பழைய யாவமா இருக்கியா? மறக்கலியா அந்தப்புள்ளய?…கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்.

மூன்று வருடங்களுக்கும் அதிகமாக, நீண்ட நாட்கள் மறுபூமியில் வாழ்ந்துவிட்டு தன் வீடு திரும்பியவனுக்கு, தன் சுற்றமும் நட்பும் தன்னைத் தேடி வந்து குசலம்விசாரித்து முகம் காட்டி மகிழ்ந்தபின், மாலையில் சுகாதாரம் கூட்டிப் போக வீட்டுக்கு வந்த நண்பன் நாகூர் மீரான் அவனுடன் புறப்படுவதற்கான காத்திருத்தலில்… இவன் தன்நண்பனிடம் மெல்லக் கள்ளச்சிரிப்புடன் காதருகில் கேட்டான்.
நாவூரு எம்புடு நாளாச்சு? மைமூனப் பாக்கணும்ன்னு தேடுதப்பா. இப்போம் சுத்தி அவ்வூட்டு வழியா மேக்க போவமெ?

அவன் கேக்கணும்ன்னு காத்திருந்தது போல இவன் சொன்னான். வாண்டண்டே… இப்பம் வாண்டாம். பெறாய்க்கி பாத்துக்கிடுவோம்.

எட்டுப் பத்துப் பேராக ஒரு குழுவாக மேற்கே செல்லும் இவர்களில் நாவூருன்னு அழைக்கப்படும் நாகூர்மீரான் தவிர அனைவரும் கடலுக்கு அப்பால் சபுராளிகளாக இருக்க, இன்னமும் விசா தேராமல் ஊரில் இருக்கும் நாகூர்மீரான் மட்டும் வரவும் போகவுமாயுள்ள நண்பர்களின் ஒரேகூட்டுக்காரன்.

கிழித்த வாழையிலைத் துண்டில் நண்பன் ஆர்டர் செய்து வந்த அல்வாவை நுள்ளி எடுத்து வாயிலிட்டவன் மெல்லச் சொன்னான்.
மசூது! நீ ன்னோம் பழைய யாவமா இருக்கியா? மறக்கலியா அந்தப்புள்ளய?
எதிர்பாராத இந்தக் கேள்வியால் கொஞ்சம் கவலையும் கலவரமுமாக ஏண்டே அப்டிக் கேக்க? என்றான்.
இல்லப்பா அந்தப்புள்ள இப்போம் வேற பெரிய இடத்துல பேசிப்போட்டாச்சுப்பா. மாட்டம்ன்னு சொல்லி அந்தப்புள்ள மொதல்ல கூட்டம் போட்டதாவும் அதுக்குப் பெறவு நல்ல மாப்ள திரில கெடந்து சாவ வாண்டாம், மாப்ள ஓதி.. கலியாணமுடிஞ்ச கையோடே குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் வெளியூர்ல வச்சுக்கிடப் போறார்ன்னு சொல்லி அந்தப்புல்லைட்ட பேசி சம்மதம் வேங்கிட்டாங்கோ….

பயணம் புறப்படும் முதல் நாள் இருவரும் பேசிவைத்தது போல ஊருணிப் பள்ளிவாசலின் குறுகிய சந்துக்குள் சட்டென தன்னைக் கடந்த அவளை, அவளது தோழிமார்களுடன் மருட்சியான விழிகளைக் கண்டவன்.. அவளிடம் பேசணும் என்பது போல சைகையில் உணர்த்த, புரிந்தும் புரியாமலுமாய் அங்கே தன் தோழிகளை கொஞ்சம் தள்ளி நிற்க வைத்துவிட்டு அவனது வரவுக்காக இருளில் காத்து நின்றவளை நெருங்கியவன் உணர்ந்தான்…

ஒரு இரண்டடி தூரத்தில் அவளது நடுக்கம் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது…
பரபரப்பும் பயமும் நெற்றியில் சுருண்டிருந்த அழகான மயிர்க்கற்றையில் நனைந்த ஈரமிக்க வியர்வையும் கன்னக் கதுப்பில் அப்பிய சிந்தூரச் சாயமுமாக வெட்டி வீழ்த்திப் படபடக்கும் கருவிழி கொண்டு நின்ற அவள்….
அவன் அவளைக் காணாத போது ஓரக்கண்ணால் கண்டு இப்போ பேசினாள் கொஞ்சம் கிசுகிசுப்பாக…
ன்னாங்கோ எனக்குப் பயமாருக்கு.
என்னன்னு சொல்லுங்க சடாருன்னு நாம் போணும்…

இவன் லேசாகக் கனைத்தவாறு, பயமும் நடுக்கமும் நீங்கி சொன்னான்.
நான் நாளைக்கி பயணம். இனிம ரண்டு மூணு வருஷம் கழிஞ்சு தான் ஊருக்கு வருவேன். ஒன்ன தான் எனக்கு தேடும். ஒன்னப்பாக்காம நான் என்ன செய்யப் போறமுன்னு எனக்கு தெரியலை. லேசாக கண்கலங்கியவனிடம் சிறிதுநேர மௌன இடைவெளிக்குப் பின் அவள் தயங்கி தயங்கி சொன்னாள்…

நீங்கோ பெய்ட்டுவாங்கோ.. கையிலிருந்த பூக்களை காட்டினாள். அவளது முகம் நோக்கியவனுக்கு அவள் கண்கலங்கியதை உணர முடிந்தது..
நானும் பளயாச பெய்ட்டு ஒங்களுக்கு துவா கேட்டுட்டு தான் வாறன்.
இத வாங்கிக்கோ ன்னு அவன் நீட்டிய அந்தப் பொதியில் ஒரு இருபது ரூபாய் பணம் பயணக் காசாக இருந்தது.
கிளம்பும் போது அவள் சொன்னாள்… “உயிரைக் கொடுத்தாலும் உங்களுக்கு வாக்கப்பட வேண்டி காத்திருப்பேன்”.

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்.

Add Comment