ஜெயலலிதா காலில் விழுந்த அரசு அதிகாரிகள் தூக்கி எறியப்படுவார்களா?

ஜெயலலிதா காலில் விழுந்த அரசு அதிகாரிகள் தூக்கி எறியப்படுவார்களா?

முதல்வர் ஜெயலலிதாவின் காலைத் தொட்டு வணங்கிய அரசு அதிகாரிகளை தூக்கி எறிய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் தருவாயில், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த தகவல் வெளியானதும், முதல்வர் ஜெயலலிதாவை அரசு உயர் அதிகாரிகள் போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, வாழ்த்து தெரிவித்து, பூங்கொத்துகளை கொடுத்த பல அதிகாரிகளும், கேள்விக்குறிபோல் முதுகை வளைத்துத்தான் அவற்றைக் கொடுத்தனர்.இதில் சில அதிகாரிகள் இன்னும் ஒருபடி மேலேபோய், அதிமுக கட்சிக்காரர்களைப் போல ஜெயலலிதாவின் முன்பு குனிந்து, தரையை தொட்டு கும்பிட்டனர். சிலர் கும்பிட்ட கைகளை, கண்களில் ஒற்றிக்கொண்டனர்.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மற்றும் சுப.வீரபாண்டியன் போன்றோர் டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கண்டனம் தெரிவித்தனர்.

சுப.வீரபாண்டியன் கூறுகையில், “அதிமுகவினர், ஜெயலலிதா காலில் விழுவது அவர்களின் பிறப்புரிமை. அதை பற்றிப் பேசவில்லை. ஆனால் அதிகாரிகள் காலில் விழும் அளவுக்கு தமிழகம் சென்றுவிட்டது சரியில்லை” என்றார்.கனகராஜ் பேசுகையில், “உலகம் வளர்ச்சியடைகிறது என்றால் என்ன? நாகரீகத்தை பற்றியான பேச்சுதான் வளர்ச்சி. முன்பெல்லாம் துண்டை கக்கத்தில் இடுக்குவது, செருப்பு அணியாமல் நடப்பது போன்ற ஆதிக்க கெடுபிடிகள் தமிழகத்தில் இருந்தன. அதையெல்லாம் மீறித்தான் நாகரீகம் வளர்ந்துள்ளது. இந்த காலகட்டத்திலும், தனது காலில் விழுவதை ஒருவர் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்பது புரியவில்லை. இது தன்மான பிரச்சனையில்லையா?ஜெயலலிதாவின் காலில் விழுந்த இந்த அதிகாரிகள் மக்களுக்கு எப்படி நியாயம் பெற்றுத் தர முடியும்? எனது பிரச்சனையை எப்படி அவர்களிடம் சென்று சொல்லி தீர்வை எதிர்பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.“அரசு அதிகாரிகள் என்பவர்கள் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். முன்பு ஒருமுறை, மாவோயிஸ்டுகளை அடக்க ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தபோது, எல்லையை பாதுகாப்பதுதான் எங்கள் வேலை; மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சண்டைபோடுவது எங்கள் வேலை இல்லை என ராணுவம் கூறியது.நாகரீக உலகம் சில நேரங்களில், தலைமை சொன்னாலும்கூட, அநியாயத்திற்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தும் சக்தி அதிகாரிகளிடம் இருக்க வேண்டும். காலில் விழவைத்து, மனிதரை கேவலப்படுத்தும் செயலை செய்வோர் நாகரீக உலகத்தைப் படைக்க முடியும் என்று எப்படி நம்ப முடியும்?எனவே, இந்த விஷயத்தை சாதாரணமாக எடுக்க முடியாது. காலில் விழுந்த அதிகாரிகளுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும். அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். அதிகாரிகள் நடந்த முறையையும், முதலமைச்சர் அதை நிராகரிக்காத நிலையையும் பார்த்தால் தமிழகம் மோசமான நிலையை அடையும் என்பது தெளிவாகிவிட்டது” என்றும் கனகராஜ் சாடினார்.

Add Comment