தோழிமார் கதை… (தமிழில்- கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்)

1437187465244521300தோழிமார் கதை… (தமிழில்- கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்)

அமெரிக்காவின் தென்மாநிலமான அர்கன்சாஸில் வெள்ளைக்கார கிறித்தவர்களின் மகளாகப் பிறந்து அங்கேயே வளர்ந்து வந்தேன். இஸ்லாமியர்களிடம் நிறமோ இனமோ கொண்டு பாகுபாடு காட்டுவதில்லை என்பதை அறிவேன் அல்லாஹ் புகழுக்குரியவன்.I நான் எங்கள் நாட்டில எங்களின் பண்ணை வீட்டிலேயே வளர்ந்தேன். எங்களின் தந்தை அப்பண்ணையில் பணிசெய்துகொண்டும் அங்குள்ள பிதா சுதன் பரிசுத்த ஆவி எனும் மும்மைக்கொள்கை போற்றும் தேவாலயத்தில் மதபோதகராகவும் பணியாற்றிவந்தார்.

என் தாய் வீட்டில் உள்ள பணிகளை செய்து எங்களைக் கவனிப்பார். ஈமேரிக்காவின் அர்கன்சாசில் பண்ணை வீட்டில் மதபோதகரான தந்தைக்கும் வீட்டுப்பணிகளைக் கவனிக்கும் அன்பு நிறைந்த பெற்றோருக்கும் பிறந்தவள் நான். நான் அவர்களின் நேசத்துக்குரிய ஒற்றை மகள்.

நாங்கள் வாழ்ந்த அந்த நகரில் வேற்று கறுப்பர்களையே காண முடியாத படிக்கு முழுக்க முழுக்க நாங்கள் வெள்ளை ஆங்கில கிறித்தவர்களே வாழ்ந்து வந்தோம். சுற்றியுள்ள இருநூறு மைல்கள் வரை வேற்று நிறத்தவரையோ இனத்தவரையோ காண முடியாத நான் அந்தப் பண்ணையிலேயே எனது கல்லூரிக் காலம் வரை வெளியுலகம் அறியாமல் வாழ்ந்துவந்தேன்…

இறைவனின் முன் உயர்வு தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிநிகர் சமானமானவர்கள் என எனக்குப் போதிக்கப்பட்டாலும் பின்னர் நான் அனுபவத்தால் என்னை சுற்றியுள்ளவர்களின் நடைமுறை வாழ்வியல்களால் அது உண்மையில்லை என என்னால் உணரமுடிந்தது.

முதன் முதலாக வெளியுலகம் நோக்கிய எனது பயணத்தில் கல்லூரிக் கல்விக்காக அர்கன்சாஸ் பல்கலைக் கழகத்தின் மடியில் விசித்திரமாக ஆடையணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை வியப்பு மாறாமல் ஒருநாள் கண்டேன். பொட்டலம் கட்டியது போல தன் உடலை முழுக்கப் போர்த்திய வண்ணம் அங்கு அமர்ந்திருந்த அந்தப் பெண் அருகில் சென்று அமர்ந்து அவளிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். என் மொத்த வாழ்க்கையும் பின்னர் வேறு மாதிரியாக மாற அவளே காரணமாவாள் என்பது எனக்கு அப்போது தெரியாது.

அந்த அரேபிய மங்கையை என்னால் ஒருபோது மறக்கவே முடியாது. பாலஸ்தீனை சேர்ந்த யாஸ்மின் எனும் பெயர்கொண்ட என் வகுப்பறைத் தோழி அவள். மணிக்கணக்கில் அவளருகில் அமர்ந்து, அவள் தனது உயிரைப் போல நேசிக்கும் அவளது ஊரை, உறவை, நாட்டை, நட்புகளை, வளர்ந்த மண்ணை, மனித உறவுகளை, என கண்கள் பனிக்க அவள் பேசக் கேட்டுக் கொண்டே இருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் பிரியத்துக்குரிய இஸ்லாம் பற்றி அவள் சில நேரம் பேசுவதை ஆவலுடன் கேட்பேன். ஒரே இறைமை, நபித்துவம், நபிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் என அவள் மேன்மையாகக் கருதும் இஸ்லாம் சார்ந்த காரியங்களில் நம்பிக்கைகளில் அவளது ஈடுபாடு எனக்கு மேலும் அவளின் பால் ஈர்ப்பை தந்தது.

அவள் இந்த உலகிலான வாழ்க்கையை விட, மறு உலக வாழ்வுக்காக தன்னை நேர்மையாக்கி வாழப் பழகிக்கொண்டவள். என் சக தோழியரில் அவளை மட்டுமே நான் வேறுபடுத்திக் கொள்ளும் வண்ணம் அமைதியானதும் நியாயமானதுமாக அவளின் வாழ்வியல் அமைந்திருந்தது.

