தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன.

தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன.

ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக உருப்பெற்றது. இந்த அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேமுதிக, தாமாகா வோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும், ஆட்சிக்கு வந்தால் எதற்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற தெளிவான பார்வையோடும், கூட்டணி ஆட்சி என்னும் முழக்கத்தோடும் மாற்று அரசியல் பேசியது.

இரு கட்சிகள் மீதும் வெறுப்பும், அதிருப்தியும் கொண்ட மக்கள், இந்த அணியை நம்பிக்கையோடு பார்க்கத் துவங்கினர் என்பது உண்மை. தங்கள் கட்சியிலிருந்து இந்த கூட்டணி பக்கம் மக்கள் திரும்பி விடக் கூடாது என்னும் நோக்கத்தோடு, தனக்கே உரிய அரசியல் தந்திரத்தோடு திமுக, உடனடியாக மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் ‘பீ’ டீம் என முத்திரை குத்தியது. அதிமுகவின் மீது காலம் காலமாய் வெறுப்பு கொண்ட தங்கள் கட்சியின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் மக்கள் நலக் கூட்டணி நோக்கித் திரும்புவதை, ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விடும் உத்தி அது. ஓட்டுகளைப் பிரித்து அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் நோக்கம் இருப்பதாக இழிபடுத்துவதால், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியல் குறித்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என்பதும் அவர்களின் செயல் திட்டமாக இருந்தது.

தமிழக அரசியலில் ஒரு மாற்று உருவாவதை விரும்பாத முதலாளிகளும், முதலாளித்துவ ஊடகங்களும் இயல்பாய் திமுக, அதிமுகவுக்கு ஆதரவாய், தங்களுக்குண்டான ஆக்டோபஸ் கரங்களோடு செயல்பட்டனர். இந்த கூட்டணியின் தலைவர்களில் வைகோவிடம் இருந்த உணர்ச்சி வசப்படும் போக்கு மற்றும் விஜய்காந்த்திடம் காணப்பட்ட உடற் கோளாறுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, திரும்பத் திரும்ப அவைகளை மட்டுமே பேசியும், காட்டியும் அவர்களை கோமாளிகளாக சித்தரித்தனர். தனிநபர்கள் மீது கட்டமைக்கிற பிம்பங்களே, மக்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது என்னும் புரிதலில் இருந்து இந்த உளவியல் ரீதியான தாக்கத்தை இடைவிடாமல் செய்தனர். இதிலும் மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த மாற்று அரசியல் சிந்தனைகளை வீழ்த்தும் நோக்கமே இருந்தது.

தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட மதவெறி பாஜகவும், ஜாதி வெறி பாமாகவும், இனவெறி நாம் தமிழரும் திமுக, அதிமுகவுக்கு தாங்களே மாற்று என்று பிரச்சாரங்களில் பேசினர். மக்களிடம் ‘மாற்று அரசியல்’ குறித்த சிந்தனைகளில் குழப்பங்களையும், தயக்கங்களையும் ஏற்படுத்துவதற்கு இந்த சூழலும் காரணமாய் இருந்தது.

அடுத்து களம் இறக்கி விடப்பட்டன கருத்துக் கணிப்புகள். சில கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாகவும், சில கருத்துக் கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருந்தன. எதிலும் மாற்று அரசியல் பேசியவர்களுக்கு இடமேயில்லாமல் இருந்தது. இதுவும் திட்டமிடப்பட்ட செயலே. இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் வரும் என்ற நிலையை முன் வைத்ததால், இரு கட்சிகளிலும் உள்ளவர்களிடம் மாற்று அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்பதும், நம் பிரதான எதிரியை முதலில் வீழ்த்துவதுதான் இப்போதைக்கு சாத்தியம் என்பதும் படிய வைக்கப்பட்டது.
மாற்று அரசியல் முயற்சிகளை அரவமில்லாமல் ஓரம் கட்டும் வேலையை கருத்துக்கணிப்புகள் செய்தன.

இறுதியாக அடித்து வீழ்த்தியது பணம். குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் திமுகவும், அதிமுகவும் வெறி கொண்டு செயல்பட்டனர். பகிரங்கமாக திமுகவும் அதிமுகவும் மக்களுக்கு பணத்தை வாக்களிக்க கொடுத்தனர். கடைசி இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் அந்த இரு கட்சிகளுக்கும் நாடி நரம்பெல்லாம் ஓடிக்கொண்டு இருக்கிறது, மக்கள் சாய்ந்து விட்டனர். மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த மாற்று அரசியல் எழுந்து நிற்கவில்லை.

மிகத் துரித காலத்தில், அவசரம் அவசரமாக எல்லாம் நடந்தேறி இருக்கின்றன. சட் சட்டென்று மக்களின் கவனத்தை சிதைக்கவும், திசை திருப்பவும் வல்லமை கொண்ட முதலாளித்துவ அமைப்பில் இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படுகிறது. அதிசயங்கள் எப்போதாவதுதான் நிகழும்.

ஆனால், எந்த தடவையும் போல் இல்லாமல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மாற்று அரசியல் குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் முடிந்த வரையில் பேசப்பட்டு இருக்கிறது. உரையாடல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. விதைகள் தூவப்பட்டு இருக்கின்றன. அவை மக்களிடம் எங்கோ ஒரு ஓரத்தில் தங்கி இருக்கவேச் செய்யும். இதுதான் எல்லோருக்குமான நம்பிக்கை.

ஆட்சியில் இருந்து, அதிகாரத்தில் அமர்ந்துதான் மக்கள் நலக் கூட்டணி தாங்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கையை அமல் படுத்த வேண்டும் என்பதில்லை. அந்த அறிக்கையில் தாங்கள் முன்வைத்த நல்ல அம்சங்களை, மக்கள் நலத் திட்டங்களை தெருவில் மக்களைத் திரட்டி நடத்தும் போராட்டங்களின் மூலமும் நிறைவேற்ற முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை வஞ்சிக்கிற போது, முழு வீச்சோடு களத்தில் நின்று போராடி அவைகளை முறியடிக்கவும் முடியும். போராட்டங்களே சிந்தனைகளுக்கு நீர் வார்க்கும். தேர்தலின் போது, விதைத்த விதைகள் மண்ணுக்கு மேல் முளை விட ஆரம்பிக்கும்.

மக்கள் நலக் கூட்டணி தொடர்வதும் இயங்குவதும்தான், தேர்தலின் போது அவர்கள் மீது வீசப்பட்ட பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் பதில் சொல்லும். மிக முக்கியமாக அவர்கள் முன்வைத்த மாற்று அரசியலை மக்கள் முழுமையாக நம்பத் தொடங்குவர். இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது. ’எங்கள் நோக்கம் உன்னதமானது, நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்வோம்’ என்னும் தொல்.திருமாவளவனின் வார்த்தைகள் அதற்கான வாசலை திறந்து வைக்கட்டும்.

Add Comment