பிரிட்டிஷ் துப்பாக்கிகளின் நிழலில் அவர்கள் அதற்குள் நுழைவது தவறானதாகும். துப்பாக்கித் தோட்டாக்களுடனோ வெடிகுண்டுகளுடனோ ஒரு மதச் சடங்கை செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அரபுகளின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொண்டு அவர்களது அனுமதியுடன் வேண்டுமானால் பாலஸ்தீனில் குடியேறட்டும். அவர்கள் முதலில் அரபுகளின் இதயங்களை வெல்லட்டும். யூத இதயத்தை ஆளுகின்ற இறைவன் தானே அரபு இதயத்தையும் ஆளுகின்றான்!

அவர்களது மத விழைவுக்கு உலகமும் ஆதரவளிக்கும். அரபுகளோடு இணக்கமாகப் போவதற்கு நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அவர்கள் செய்ய வேண்டும். உடனடியாக பிரிட்டிஷ் துப்பாக்கிகளின் உதவியைக் கைவிட வேண்டும். எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைக்காத மக்களை பிரிட்டிஷாரோடு சேர்ந்து சூறையாடுவது தகுமா?

அரபுகளின் அத்துமீறல்களை நான் ஆதரிக்கவில்லை. அரபுகளும் தங்கள் நாட்டின் மீதான தேவையற்ற ஆக்கிரமிப்பை தடுத்து முறியடிப்பதற்கு வன்முறையற்ற அமைதியான வழிமுறைகளை மேற்கொண்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால், அரபுகள் மீதான கொடுமைகளும் அராஜகங்களும் எல்லை மீறிப்போன நிலையில், அரபுகளின் கிளர்ச்சியை விமர்சித்து ஒன்றும் சொல்ல முடியாது.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனத் தங்களைக் குறித்துச் சொல்லிக் கொள்ளும் யூதர்கள் பூமியில் தங்களுக்குச் சொந்தம் எனச் சொல்லிக் கொள்கிற பிரதேசத்தை அடைவதற்கும் வன்முறையற்ற அமைதியான வழிமுறைகளை மேற்கொள்ளட்டும். அதுவே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதற்குப் பொருத்தமானதாக இருக்கும். பாலஸ்தீனம் உட்பட எல்லா நாடுகளும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அதற்கு வழிமுறை வன்முறை அல்ல. அன்பான சேவை தான்.

சிசில் ரோத் எழுதிய ‘பண்பாட்டு யூதர்கள் அளித்த பங்களிப்புகள்’ என்கிற நூலை ஒரு யூத நண்பர் எனக்கு அனுப்பியுள்ளார். உலகில் இலக்கியம், கலை, இசை, நாடகம், அறிவியல், மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளைச் செம்மைப்படுத்த யூதர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை அந்த நூல் விளக்குகிறது. யூதர்கள் மேற்கத்தேய உலகின் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வெறுத்தொதுக்கப்படலாம் அல்லது செல்லப் பிள்ளைகளாகச் சீராட்டப்படலாம். இரண்டுமே யூதர்களின் கையில் தான் இருக்கின்றது.

இறைவனால் வெறுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொள்வதைத் தவிர்த்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தவர்களாக அமைதியான வழிமுறைகளை மேற்கொண்டு உலகின் மரியாதையையும் கவனத்தையும் ஈர்க்கலாம். அவர்களது பங்களிப்புகளின் மணி மகுடமாக வன்முறையற்ற செயலையும் அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

(ஆதாரம்: ஹரிஜன் 26-11-1938) – நன்றி: “அல் வஹ்தா”-2004

Add Comment