ஒரு நாள் அவள் என்னிடம் அமீரா! (ஆம் அவள் என்னை அமீரா என்று தான் அழைப்பால். அரபியில் அமீரா என்றால் இலவரசியாமே. பின்னர் நான் இஸ்லாமை தழுவிய போது அந்தப் பெயரையே என் அடையாளமாக அவள் நினைவுடன் பெருமைப் படுத்தும்படி சூட்டிக் கொண்டேன். உண்மையில் நான் இலவரசியல்ல, இஸ்லாம் ஒவ்வொரு பெண்ணையும் இளவரசியாக உணரவைப்பதை இன்று அனுபவித்து உணர்கிறேன்) நான் பாலஸ்தீன் செல்கிறேன், அங்கே என் தாய் மண்ணில் நான் வாழப் போகிறேன். உன்னைவிட்டுப் பிரிகிறேன். வசந்தமான நம் நட்பு நாட்களை நினைக்கிறேன். இனி நாம் எப்பொழுது சந்திக்கப் போகிறோமோ எனத்தெரியாமல் தவிக்கிறேன். ஒரு வேளை நீயும் இஸ்லாத்தில் இருந்திருப்பின் நாளை ஒருநாள் ஆலமே அர்வாஹில் உன்னை தேடிக் கண்டுபிடித்து, என் அருகில் உன்னை அமர்த்தி, ஆசை தீர மேலான சொர்க்கத்தில் உன்னுடைய அண்மையில் வாழ்ந்திடும் பாக்கியம் கிட்டியிருக்கும் என என்னிடம் ஆவலுடன் அங்கலாய்த்தாள்.

இரண்டு வாரங்கள் கழித்து நிம்மதியாக வாழவேண்டி தன் தாய்மண்ணுக்கு சென்ற என் தோழி யாஸ்மின் அங்கு இஸ்ரேலிய படை வீரன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டு அவளது ஊரில் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தபோது ஒரு குழந்தையைப் போல கண்ணீர் சிந்திப் பதைபதைக்க மட்டுமே என்னால் முடிந்தது.

அவள் என்னுடன் இருக்கும் போது இங்கே அமெரிக்காவில் நிறைய அரபு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். குர்ஆனின் வரிகளை மென்மையாக மனதை வருடும் வண்ணம் ஓதும் கிராஅத்களைக் கேட்கும் வாய்ப்புகள் கிட்டும். கேட்கையில் மனமே இலேசானதாக உணர்வேன். இப்பொழுது அது அறவேயில்லாமல் போனது எனக்கு. கொஞ்சம் பதியப்பட்ட டேப்களை வாங்கி வந்து கிராஅத்களைக் கேட்க ஆரம்பித்தேன் மனம் சாந்தியும் சமாதானமுமாக நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை பக்குவப்படுத்த முயன்றேன்.

என் கல்லூரி வாழ்க்கை முடிந்தபின் நான் எனது ஊருக்கு எங்களது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டேன். எனது இஸ்லாமின் மீதான தேட்டமும் தாகமும் என்னை விடாது துரத்த, அங்கே எனது வீட்டிலும் நான் இஸ்லாமியம் சார்ந்த வாசிப்புக்களை வேதவரிகளை உச்சரிக்கும் டேப்களை ஓடவிட்டுக் கேட்பதைத் தொடர்ந்த போது, அங்கு எல்லோரும் என்னிடம் நிகழ்ந்த மாற்றங்களை கண்டு கொஞ்சம் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். வீட்டுக்குள்ளேயே தொழுகை செய்யவும் குர் ஆன் வாசிக்கவும் ஆரம்பித்த நான், சட்டப்ப்பூர்வமாக April 15, 1996 அமீரா எனும் யாஸ்மீன் எனக்கிட்ட செல்லப் பெயரையே எனது பெயராக சூட்டிக் கொண்டு இஸ்லாத்தில் என்னை முழுமையாக நுழைத்துக் கொண்டேன். அறிந்த பொழுது.. என்னை என் பெற்றோர் அவர்களின் உறவு வட்டத்திலிருந்து முழுமையாகக் கைகழுவி விட்டார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவளாக அதுவரை அவர்களால் பிறரிடம் அறிமுகப் படுத்தப்பட்ட நான், பின்னர் பைத்தியக்காரி என்று அனைவராலும் முடிவு செய்யப்பட்டேன்.

அல்ஹம்துலில்லாஹ்… நான் இவ்வுலகில் வெற்றியடைந்து விட்டேன்.

இன்னமும் என் உறவுகளை நான் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். அவர்களுக்காக என அனைத்து கையேந்தல்களிலும் கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன். எப்பவாவது என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் அவர்கள், பெரும்பாலும் என்னைத் திட்டி சாபமிட்டு மட்டுமே என்னுடன் தங்களின் நினைவுகளை மீட்டுக்கொள்வர்.

அல்லாஹ் போதுமானவன்.

சமீபத்தில் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த என் பெற்றோர், ஒரு இஸ்லாமிய நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒன்றில் என் மாமா சின்னாபின்னமாக சிதறிப்போனதாக சொன்ன போது நானும் உடைந்து அழுதுவிட்டேன். அநியாயமாகக் கொல்லப்பட்ட என் மாமாவின் வெடித்துச் சிதறிய உடலம் சிந்திய ரத்தம் என் கைகளில் இருப்பதாகவும், என் இஸ்லாமிய தீவிரவாதி நண்பர்களாலேயே அவர் கொல்லப்பட்டதால் அவரது மரணத்துக்கு நானும் ஒரு காரணம் எனவும் அவர்கள் சொன்னார்கள். சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களின் இந்த வார்த்தைகளால் வீழ்ந்து விட்ட நான், இஸ்லாத்தின் மீது வலிந்து பூசப்படும் இம்மாதிரியான அசிங்கங்களுக்காக அதன் மூலம் பலியாகும் அப்பாவி மக்களுக்காகவும் பலநாட்கள் கண்ணீர் சிந்திக் கரைந்தேன்.

இப்படிக்கு

உங்களின் அமீரா.

அர்கன்சாஸ்

ஐக்கிய அமெரிக்கக் குடியரசு.

நன்றி அரபு நியுஸ்

http://www.arabnews.com/node/930251/islam-perspective

Add Comment