குஜராத் கலவரத்தில் எம்.பி.உள்பட 69 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 24 பேர் குற்றவாளிகள்

குஜராத் கலவரத்தில் எம்.பி.உள்பட 69 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
IMG-20160603-WA0000

அகமதாபாத் – குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி.உள்பட 69பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது. குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ரயில் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ வைப்பு அதிகாலையில் நடந்ததால் அந்த ரயில் பெட்டியில் இருந்த இந்து கரசேவகர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இதில் 59 கரசேவர்கள் கடுமையான தீயில் தப்பிக்க முடியாமல் கருகி உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும், பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிகேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 9 இடங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை சிறப்பு புலனாய்வு குழுவிசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதில் குல்பர்கா சொசைட்டி என்ற முஸ்லீம்கள் அதிகம் வசித்த பகுதியில் நடைபெற்ற படுகொலை மிக முக்கியமானதாகும். இந்த சொசைட்டியில் குடியிருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி இஷான் ஜாப்ரி என்பவர் உள்பட 69பேரை வன்முறை கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கை கடந்த 2009ம் ஆண்டு முதல் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்த வழக்கில், 65பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் பிபின் படேல் என்பவர் பா.ஜ.கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் ஆவார். விசாரணை கால கட்டத்தில் 5பேர் இறந்து விட்டார்கள். மற்ற 60பேர் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது. இந்த வழக்கில் மே 31ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 60பேர் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அவர்களில் 24பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். பா.ஜ. கவுன்சிலர் உள்பட 36பேர் விடுவிக்கப்பட்டார்கள். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

-குறிச்சி சுலைமான்

Add Comment