மதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு

படிப்படியான மதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு
********
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, பதவியேற்ற முதல் நாளிலேயே தமிழக மக்களின் பிரதான கோரிக்கையான மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் நோக்கில், முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடல், மதுக்கடைகளின் நேரத்தை குறைத்தல் போன்ற முக்கிய கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க செயலாகும். மதுவால் தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் முதல்வரின் இந்த பாராட்டுதலுக்குரிய நடவடிக்கையின் காரணமாக, லட்சக்கணக்கான குடும்பத்தினர் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் இந்த நடவடிக்கையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றேன்.

அதேப்போன்று, மற்றொரு முக்கிய பிரச்சனையான சிறு, குறு விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இயற்கை பேரழிவு, மழை பொய்த்தல் காரணமாக போதிய விளைச்சல் இல்லாமல், பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுப்பெற்றுவரும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் 31-ந் தேதிவரை சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பும் விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வை தந்துள்ளது.

மேலும், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் ரத்து, கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் ரத்து, வீடுகளில் 100 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை ஆகிய உத்தரவுகளிலும் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். முதல்வரின் இந்நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Add Comment